தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு | ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்? | சிவகார்த்திகேயன் 24வது படத்தில் இணைந்த அமரன் பட பிரபலம் | அட நம்ம பொம்மியா இது? வைரலாகும் லேட்டஸ் கிளிக்ஸ் | சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன் | பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி போராட்டம் | கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா |
2024ம் ஆண்டின் ஒன்பது மாதங்கள் முடிய உள்ளன. இன்னும் மூன்றே மாதங்கள்தான் எஞ்சியுள்ளன. இந்த ஒன்பது மாதங்களில் 170 படங்கள் வரை வெளிவந்துவிட்டன. அடுத்த மூன்று மாதங்களில் எப்படியும் 30 படங்கள் வெளிவந்து விடும். அதனால், இந்த வருடமும் 200 படங்களுக்கும் மேலாக மொத்த எண்ணிக்கை வந்துவிடும்.
அடுத்த மூன்று மாதங்களில் சில முக்கிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக இருக்கின்றன. அவற்றில், 'வேட்டையன், அமரன், கங்குவா, விடுதலை 2' ஆகியவை குறிப்பிட வேண்டிய படங்கள்.
வேட்டையன்
'ஜெய்பீம்' படத்தை இயக்கிய தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, ராவ் ரமேஷ் என பெரும் நட்சத்திரக் கூட்டணி இருக்கிறது. 'என்கவுன்டர்' பற்றிய படம் என்பது படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. ரஜினிக்கேயுரிய ஹீரோயிசத்துடன் படம் இருக்குமா என்பது மட்டும்தான் இப்போதைய கேள்வியாக உள்ளது. அதுவும் இருந்துவிட்டால் இந்தப் படம் பிளாக் பஸ்டர் தான் என்பது திரையுலகின் எதிர்பார்ப்பு. அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் ரஜினியின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் உண்டு.
அமரன்
2017ல் வெளிவந்த 'ரங்கூன்' என்ற படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இருந்தாலும் அந்தப் படம் கவனிக்கப்படாத ஒரு படமாகப் போய்விட்டது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார். போரில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பற்றிய பயோபிக் படம்தான் இது. அவரது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கமல்ஹாசன் தயாரிக்கும் படம் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. ஹிந்தியில் இந்திய ராணுவத்தை மையமாக வைத்து சில உண்மைக் கதைகள் படமாக வந்திருக்கின்றன. தமிழில் வருவது மிகவும் அபூர்வம். உண்மைக் கதையுடன் சினிமாவுக்குரிய அம்சங்களும் இருந்தால் இப்படம் ரசிகர்களைக் கவர்வது உறுதி. தீபாவளிப் படங்களின் போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் உள்ள படம்.
கங்குவா
சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கங்குவா'. நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் சமீப வருடங்களில் வெளிவந்த சரித்திரப் படமாக 'பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2' ஆகிய படங்கள் மட்டுமே இருந்தது. அதிக பொருட்செலவு, காலதாமதம் ஆகியவற்றால் நமது தமிழ் சினிமாவில் அப்படியான படங்களை எடுக்கத் தயங்குகிறார்கள். இருந்தாலும் இந்த 'கங்குவா' படத்தை சிவா - சூர்யா கூட்டணி தைரியமாக எடுத்துள்ளது. இப்படத்தின் டிரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு, பான் இந்தியா வெளியீடாக முழுமையான அளவில் எந்த ஒரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்குமா என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்.
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விடுதலை 2'. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்தது. இரண்டாம் பாகம் இந்த வருடக் கோடை விடுமுறையில் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படப்பிடிப்பு தாமதமாக நடந்ததால் வெளியீடு தள்ளிப் போய் தற்போது டிசம்பர் 20 என அறிவித்துள்ளார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரம் புதிதாக இடம் பிடித்துள்ளது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். முதல் பாகத்தில், கதையின் நாயகனாக சூரி அறிமுகமானார். அதன்பின் அவர் கதையின் நாயகனாக நடித்த 'கருடன், கொட்டுக்காளி' ஆகியவையும் நல்ல விமர்சனங்களைப் பெற்றன. அது இந்த இரண்டாம் பாகத்திற்கும் உதவும். விஜய் சேதுபதி நடித்து இந்த வருடம் வெளிவந்த 'மகாராஜா' பெரிய வெற்றி என்பதும் கூடுதல் பலம்.
இந்த வருடத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக் லைப்', அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' ஆகிய படங்கள் வந்துவிடாதா என அவரவர் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இரண்டு படங்களும் 2025ல்தான் வெளியாகும் சூழல் உள்ளது என்பது கோலிவுட் தகவல். எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், சில படங்கள் எதிர்பார்ப்பு எதையும் ஏற்படுத்தாமல் உள்ளே நுழைந்து ஹிட்டடித்து விட்டுச் செல்லவும் வாய்ப்புகள் உண்டு.