துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழ் திரையுலகில் எம் ஜி ஆருக்குப் பின் திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரின் நம்பிக்கை நாயகனாக, குறைந்தபட்ச உத்தரவாத நாயகனாக பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே. இவரை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் வராது என்ற நிலையே அன்றிலிருந்து தற்போதுவரை உள்ளது. 1980களில் வெளிவந்த இவரது பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப் படங்களாகவே இருந்தன என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு “சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தை உறுதி செய்த திரைப்படமாக அறியப்பட்ட “முரட்டுக் காளை” திரைப்படத்தை தந்த ஏ வி எம் நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து பல வெற்றித் திரைப்படங்களை தந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 1984ம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளிவந்த “நல்லவனுக்கு நல்லவன்”.
நடிகர் கிருஷ்ணம்ராஜ், ஜெயசுதா, விஜயசாந்தி நடிப்பில் 1983ல் வெளிவந்த “தர்மாத்முடு” என்ற தெலுங்கு திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஏ சி திருலோகசந்தர், இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்தை வைத்து தமிழில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற தனது அபிப்ராயத்தை ஏ வி எம் சரவணன் அவர்களிடம் கூற, அதன்படி ஏ வி எம் சரவணனும், பஞ்சு அருணாச்சலமும் அந்தப் படத்தை பார்த்தனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே சிவாஜி நடிப்பில் வெளிவந்த “ஹிட்லர் உமாநாத்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளோடு ஒத்துப் போவதால் ஏ வி எம் சரவணனுக்கு திருப்தி அளிக்கவில்லை. பின்னர் இயக்குநர் விசு அந்தப் படத்தைப் பார்த்து, அதில் சில மாற்றங்களைச் செய்து திரைக்கதை அமைத்தால் நிச்சயம் படம் வெற்றி பெரும் என கூறிய பின், படப்பிடிப்பிற்கான வேலையைத் துவங்கியது ஏ வி எம் நிறுவனம்.
படத்தின் இயக்குநராக எஸ் பி முத்துராமனும், ஒளிப்பதிவிற்கு பாபுவும், எடிட்டிங்கை கவனிக்க ஆர் விட்டலும் இணைந்திருந்த இத்திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்துத் தந்தார் விசு. வாலி, நா காமராசன், முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோரின் கைவண்ணத்தில் அமைந்த பாடல் வரிகளுக்கு இசைவடிவம் தந்திருந்தார் இசைஞானி இளையராஜா. படத்தின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக “உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே” என்ற பாடல் இயக்குநர் வி சி குகநாதன் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல். அந்தப் பாடலை அவரிடம் இருந்து கேட்டுப் பெற்று இந்தப் படத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். இந்தப் பாடலில் பின்னணிப் பாடகர் கே ஜே ஜேசுதாஸூடன் இணைந்து மஞ்சுளா என்ற ஒரு புது பின்னணிப் பாடகியை பாடவும் வைத்திருந்தார் இசைஞானி இளையராஜா.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சொத்துக்களை எல்லாம் உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு ரஜினி செல்வதுபோல் காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது படக்குழுவினரால். இந்த முடிவு இயக்குநர் எஸ் பி முத்துராமனுக்கும், ரஜினிக்கும் பிடித்திருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஏ வி எம் சரவணன் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சண்டைக் காட்சியை வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க, அதன்படி சண்டைக் காட்சியை அமைத்து பின் எல்லோரும் ஒன்றாக இணைவது போல் கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பிற்குள்ளாகி படம் அமோக வெற்றியை ஈட்டித் தந்தது ஏ வி எம் நிறுவனத்திற்கு.