எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்தது.
விஜய் ரசிகர்கள் பலரும் இந்த இசை விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர். 6000 பேர் வரையில் மட்டுமே அமரும் இட வசதி கொண்ட நேரு உள் விளையாட்டு அரங்க மைதானத்தில் அதை விட பல மடங்கு பேர் டிக்கெட்டுகளைக் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தையும், படக்குழுவினரையும் இடைவிடாமல் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. அதே சமயம், போலி டிக்கெட்டுகளையும் அச்சிட்டு சிலர் வினியோகித்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டதை விடவும் மிக அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதித்தார்கள். அதனால் கடும் நெருக்கடியும், சர்ச்சைகளும் எழுந்தது. போலி டிக்கெட்டுகள் மூலமும் பலரும் விழாவுக்கு போனதும் மற்றொரு காரணமாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியால் ஆஸ்கர் விருது வென்றவராக இருந்தாலும் ஏஆர் ரஹ்மானின் இமேஜ் ரசிகர்கள் மத்தியில் குறைந்தது. பலரும் அவரை நேரடியாகவே விமர்சித்தார்கள்.
அது போன்றதொரு சம்பவம் 'லியோ' இசை வெளியீட்டு விழாவில் நடந்துவிடக் கூடாதென முன்னெச்சரிக்கையாகவே ரத்து செய்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது படத்திற்கும், விஜய்யின் இமேஜுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தும். மேலும், 6000 பேர் அமர வேண்டிய இடத்தில் பல்லாயிரம் பேர் வந்துவிட்டால் அதைத் தடுக்கவும் தகுந்த பாதுகாப்பு வசதிகளைச் செய்ய முடியாது என்பதையும் யோசித்துள்ளார்களாம்.
அதோடு விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்லியிருக்கிறார். 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 100 பேர் கலந்து கொள்ளும் வகையில் 23400 டிக்கெட்டுகளைக் கேட்டிருக்கிறார்கள். 6000 பேர் அமர வேண்டிய அரங்கில் அவ்வளவு டிக்கெட்டுகளைக் கொடுப்பது எப்படி என்ற கேள்வி வந்துள்ளது. ஒரு தொகுதிக்கு 10 டிக்கெட்டுகள் மட்டுமே என தயாரிப்பாளர் கண்டிப்பு காட்டியிருக்கிறார். கொடுத்தால் அவ்வளவு டிக்கெட்டுகள்தான் கண்டிப்பாக வேண்டும் இல்லையென்றால் விழாவையே ரத்து செய்யுங்கள். தங்களால் சமாளிக்க முடியாது என ஆனந்த் கண்டிப்புடன் இருக்கிறார். தற்போது புஸ்ஸி ஆனந்த் சொல்வதை மட்டுமே கேட்டு செயல்படும் விஜய், அவர் சொல்வதைச் செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் ஆர்டர் போட்டாராம். வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்கள் என்றும் இன்னொரு தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது.
இதனிடையே, பார்வையாளர்கள் யாரையும் விடாமல், டிவியில் நேரடி ஒளிபரப்பு மூலம் மூடப்பட்ட அரங்கில் விழாவை நடத்தலாமா என்ற ஒரு யோசனையும் உள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியும் இல்லையென்றால் அஜித் படங்களைப் போல எந்த ஒரு விழாவையும் நடத்தாமல் அப்படியே படத்தை வெளியிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம். விஜய் எதற்கு சரி என்கிறாரோ அதுதான் கடைசியாக நடக்கும்.