மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2002 தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று பக்திப் படமான 'படைவீட்டு அம்மன்', அஜித் நடித்த 'வில்லன்', விஜய் நடித்த 'பகவதி', கார்த்திக் நடித்த 'கேம்', பாண்டியராஜன் நடித்த 'ஆண்டிப்பட்டி அரசம்பட்டி', சேரன் நடித்த 'சொல்ல மறந்த கதை', 'சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை', ஆகிய படங்களுடன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த், சிம்ரன், ஆஷிமா, விஜயன் மற்றும் பலர் நடித்த 'ரமணா' படமும் வெளிவந்தன.
அன்றைய தினம் வந்த படங்களில் தரமான ஒரு ஆக்ஷன் படமாக 'ரமணா' படம் அமைந்து 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்படத்திற்கு முன்பு அஜித் நடித்து 2001ல் வெளிவந்த 'தீனா' படத்தில் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார் ஏஆர் முருகதாஸ். இரண்டாவது படத்திலேயே விஜயகாந்த்திடம் கதை சொல்லி அசத்தி வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
அதற்கு முன்பு வரை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த விஜயகாந்த், இந்தப் படத்தில் அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்தக் கதாபாத்திரம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் அதிரடியாக இருக்கும். கல்லூரியில் புரொபசராக வேலை பார்க்கும் விஜயகாந்த்தான் அந்த அதிரடிகளைச் செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கும். விஜயகாந்த் மனைவியாக சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன், படத்தின் கதாநாயகியாக ஆஷிமா நடித்தனர். போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்த யூகி சேது தான் விஜயகாந்த் குற்றவாளி என கண்டுபிடிப்பார்.
இளையராஜா இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்தான் படத்தில் இடம் பெற்றன. “வானவில்லே… வானவில்லே”, “வானம் அதிரவே…” ஆகிய இரண்டு பாடல்களும் அப்போது சூப்பர் ஹிட்டான பாடல்கள். ஏஆர் முருகதாஸ் - இளையராஜா கூட்டணி இந்த ஒரே ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றினார்கள்.
'ரமணா' படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'தாகூர்', கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிக்க 'விஷ்ணு சேனா', பெங்காலியில் மிதுன் சக்கரவர்த்தி நடிக்க 'டைகர்', ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்க 'கப்பார் இஸ் பேக்' என ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.