2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த அவரது 136 திரைப்படங்களில் அதுவரை யாரும் யோசித்திராத ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த திரைப்படமாகவும், வேற்று கிரகவாசிகளின் பூலோக வருகையை சித்தரிக்கும் முதல் விண்வெளி சார்ந்த திரைப்படமாகவும் வெளிவந்ததுதான் “கலை அரசி”. அறிவியல் புனைக்கதை திரைப்படங்களின் முன்னோடியாக வெளிவந்த இத்திரைப்படத்தில் பூலோகவாசி மோகன் என்ற கதாபாத்திரத்திலும், வேற்றுகிரகவாசி ஜெஸ்டர் என்ற கதாபாத்திரத்திலும் எம் ஜி ஆர் இரட்டை வேடத்திலும், வாணி, வள்ளி என்ற இரட்டை வேடத்தில் நடிகை பானுமதியும் நடித்திருந்தனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேலோங்கி இருக்கும் வேற்று கிரகம் ஒன்றிலிருந்து வரும் வேற்று கிரகவாசியான நடிகர் எம் என் நம்பியார், அவர்களது கிரகத்தில் இல்லாத கலாச்சார கலைகளான இசை, நடனம் ஆகிய கலைகளை வளர்க்க பூலோகவாசியான நடிகை பானுமதியைக் கடத்திக் கொண்டு அவர்களது கிரகத்திற்குச் செல்ல, பானுமதியின் காதலரான எம் ஜி ஆர் எவ்வாறு பானுமதியை அங்கிருந்து மீட்டெடுத்து பூலோகம் திரும்புகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
2018ம் ஆண்டு நடிகர் ரவிமோகன் நடிப்பில் விண்வெளி சார்ந்த அறிவியல் புனைக்கதையாக வெளிவந்த “டிக் டிக் டிக்” திரைப்படத்திற்கு முன்பாகவே, ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஏதும் இல்லாத 1960களின் முற்பகுதியிலேயே அப்போதிருந்த குறைந்தபட்ச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி சார்ந்த ஒரு அறிவியல் புனைக்கதையை எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய நம் தமிழ் திரையுலகின் ஓர் அரிய கலைப்படைப்பாக வந்ததுதான் இந்த “கலை அரசி”.
வேற்று கிரகவாசிகளின் பூலோக வருகை, அவர்களது ஆடை அணிமணிகள், கால்களில் அவர்கள் அணிந்திருக்கும் ஈர்ப்பு எதிர்ப்பு காலணிகள் (ஆன்ட்டி கிராவிட்டி ஷூ), கதிரியக்க துப்பாக்கி, அவர்கள் பயணிக்கும் விண்கலம் என ஒவ்வொன்றிலும் தீவிர கவனம் செலுத்தி, அப்போதிருந்த தொழில்நுட்ப வசதி கொண்டு, அற்புதங்கள் பல செய்து, படத்தின் ஒளிப்பதிவாளர் ஜே ஜி விஜயத்தோடு இணைந்து இயக்குநர் ஏ காசிலிங்கம் பார்வையாளர்களுக்கு காட்சிகளால் ஒரு விருந்தே படைத்திருப்பார்.
1963ம் ஆண்டு கருப்பு வெள்ளைத் திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படம் அன்று எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு புதிய யுகத்தைக் காட்டிய திரைப்படமாகத்தான் இருந்தது என்றாலும், அன்றைய நாளில் இத்திரைப்படம் ஒரு தோல்வித் திரைப்படமாகத்தான் அமைந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.