மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் 'விடாமுயற்சி'. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் திடீரென தள்ளிப் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. 1997ல் வந்த ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன்' படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியதில் ஏற்பட்ட சிக்கல்தான் பட வெளியீடு தள்ளிப் போனதற்குக் காரணம் என்றார்கள்.
ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்கள் 150 கோடி வரை ரீமேக்கிற்கு விலை சொன்னதாகவும் தகவல் வெளியானது. அதன்பின் நடந்த பேச்சு வார்த்தையில் 40 கோடிக்கு வந்து, இறுதியில் சுமார் 20 கோடிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்ததாகச் சொல்கிறார்கள். அதற்கான அட்வான்ஸ் தொகையும் கொடுத்துவிட்டார்களாம்.
இப்படத்தின் கதைச்சுருக்கத்தை அஜித்தான் இயக்குனரிடம் சொல்லி திரைக்கதை அமைக்கச் சொன்னதாகத் தகவல் வெளியானது. அஜித் விருப்பப்பட்ட கதை என்பதால் அந்த ரீமேக் உரிமையை அவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்களாம். பிப்ரவரி 6ம் தேதி ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்க்கும்படிதான் 'விடாமுயற்சி' படத்தை எடுத்து முடித்துள்ளதாகத் தகவல்.