ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
1940ல் “சத்தியவாணி” என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்த எம் ஆர் ராதா, அதன் பின்பு சினிமாவை விட்டு விலகி, மேடை நாடகங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, நாடக உலகில் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு தனித்துவமிக்க நடிகராக கோலோச்சியிருந்தார். “ரத்தக்கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமி காந்தன்” போன்ற நாடகங்கள் இவரது புகழ் பெற்ற நாடகங்களில் குறிப்பிடும்படியானவை.
“பராசக்தி” படத்தின் தயாரிப்பாளரான 'நேஷனல் பிக்சர்ஸ்' பெருமாள், 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை திரைப்படமாக எடுக்க முன்வந்து, அந்நாடகத்தை எழுதியிருந்த திருவாரூர் தங்கராசுவையே படத்திற்கு திரைக்கதை வசனத்தையும் எழுத வைத்து படமாக்கினார். நாடகத்தில் ஏற்று நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெள்ளித்திரையில் 'நடிகவேள்' எம் ஆர் ராதாவை நாயகனாக்கி அழகு பார்த்தனர் படத்தின் இயக்குனர்களான இரட்டையர் கிருஷ்ணன்-பஞ்சு.
குடிகாரன், பெண் பித்தன் இறுதியில் தொழு நோயாளி… இந்த அறுவறுக்கத்தக்க கதாபாத்திரத்தில் 'நடிகவேள்' எம் ஆர் ராதா, தனக்கே உரிய தனித்துவமிக்க உடல் மொழியோடும், நக்கல், நய்யாண்டியுடன் கூடிய கரகரத்த குரலில், ஏற்ற இறக்கத்துடன் வசனம் பேசும் தனது குரல் வளத்தாலும், இன்று வரை அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து சிறப்பித்திருப்பார்.
“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்று பின்னணிப் பாடகர் சிதம்பரம் எஸ் ஜெயராமன் குரலில் பாடல் ஒலிக்க, பாடலின் இடையே, ஆம்! குற்றம் புரிந்தேன்! கொண்டவளைத் துறந்தேன்! கண்டவள் பின் சென்றேன்! என் வாழ்க்கையில் நிம்மதி ஏது? என்று 'நடிகவேள்' எம் ஆர் ராதா குரல் கொடுத்திருப்பது அந்தப் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்தையே வழங்கியிருக்கும். எஸ் எஸ் ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, எம் என் ராஜம், ஜே பி சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம், 1954ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு, 'நடிகவேள்' எம் ஆர் ராதாவின் கலைப்பயணம் என்ற மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாய் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.