ஒரு காலத்தில் காமெடி கிங்காக வலம் வந்த கவுண்டமணி, தற்போது புதியவர்களின் வருகையால் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அப்படியே நடித்தாலும் கதையின் நாயகனாகத்தான் நடிக்கிறார். பலர் நடிக்க அழைத்தும் மறுத்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு '49 ஓ' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்தார். இது ஒரு அரசியல் படம். அதன்பிறகு 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தில் நடித்தார். இது விவசாய அரசியல் படம்.
தற்போது அவர் சத்தமின்றி ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் 'ஒத்த ஓட்டு முத்தையா'. மண்டேலா படத்தில் யோகி பாபு ஒரு ஓட்டுக்காரராக நடித்தது போன்று இதில் கவுண்டமணி ஒரு ஓட்டு வாக்காளராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை சசி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ரவி ராஜன் தயாரிக்கிறார், சாய் ராஜகோபல் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார், ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.