வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
1. நடிகர் திலகம், நடிப்பின் இலக்கணம், கலைத்துறையின் பல்கலைக்கழகம், கலைத்தாயின் தவப்புதல்வன், என அழைக்கப்படும் 'செவாலியே' டாக்டர் சிவாஜிகணேசன் அவர்களின் 95வது பிறந்த தினம் இன்று…
2. “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்தில் தனது சிறப்பான நடிப்பாற்றலாலும், வசன உச்சரிப்பாலும் அனைவரையும் பிரமிக்க வைத்த விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி அன்றிலிருந்து சிவாஜிகணேசன் ஆனார்.
3. நடிப்பதற்காக மேக்கப் போட்டு முதன் முதலாக கேமரா முன் இவர் நின்றது 1950 செப்டம்பர் 09. இவரது முதல் படமான “பராசக்தி” வெளிவந்தது 1952 அக்டோபர் 17.
4. மெலிந்த உடலமைப்புடன் இருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை, அவருடைய முதல் படத்திலேயே நிராகரிக்க ஒருபுறம் முயற்சி நடந்தாலும், படத்தின் தயாரிப்பாளரான பி ஏ பெருமாள் அவர்கள், நடிகர் திலகத்தின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையால் விளைந்ததுதான் சிவாஜிகணேசனின் முதல் பட வாய்ப்பு.
5. படத்தின் கதை, வசனம் இசைத்தட்டில் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட முதல் திரைப்படம் நடிகர் திலகத்தின் “பராசக்தி”. படத்தில் நடிப்பதற்காக விமானத்தில் வந்த முதல் நடிகரும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
6. முதன் முதலாக ஒரு கதாநாயக நடிகனுக்கு கட்அவுட் வைக்கப்பட்டதும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குத்தான். இவர் நடித்த “வணங்காமுடி” திரைப்படத்திற்காக அன்றைய நாளில் 85அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது.
7. தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் வெளிவரும் முன்பு அத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடும் வழக்கத்தை முதன் முதலாக அறிமுகம் செய்து புதுமை படைத்ததும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரைப்படமே. படம் : “திரும்பிப்பார்”.
8. பாடல்கள் ஏதுமின்றி வெளிவந்து அன்றைய நாளில் பெரும் பரபரப்பை தந்த திரைப்படமும் நடிகர் திலகத்தின் திரைப்படமே. படம் : “அந்தநாள்”.
9. ஒரே படத்தில் அதிக வேடங்களில் நடித்து முதன் முதலில் புரட்சி செய்த நாயகனும் நடிகர் திலகமே. 1964ல் வெளிவந்த “நவராத்திரி” திரைப்படத்தில் 9 விதமான வேடங்களில் தோன்றி தனது விஸ்வரூப நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
10. வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் திரைப்படமும் நடிகர் திலகத்தின் திரைப்படமே. 1969ல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த “சிவந்த மண்”.
11. நேரம் தவறாமை என்பது நடிகர் திலகத்தின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்தது எனலாம். படப்பிடிப்பு தளத்திற்கு, செல்ல வேண்டிய குறித்த நேரத்திற்கு அரை மணி நேரமாவது முன்பாக செல்வதை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்த ஒரே நடிகர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
12. அமெரிக்க நாட்டின் அழைப்பின் பேரில் சென்ற முதல் நடிகர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நயாகரா நகரின் ஒரு நாள் மேயராகவும் கௌரவிக்கப்பட்டார்.
13. 1995ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பெருமை மிகு விருதான “செவாலியே விருது” கிடைக்கப் பெற்று நாட்டிற்கும், கலையுலகிற்கும் பெருமை தேடித் தந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
14. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாரில் தனது சொந்த செலவில் நினைவுச் சின்னம் எழுப்பி, தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
15. நடிப்பு ஒன்றையே தனது உயிர் மூச்சாய் நினைத்து, வாழ்ந்து மறைந்த இந்த நடிப்புலக மேதையின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.