என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஒரு காலத்தில் கதாநாயக நடிகர்கள் ஆளுமையின் கீழ் இருந்த இந்த சினிமா உலகை, இயக்குனர்களின் களமாக மாற்றி, புது முகங்களை வைத்தே புதுமைகள் பல செய்து, படைப்பாளியின் படைப்புத் திறமை என்னவென்று கடைக்கோடி பாமரனும் அறியும் வண்ணம், படவுலகில் பற்பல உத்திகளைக் கையாண்டு புதுமை படைத்தவர்தான் 'புதுமை இயக்குநர்' சி வி ஸ்ரீதர். எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருபெரும் நடிகர்கள் மட்டுமே வண்ணத் திரைப்படங்களில் நடித்து வந்த அந்தக் காலத்திலேயே, “காதலிக்க நேரமில்லை”, “வெண்ணிற ஆடை”, “உத்தரவின்றி உள்ளே வா”, “அவளுக்கென்று ஓர் மனம்” என அடுத்தகட்ட நடிகர்களையும், புதுமுக நடிகர்களையும் வைத்து வண்ணப்படம் தயாரித்து, இயக்கி வெற்றி கண்டவர் இவர்.
கதை, பாடல், ஒளிப்பதிவு, வசனம், ஆடை வடிவமைப்பு, இயக்கம் என இவரது திரைப்படத்தில் வரும் ஒவ்வொன்றும் மற்ற திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு நவீன மயமாக்கலுக்கு உட்பட்டிருப்பதை படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களால் நன்கு உணர முடியும். 1960களிலேயே நவீன சினிமா உலகிற்கு நம் தமிழ் சினிமாவை மடைமாற்றம் செய்து வைத்த இந்தப் புதுமை இயக்குநரின் படைப்பாற்றலில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் “சிவந்த மண்”.
1969ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை முதன் முதலில் எம் ஜி ஆரை நாயகனாக வைத்து எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர் ஸ்ரீதர். இவரது “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் வெளிவந்த அந்த காலகட்டத்திலேயே, இந்தப் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்திருந்தார். அதன்படி எம் ஜி ஆரும் நடிக்கத் தொடங்கி, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் எம் ஜி ஆர் படத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட, மேலும் படப்பிடிப்பு தொடர முடியாமல் நின்று போனது. “அன்று சிந்திய ரத்தம்” என அப்போது பெயரிடப்பட்டிருந்த இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் சிற்சில மாற்றங்கள் செய்து, சிவாஜியை நாயகனாக வைத்து “சிவந்த மண்” ஆக்கித் தந்தார் இயக்குநர் ஸ்ரீதர்.
சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆல்ப்ஸ் மலை என வெளி நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் வண்ணத்திரைக் காவியமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “சிவந்த மண்”. படத்தின் பாடல்களைக் கவியரசர் கண்ணதாசன் எழுத, இசையமைத்திருந்தார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ஒரே பாடலில் வெவ்வேறு இசை மாற்றங்கள் செய்து தந்த “ஒரு ராஜா ராணியிடம்”, பெர்ஷியன் இசை வடிவில் தந்த “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை”, ஈபில் டவர் முன்பு படமாக்கிய “பார்வை யுவராணி கண்ணோவியம்”, “ஒரு நாளிலே”, “சொல்லவோ சுகமான கதை சொல்லவோ”, “முத்தமிடும் நேரமெப்போ” என அத்தனையும் செவிக்கு விருந்தளிக்கும் இனிமையான பாடல்கள்.
அதிலும் குறிப்பாக “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என்ற பாடலைப் பாட இயக்குநர் ஸ்ரீதரின் முதல் தேர்வாக இருந்தவர் பி சுசீலாதான். பின்னர் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன்தான் அந்தப் பாடலைப் பாடுவதற்கு எல் ஆர் ஈஸ்வரியை தெரிவு செய்து பாடவைத்திருந்தார். அதேபோல் “ஒரு நாளிலே” என்ற பாடல் கூட, பின்னணிப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவால் முதலில் பாடப்பட்டு பின்னர் டி எம் சவுந்தரராஜன் குரலில் பதிவு செய்து மாற்றப்பட்டிருந்தது. அழுத்தமான காதல் கதைகளையே தனது படங்களில் சொல்லி வந்த இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் அதிரடித் திரைப்படமாக வந்ததுதான் இந்த “சிவந்த மண்”. 1969ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்து ஓடி, வணிக ரீதியாக ஒரு பெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.