எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் திரையிசைக் கவிஞர்களில் தலைசிறந்த கவிஞராக பார்க்கப்படும் கவியரசர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் என்பது காட்சிக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்பதையும் தாண்டி, கால எல்லைக்குள் கட்டுப்பட்டு வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வியலோடு தொடர்புடைய பாடல்களாக இருந்ததால்தான் அவை காலம் கடந்து, இன்றும் நம்மால் போற்றப்படும் காவியப் பாடல்களாக நிலைத்து நிற்கின்றன.
தமிழ் இலக்கியம் அறியாதவர் கூட, இவரது பாடல்களைக் கேட்டால் இலக்கிய ஞானம் பெற்றுவிடும் அளவிற்கு, எளிய சொல்லாடலோடு, இலக்கியத்தின் சாரத்தை நம் இதயத்தில் இறக்கிவிடும் வல்லமை பெற்ற பாடல்களைத் தந்த ஒரு திரையிசைச் சித்தராகத்தான் காண்கிறது தமிழ் கூறும் நல்லுலகம். மெனக்கெடல் ஏதுமின்றி சொடுக்குப் போடும் நேரத்தில் மிடுக்கான பாடல்களைத் தருவதென்பது இவருக்கு கைவந்த கலை. அப்படி ஒரு பாடல் உருவானதைத்தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.
1964ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் கதை, வசனம் எழுதி தயாரித்திருந்ததோடு, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “கறுப்பு பணம்” திரைப்படத்தில், ஒரு நடிகை நடனமாடும் காட்சிக்கான பாடலை எழுத இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தியுடன் அமர்ந்து பாடலை எழுதத் தொடங்கினார். “கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி, கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட நடிகனடி” என்று கவிஞரிடமிருந்து பாடலின் பல்லவி பிறந்தது. பல்லவியை சொல்லிக் கொண்டிருந்தபோதே, வேறு ஒரு அவசர வேலை குறுக்கிட்டதால் எழுந்து வெளியே சென்று விட்டார் கவிஞர். வெளியே செல்லும் கவிஞரைக் கண்ட படத்தின் தயாரிப்பு நிர்வாகி, பாட்டை எழுதி முடித்துவிட்டதாக நினைத்து மறுநாளே பாடல் பதிவிற்கான கால்ஷீட்டையும் போட்டுவிட்டார்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் உட்பட இசைக்குழுவினர் அனைவரும் வந்து சேர்ந்துவிட, பாடல் எங்கே என்று கேட்டபோதுதான் பாடல் பல்லவியோடு நிற்பது தெரியவந்தது. உடனே தயாரிப்பு நிர்வாகி கவிஞரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச, ''ஆமா! ஞாபகம் வருது. பல்லவி மட்டும்தானே எழுதினேன்? கால்ஷீட் போட்டுட்டீங்களா? பரவாயில்லை, பல்லவியை படிங்க'' என கவிஞர் சொல்ல, தயாரிப்பு நிர்வாகி தொலைபேசியிலேயே படித்துக் காட்ட, அடுத்த வினாடியே கவிஞர் தொலைபேசியிலேயே பாடலின் மீதி வரிகளைச் சொன்னார்.
“பொய்யிலே நீந்தி வந்தால் புளுகனெல்லாம் தலைவனடி, பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி” என்று ஆரம்பித்து மொத்தப் பாடலையும் தொலைபேசியிலேயே சொல்லி முடித்தார் கவியரசர் கண்ணதாசன். தமிழ் திரையுலக வரலாற்றில் தொலைபேசியிலேயே பாடல் சொல்லப்பட்டு பதிவாகியது அதுதான் முதல் முறை. அதற்கு முன்பும் அப்படிப்பட்ட சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை. அதற்குப் பின்பும் யாரும் நிகழ்த்தியதுமில்லை. அதனால்தான் கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல்களாக என்றென்றும் நிலைத்திருக்கின்றன.