சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க 'புறநானூறு' படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 43வது படமாக அப்படம் உருவாக இருந்தது. 'சூரரைப் போற்று' படத்தின் பெரும் வரவேற்புக்குப் பிறகு சுதா, சூர்யா இருவரும் இணையும் படம் என்பதால் இந்தப் படமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த மார்ச் மாதம் இப்படத்திற்காக அதிக காலம் தேவைப்படுகிறது. இந்த கூட்டணி மிகவும் சிறப்பானது, எங்கள் இதயத்திற்கு நெருக்கமானது. சிறந்ததைத் தர நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நாங்கள் படப்பிடிப்புக்குப் போவோம் என சூர்யா, சுதா இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள்.
ஆனால், அதன்பின் படம் கைவிடப்பட்டது என்ற தகவல்தான் வெளிவந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க சூர்யா போய்விட்டார். அதனால், 'புறநானூறு' படம் சுதா, சூர்யா கூட்டணியில் நடக்க வாய்ப்பில்லை என்றார்கள். சூர்யாவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சில மாதங்களாகவே தகவல் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 2025 ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்பது லேட்டஸ்ட் அப்டேட்.
படத்திற்கான புதிய தயாரிப்பாளர், சிவகார்த்திகேயன் நடிப்பது உள்ளிட்டவை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாம். 'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் வியாபார வட்டம் பெருவிட்டதால் இப்படத்தைத் தயாரிக்க உள்ள நிறுவனமும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கும் நான்தான் இசை என ஜிவி பிரகாஷ்குமார் சொன்னதும் 'புறநானூறு' பற்றித்தானாம். சிவகார்த்திகேயனின் 25வது படமாக இப்படம் உருவாக உள்ளது.