தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
1960களில் கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், எம்ஜிஆரின் “நல்லவன் வாழ்வான்” திரைப்படத்திற்கு பாடல் எழுதியதன் மூலம் எம்ஜிஆரின் ஆதரவு பெற்ற கவிஞரானவர் தான் கவிஞர் வாலி. ஒரு பொதுமேடையில் இனி எனது படங்களுக்கு வாலிதான் பாடல்கள் எழுதுவார் என எம்ஜிஆரே அறிவிப்பு செய்யும் அளவிற்கு அவருடைய அபிமானம் பெற்ற கவிஞராகவும் உயர்வு பெற்றார் வாலி.
எம்ஜிஆர் நடிப்பில், ஜிஎன் வேலுமணி தயாரித்து, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து வெளிவந்த “படகோட்டி” திரைப்படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் வாலி. பாட்டுக்கோர் படம் “படகோட்டி” என ரசிகர்களும், கலையுலகமும் போற்றும் அளவிற்கு அந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் அழியாத் தன்மை பெற்று நிலைத்து நிற்கின்றன. இவ்வாறு எம்ஜிஆரின் எண்ணற்ற திரைப்படங்களில் அவரது கொடைத் தன்மையையும், ஆளுமையையும், எண்ணங்களையும் விளக்கும் ஏராளமான கொள்கைப் பாடல்களை எழுதி எம்ஜிஆரின் மனதில் தனி இடம் பிடித்திருந்தார் வாலி.
கண்ணதாசன் தனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை, தான் எழுதிய திரைப்படப் பாடல்கள் மூலம் சொல்லியதாக செவிவழிச் செய்திகள் நாம் கேட்டதுண்டு. அதுபோல் வாலி தான் கலையுலகில் வளர காரணமாயிருந்த எம்.ஜி.ஆருக்காக எழுதிய ஒரு திரைப்படப் பாடல்தான் இந்தப் பாடல். தனக்கு பாடல் எழுதும் வாய்ப்பு தந்து வளர்த்து விட்ட எம்ஜிஆரின் சிறப்புகளை பாடியிருந்த வாலி, அவருக்கு நன்றி சொல்லும் விதமாய் பாடிய ஒரு பாடலாகவும் இந்தப் பாடலை நம்மால் உணர முடியும்.
1967ம் ஆண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா, சரோஜாதேவி நடிப்பில் எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்கரபாணி இயக்கிய “அரசகட்டளை” என்ற படத்தில் ஜெயலலிதா பாடுவதாக வரும் ஒரு காட்சிக்கு பாடல் எழுதிய வாலி, காட்சிக்குப் பொருந்துமாறும், அதையே தனக்கு சாதகமாக்கி தன்னை கலையுலகில் வளர்த்துவிட்ட எம்ஜிஆருக்கு நன்றி சொல்லும் விதத்திலும் அவர் எழுதிய பாடல்தான் “என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்” என்று ஆரம்பமாகும் “அரசகட்டளை” படப்பாடல்.