சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தானபாரதி மற்றும் நடிகர் ஆர் எஸ் சிவாஜி ஆகியோரின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான எம் ஆர் சந்தானம், 1959ம் ஆண்டின் பிற்பகுதியில் ஓர் நாள், அப்போது பிஸியான வசனகர்த்தாவாக வளர்ந்து கொண்டிருந்த ஆரூர்தாஸ் அவர்களின் வீட்டிற்குச் சென்று, நானும் “மோகன் ஆர்ட்ஸ்” மோகனும் இணைந்து சிவாஜியின் அம்மா பெயரில் “ராஜாமணி பிக்சர்ஸ்” என ஒரு படக்கம்பெனி ஆரம்பித்து சிவாஜியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கின்றோம். கொட்டாரக்கரா என்ற மலையாள கதாசிரியரின் கதையை இயக்க இருப்பவர் ஏ பீம்சிங். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பிற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதுகின்றார்.
சிவாஜியுடன் இணைந்து ஜெமினிகணேசன், சாவித்திரி ஆகியோர் நடிக்க இருக்கும் இந்த அண்ணன் தங்கை பாசத்தை மையக் கருவாக வைத்து நகரும் குடும்பப் பாங்கான கதைக்கு நீங்க வசனம் எழுதினா மிக நன்றாக இருக்கும் என்பது சிவாஜி, ஜெமினிகணேசன், ஏ பீம்சிங் உட்பட படக்குழுவினர் அனைவரது விருப்பமாகவும் உள்ளது. ஆகவே நீங்கள் எங்களது அலுவலகம் வந்து கதையைக் கேட்டு, உங்களுக்கான அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டு பின் உங்கள் எழுத்து வேலையை ஆரம்பிக்கலாம் என கூறிச் சென்றார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம் ஆர் சந்தானம்.
அதன்படியே ஆரூர்தாஸூம் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் செல்ல, அங்கு அவருக்கு கொடுப்பதற்கு தயாராக வைத்திருந்த அட்வான்ஸ் தொகைக்கான கவரை படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான “மோகன் ஆர்ட்ஸ்” மோகன் அவரிடம் நீட்ட, அவர் பெற்றுக் கொண்டார். படத்தின் கதாசிரியரான கொட்டாரக்கரா கதையை அவரிடம் சொல்ல, பின் “பாசமலர்” படத்திற்கு அவரது வசனப்பணி ஆரம்பமானது. முதலில் இந்தப் படத்திற்கு “பாசமலர்கள்” என்று கவிஞர் கண்ணதாசன் பெயர் வைக்க, பின் அதில் கடைசி இரண்டு எழுத்துக்களை நீக்கி “பாசமலர்” ஆக்கினார் இயக்குநர் ஏ பீம்சிங்.
பதினேழாயிரம் பதினெட்டாயிரம் அடிகள் கொண்ட, ஏறக்குறைய இருநூறு காட்சிகளுக்கு மேல் வசனம் எழுத வேண்டியுள்ள இந்த “பாசமலர்” திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் ஒரு யாகமாக மேற்கொண்டு ஒரே மூச்சில் எழுதி முடித்தார் ஆரூர்தாஸ். நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்காக ஆரூர்தாஸ் முதன் முதலாக வசனம் எழுதிய இந்த “பாசமலர்” திரைப்படம் 27.05.1961ல் வெளிவந்தது. வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஆறு மாதங்களுக்கும் மேல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி 17.11.1961ல் வெள்ளி விழா கண்டது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒட்டுமொத்த திரையுலகினரின் பாராட்டுக்கும் உரியவரானார் ஆரூர்தாஸ்.