படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

''அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது' என மதுரையில் 'இணைப்பு' அமைப்பின் இளைஞர் தொழில்முனைவோர் வழிகாட்டும் நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசினார்.
வேலை தேடும் இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்குடன், 'இணைப்பு' ( தி கனெக்ட்) அமைப்பின் சார்பில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேலம்மாள் கல்விக் குழுமம் தலைவர் முத்துராமலிங்கம் பேசுகையில், ''பட்டம் பெற்றவர்கள் கல்வியறிவை பயன்படுத்தி தொழில் துவங்கி பலருக்கு வேலை தரவேண்டும் எனும் நோக்கத்தில் 'இணைப்பு' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து அதிக விமானங்கள் வந்தால் தான் மதுரை வளர்ச்சி அடையும். டில்லியே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மாணவர்கள், பிற அமைப்புகளை திரட்டி மாரத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
கலெக்டராக வரவேண்டியவன் நடிகர் சூரி பேசியதாவது: நீங்கள் சம்பாதித்து உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அனுபவிக்க உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். எனது பெயர் ராம். தம்பி பெயர் லட்சுமணன். நான் கலெக்டராக இங்கு நிற்க வேண்டிய ஆள். லட்சுமணன் பொறியாளராக நிற்க வேண்டியவர். இருவரும் மதுரை செனாய் நகர் பள்ளியில் படித்தோம். 8ம் வகுப்பு தேர்ச்சியோடு பள்ளி படிப்பு முடிந்தது.'பெரிய முதலாளியாக வரவேண்டும்' எனக்கூறி டீக்கடையில் அப்பா வேலைக்கு சேர்த்துவிட்டார். பின்னர் சினிமா ஆசையில் சென்னை சென்றேன். 8 ஆண்டுகளாக பெயின்டர் உட்பட கிடைத்த வேலையை செய்தேன். சென்னையில் பெரிய கட்டடங்களில் எனது கைப்படாத இடமே இல்லை.
சினிமா வாய்ப்பிற்காக போட்டோ எடுக்க 20 ரூபாய்கூட இருக்காது. சாப்பிட்டால் போட்டோ பிரின்ட் போட முடியாது என்பதால் ஒரு டீ, பன் என டீக்கடையில் அக்கவுண்ட் வச்சுதான் வாழ்க்கை ஓடியது. ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து. எனக்கு டிரஸ் அளவு எடுத்த போது கை, காலெல்லாம் நடுங்கி கண் கலங்கியது. 'ஷாட்' எடுத்த பின், இன்னொருவரை அந்த கேரக்டருக்கு பரிந்துரைத்தனர். உடனே சட்டையை கழட்டுங்கள் என்றனர். எல்லோருக்கும் நடப்பது எனக்கும் நடந்தது. அதன் பிறகு போராட்டம்தான்.
ஒரு பட வாய்ப்பிற்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்தேன். 2008ல் 'வெண்ணிலா கபடி குழு' பட வாய்ப்பு கிடைத்தது. அஜித்தின் 'ஜி' படத்தில் சிறு வேடத்தில் நடித்தேன். ஒருமுறை சண்டைக் காட்சியில் எனது மண்டை உடைந்தது. அஜித்,'பார்த்து பண்றது இல்லையா, எந்த ஊரு' என்றார். மதுரை என்றேன். அவர்,'மதுரைக்காரங்க மட்டும் ஏன் இவ்வளவு பயரா (தீயாக), துருதுருவென இருக்காங்க. ஒன்னு சொன்னா நாலா பண்றான்' என்றார். இது எனக்கு நம்பிக்கை கொடுத்தது.
வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின் வாழ்க்கை மாறியது. ஒரு கட்டடம் விலைக்கு வந்தது. அதிக பணம் கொடுத்து வாங்கு கிறேன் என எனது மனைவி சண்டை போட்டார். நான், 'எவ்வளவு சொல்லியிருந்தாலும் வாங்கியிருப்பேன். நான் மயக்கம் போட்டு விழுந்த அலுவலகம் இருந்த கட்டடம் இது தான். சிலவற்றிற்கு விலையே கிடையாது' என்றேன்.
பல வலிகளை தாண்டியதால் சூரியை இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. வாழ்க்கையில நிறைய அவமானங்கள் வரும். அதற்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள். தோல்வி வரும். அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது. விழுந்து எந்திரிக்கணும் என்று நினைக்கிறவனை கடவுள் நிச்சயமாக துாக்கி விடாமல் இருக்க மாட்டார். செல்போனை பார்த்து உறவுகளை விட்டு விடாதீர்கள். நான் இங்கு நிற்க முழு காரணம் குடும்பம் தான். குடும்பத்தை விடாதீர்கள் என்றார்.
ஜி.ஆர்.டி., ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் அனந்தபத்மநாபன், தங்கமயில் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் ரமேஷ், பொன் பியூர் கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி, அம்மா மெஸ் நிறுவனர் செந்தில்வேல் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.