‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
1965ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த “இரவும் பகலும்” என்ற வெற்றித் திரைப்படத்தின் மூலம் நேரடி கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் ஜெய்சங்கர். அறிமுகமான அதே ஆண்டில் “பஞ்சவர்ணக்கிளி” என்ற திரைப்படத்தில் இரட்டை வேடமேற்று நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்த இவர், தென்னிந்திய திரையுலகின் மாபெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் “குழந்தையும் தெய்வமும்” என்ற மற்றுமொரு வெற்றித் திரைப்படத்தின் நாயகனாகவும் வெள்ளித்திரையில் மின்னி, தனக்கான ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து “நீ”, “இரு வல்லவர்கள்”, “யார் நீ?”, “நாம் மூவர்”, “காதல் படுத்தும் பாடு”, “கௌரி கல்யாணம்” என சமூகக் கதைகளின் நாயகனாகவே பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வந்த வேளையில், அவரை ஒரு சாகஸ நாயகனாக, துப்பறியும் போலீஸ் அதிகாரியாக, ஜேம்ஸ்பாண்ட் அவதாரம் எடுக்க வைத்த திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “வல்லவன் ஒருவன்”.
1966ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த இத்திரைப்படம், “ஷேடோ ஆப் ஈவில்” என்ற ப்ரென்ச் திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் தயாரித்து, நாட்டை நாசகரமாக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு சட்ட விரோத கும்பலை கண்டு பிடிக்கும் சி ஐ டி சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடித்துச் சிறப்பித்திருந்த இத்திரைப்படம்தான் அவரை 'ஜேம்ஸ்பாண்ட்' நடிகராக்கிய முதல் திரைப்படமாக அமைந்தது.
“மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்குப் பின்னர் துப்பறியும் திரைப்படங்களின் நாயகன் என்றாலே அது ஜெய்சங்கர் மட்டுமே எனும் அளவிற்கு பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டு வந்த வெள்ளித்திரை நாயகனாக அறியப்பட்டிருந்தார்.
“வல்லவன் ஒருவன்” வெற்றிக்குப் பின் வந்த “நீலகிரி எக்ஸ்பிரஸ்”, “நில் கவனி காதலி”, “சி ஐ டி சங்கர்” போன்ற திரைப்படங்களிலும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சி ஐ டி சங்கர் என்பதாகவே சித்தரிக்கப்பட்டிருந்ததோடு, “தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்” என்று கலையுலகினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட திரைக்கலைஞராகவும் வலம் வரத் தொடங்கினார்.
மேலும் 1980களில் பெரும்பாலான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற முன்னணி கதாநாயக நடிகர்களின் திரைப்படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த மறைந்த 'ஜுடோ' ரத்னம், “வல்லவன் ஒருவன்” திரைப்படத்தின் மூலமாகத்தான் வெள்ளித்திரைக்கு ஒரு சண்டைப் பயிற்சியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். அதேபோல் “அம்முக்குட்டி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மறைந்த நகைச்சுவை நடிகை புஷ்பமாலா, இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் 'அம்முக்குட்டி' புஷ்பமாலா என்றே அடையாளப்படுத்தப்பட்டு, கலையுலகில் தொடர்ந்து பயணித்து வந்தார்.
இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத, வேதா இசையமைத்திருந்தார். குறிப்பாக படத்தில் இடம் பெற்ற “பளிங்கினால் ஒரு மாளிகை” என்ற பாடல், அமெரிக்க இசையமைப்பாளரான ஆர்ட்டீ ஷா என்பவரின் 'ப்ரெனெசி' என்ற பாடலைத் தழுவி மெட்டமைக்கப்பட்டிருந்தது. தீபாவளி நாளான நவம்பர் 11, 1966ம் ஆண்டு, எம் ஜி ஆரின் “பறக்கும் பாவை”, சிவாஜியின் “செல்வம்”, இயக்குநர் கே பாலசந்தரின் “மேஜர் சந்திரகாந்த்” என பெரும் திரைக்கலைஞர்களின் படைப்புகளோடு களம் கண்ட “வல்லவன் ஒருவன்” திரைப்படம் வசூலிலும் தனது வல்லமையைக் காட்டி, பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது.