சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
காமெடி நடிகர் முத்துகாளை மகன் வாசன் முரளி பிளஸ்டூவில் 438 மார்க் எடுத்து பாஸ் ஆகி உள்ளான். மகன் பாஸ் ஆனதையொட்டி, பெரு மகிழ்ச்சி அடைந்த முத்துகாளை பால்கோவா வாங்கிக் கொடுத்து பாசத்துடன் மகனை வாழ்த்தியுள்ளார். அந்த போட்டோக்கள் இணைய தளங்களில் வைரல் ஆனது. பிளஸ் டூவில் தேர்வில் 438 என்பது அதிக மதிப்பெண் இல்லை, தவிர, அதென்ன பால்கோவா பரிசு என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், முத்துகாளையை நேரில் தொடர்பு கொண்டு பேசினோம்.
எனக்கு பெரிய கனவு
''சார், உங்களுக்கு இது சின்ன மார்க் ஆக தெரியலாம். பால்கோவா சாதாரண பரிசாக புரியலாம். ஆனால், எங்களுக்கு அது பெரிய விஷயம். எங்களை மாதிரி ஆட்களுக்கு பாஸ் ஆவது என்பதும், கல்லுாரிக்கு போவது என்பதும் பெரிய கனவு.
பி.லிட் படிச்சு முடிச்சேன்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கம்பட்டி. நான் சினிமாவில் ஆரம்பத்தில் பைட்டராக 30க்கும் அதிகமான படங்களில் பணியாற்றினேன். அவ்வளவு கஷ்டப்பட்டேன். பின்னர், நடிகராக மாறினேன். இப்ப 250 படங்களுக்கு நடித்து ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறேன். நான் அதிகம் படிக்கலை. படிப்புதான் முக்கியம்னு ஒரு கட்டத்துல புரிஞ்சுகிட்டு, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழத்துல படிக்க ஆரம்பித்தேன். முதல்ல பி.ஏ வரலாறு முடித்தேன். அடுத்து எம்.ஏ. தமிழ் படிச்சேன். அடுத்து பி.லிட் படிச்சு முடிச்சேன். இப்ப, பி.எச்டி பண்ண வேண்டும்ங்கிற ஆர்வத்துல இருக்கிறேன். எப்படி படிக்கப்போறேன் தெரியலை. என் வீட்டம்மா பிளஸ் 2 முடிச்சு இருக்காங்க.
438 எனக்கு பெரிய மார்க்
என் மகன் குடும்ப கஷ்டம் அறிந்து, என் சூழ்நிலை புரிந்து படிச்சான். சென்னை வட பழனி தனியார் பள்ளியில 438 மார்க் எடுத்து இருக்கிறான். அதிக மார்க், அது, இதுனு பெரிசா ஆசைப்படலை. எங்களுக்கு இதுவே பெரிய விஷயம். அவனை உற்சாகப்படுத்த, அவனுக்கு பிடித்த பால்கோவா வாங்கிக் கொடுத்தேன். எனக்கு நிலையான வருமானம் கிடையாது. நிறைய சிரமம். அதை மகன் புரிஞ்சுகிடுவான். எப்பவாவது பிரியாணி, பரோட்டோ கேட்பான். அதுவும், பணத்துக்கு நான் சிரமப்படக்கூடாதுனு நினைச்சு, சில நாட்களுக்கு முன்பே சொல்லிடுவான். ஒரே பையனாச்சே. நானும் எப்படியாவது வாங்கிக் கொடுத்திடுவேன்.
என் நிலை என் மகனுக்கு தெரியும்
இப்ப, பிளஸ் 2 பாஸ் ஆகிட்டான். நாங்க மார்க் பத்தி கவலைப்படலை. அடுத்து என்ன படிக்கலாம்னு யோசிக்கிறோம். சிலர் பி.ஏ படிக்க சொல்றாங்க. சிலர் பிபிஏ படிக்க அட்வைஸ் பண்ணுறாங்க. நான் காலேஜ் பக்கம் போகலை. என்ன படிக்கணும்னு ஐடியா இல்லை. நான் பைட்டர் யூனியன், நடிகர் சங்கத்தில் உறுப்பினர். எங்க உறுப்பினர்களுக்கு சென்னையில் 3 கல்லுாரிகளில் சீட் கொடுப்பாங்க. யூனியன்ல லட்டர் கொடுத்தால், அதை அந்த கல்லுாரி பரிசீலித்து சீட் தருவாங்க. சலுகைகள் கிடைக்கும். அதுக்காக சில கல்லுாரிக்கு அலைஞ்சிட்டு இருக்கிறேன். வேல்ஸ் காலேஜ் போகலாம், பி.ஏ படிக்கலாம்னு பையன் விருப்பபடுறான். அதுக்காக அவங்க ஆபீஸ் போயிட்டு வந்தேன். பி.ஏ முடித்தபின் மேற்படிப்பு என்ன படிக்கலாம்னு பையனே முடிவு செய்துகிடுவான். இப்ப உள்ள பிள்ளைங்க தெளிவாக இருக்காங்க. என் குடும்ப கஷ்டம், என் நிலை மகனுக்கு தெரியும். அதை உணர்ந்து, கல்வியின் அருமை உணர்ந்து நல்லா படிப்பான்னு நம்புறேன்.
கல்வி தான் ஏணிப்படி
எங்க குடும்பத்துல யாரும் காலேஜ் பக்கம் போகலை. டிகிரி வாங்கலை. என் மகன் வாசன் முரளி முதல் தலைமுறை பட்டதாரியாக ஆகப்போறான். அதை நினைத்தால் பெருமையாக இருக்குது. நான் ஒரு காலத்துல சைக்கிளுக்கு காத்து அடிக்க 25 பைசா இல்லாமல் கஷ்டப்பட்டேன். சினிமாவில் பைட்டராக நிறைய அடி உதை வாங்கி, நிறைய அவமானப்பட்டு சம்பாதித்தேன். என் நிலைமை என் மகனுக்கு வரக்கூடாதுனு நினைக்கிறேன். அதுக்கு ஒரே ஏணிப்படி கல்விதான். அவன் நல்லா படிச்சால், அவன் வாழ்க்கை நல்லா இருக்கும். அது அவனுக்கும் தெரியும்'' ' என்று உருக்கமாக பேசினார் முத்துகாளை.