எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் யாருடைய படமாவது கொஞ்சம் ஓடிவிட்டால் போதும் 'வசூல் சக்கரவர்த்தி, வசூல் ராஜா, வசூல் இளவரசன், வசூல் தளபதி, வசூல் ஸ்டார், பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ, அதிரடி வசூல், ஆர்பாட்ட வசூல், அட்டகாச வசூல்,' என ஓவராக பில்டப் கொடுப்பார்கள்.
ஆனால், தெலுங்கு ஹீரோக்கள் சமீப காலங்களில் கொடுத்து வரும் வசூலைப் பார்த்து நமது தமிழ் ஹீரோக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். அவர்களும் கமர்ஷியல் படங்களைத்தான் எடுக்கிறார்கள். இவர்களும் கமர்ஷியல் படங்களைத்தான் எடுக்கிறார்கள். ஆனால், அவர்களது படங்களைப் போல இங்கு நமது தமிழ்ப் படங்கள் ஓடுவதேயில்லை.
தெலுங்கு ரசிகர்கள் சினிமாவை நேசிப்பதைப் போல இங்குள்ள முன்னணி நடிகர்கள் பலரும் சினிமாவை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகிய ஒரு சிலரைத் தவிர மற்ற ஹீரோக்கள் அவர்கள் நடிக்கும் படங்களுக்காக தமிழில் கூட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.
பெயருக்கு ஒரே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதையும் ஏதோ ஒரு டிவிக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டு, மற்றவர்களை வாசலுடன் வீடியோ எடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று அவமதிப்பது சமீப காலங்களில் நடந்து வருகிறது.
சென்னையைத் தாண்டி வேறு எந்த ஊருக்கும் போய் பேசுவது கூட இல்லை, பேட்டிகள் கொடுப்பதில்லை. ஒரே நாளில் 200 கோடி, 300 கோடி வசூல் சாதனையைப் புரியும் தெலுங்கு ஹீரோக்களான பிரபாஸ், ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் ஊர் ஊராக, மற்ற மொழி பேசும் மாநிலங்களுக்கு ஓடோடிச் சென்று அவர்களது படங்களைப் பற்றிப் பேச வைக்கிறார்கள்.
இப்போது ஒரே நாளில் 300 கோடி வரை வசூலித்த 'புஷ்பா 2' படத்திற்காக அல்லு அர்ஜுன் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் மட்டுமல்லாது படத்தின் நாயகி உள்ளிட்டவர்களும் தவறாமல் கலந்து கொண்டார்கள். ஆனால், இங்கோ சில நாயகிகள் படங்களில் நடிப்பதுடன் சரி. அவர்கள் நடித்த படங்களாக இருந்தால் கூட அந்தப் படங்களின் இசை வெளியீட்டிற்கோ, பத்திரிகையாளர் சந்திப்பிற்கோ வரவே மாட்டார்கள். எந்த யு டியுப் சேனலிலும் பேச மாட்டார்கள்.
இங்குள்ள கதாநாயகிகளை விடவும் அதிக சம்பளம் வாங்கும் மற்ற மொழி நடிகைகள் அவர்கள் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக தவறாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைப் பார்த்துத்தான் மற்ற மொழிகளிலும் சில நுணுக்கங்களை அவரவர் படங்களில் வெளிப்படுத்தினார்கள். ஆனால், இன்றோ தமிழ் சினிமா மிகவும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 500 கோடி வசூலைக் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டில் வெளிவந்த ரஜினிகாந்த், விஜய் படங்கள் கூட வியாபார ரீதியாக லாபத்தைக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஆனால், அந்தப் படங்களை மாபெரும் வெற்றிப் படங்கள் என பொய்யாகக் கட்டமைக்க இங்கு ஒரு கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் என பலரும் பாராட்டப்பட்டு வந்தார்கள். அவர்களது இயக்கத்தில் மற்ற மொழி நடிகர்களும் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ் என சில இயக்குனர்களின் கடைசி படங்கள் ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை. லோகேஷ் கனகராஜ், நெல்சன் என ஒரு சில புதிய இயக்குனர்கள் ஒரு நம்பிக்கையைத் தருகிறார்கள். அதே சமயம், அவர்களும் முன்னணி ஹீரோக்கள் பின்னால்தான் போகிறார்கள். அப்படியே போனாலும் மற்ற மாநிலங்களிலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
இங்கும் சுமாரான ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை சூப்பர் படம் என பில்டப் கொடுப்பதும் தவறாமல் நடக்கிறது. 2000 கோடி வசூலிக்கும், ஜிஎஸ்டி விவரத்தைக் காட்டுகிறோம் என தேவையில்லாமல் பேசி, 'கங்குவா' படத்தை மீம் மெட்டீரியல் ஆக்கியதுதான் இங்கு மிச்சமாக இருக்கிறது.
தெலுங்குத் திரையுலகம் அடுத்தடுத்து ஹீரோயிசப் படங்களைத் தந்தாலும் அவற்றின் வெற்றி ஹிந்தித் திரையுலகமே பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 எடி, தேவரா' ஆகியவற்றுடன் தற்போது 'புஷ்பா 2' என அந்தப் படங்களின் வசூல் மிரள வைக்கிறது. கன்னடத்தில் கூட 'கேஜிஎப் 2' படம் பெரும் வெற்றியைக் கொடுத்து வியக்க வைத்தது.
தென்னிந்திய மொழிப் படங்களுக்கு மையமாக இருந்த சென்னையில் இருந்து உருவாகும் ஒரு படம் இன்னும் 1000 கோடி வசூலை அடைய முடியாமல் இருப்பது ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான்.
ஒரு பக்கம் 1000 கோடி வசூல் என்று வியாபார ரீதியாகப் பேசினாலும், மற்றொரு பக்கம் சில தரமான படங்கள் வந்து 100 கோடி வசூலிக்கவில்லை என்றாலும் கூட நமக்கு ஒரு ஆறுதலைத் தருகிறது. அந்தப் படங்கள் கூட வரவில்லை என்றால் நிலைமை மோசம்தான்.
சினிமா என்பது பொழுதுபோக்குதான் என்றாலும், அது மிகப் பெரும் வியாபாரம் சார்ந்தது. நல்ல படங்களும் தேவைதான், அதே சமயம் வசூலை அள்ளித் தரும் படங்களும் அவசியம். கடந்த ஏழு வருடங்களாக 1000 கோடி படம் ஒன்று தமிழிலும் வந்துவிடாதா என ஏங்கித் தவிக்கும் தமிழ் சினிமா ரசிகர்களின் பேராசையை 2025ம் ஆண்டிலாவது யாராவது தீர்த்து வைக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.