ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கலைத்தாய் ஈன்றெடுத்த 'தவப்புதல்வன்', கலையுலகை கைவசமாக்கிய “காத்தவராயன்”, உச்சரிப்பால் உன்னத தமிழை உயர்த்தி பிடித்த “உத்தமபுத்திரன்”, உலக சினிமாவையே உற்று நோக்க வைத்த “உயர்ந்த மனிதன்”, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 22வது நினைவு தினம் இன்று…
* நடிப்பின் அகராதியாய் விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை என்ற சிற்றூரில், சின்னையா மன்றாயர் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.
* குழந்தைப் பிராயத்திலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாக ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோதே வீட்டை விட்டு வெளியேறி, பின் தனது தாயின் அனுமதியோடு நாடகங்களில் நடித்து, தனது கலைப்பணியை துவக்கினார்.
* நாடகத்தில் இவர் ஏற்று நடித்த முதல் கதாபாத்திரமே பெண் வேடம்தான். “இராமாயணம்” நாடகத்தில் 'சீதை' வேடம் ஏற்று நடித்திருந்தார். அதன் பின் பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித் என பல வேடமேற்றும் நடித்தார்.
* 1946ஆம் ஆண்டு திராவிட கழகம் மாநாட்டை ஒட்டி, அண்ணாதுரை எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்தில் 'சிவாஜி'யாக நடித்த வி சி கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்த ஈவெ ராமசாமி அவர்கள், இன்றிலிருந்து நீ வெறும் கணேசன் அல்ல சிவாஜி கணேசன் என கூற, அதுவே நிலைத்து, சிவாஜி கணேசன் ஆனார்.
* 1952ஆம் ஆண்டு “நேஷனல் பிக்சர்ஸ்” சார்பில் தயாரிக்கப்பட்ட “பராசக்தி” என்ற திரைப்படத்தில் 'குணசேகரன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து, வெள்ளித்திரைக்கு நாயகனாக அறிமுகமானார் சிவாஜி.
* “பராசக்தி” திரைப்படத்தில் இவர் நாயகனாக நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான பிஏ பெருமாள், சிவாஜியின் அபார நடிப்பாற்றலில் நம்பிக்கை கொண்டு, நடிகர் திலகத்தையே நாயகனாக்கி அழகு பார்த்தார்.
* சரித்திரப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் என எந்த வகைப் படங்களாக இருந்தாலும், அந்தந்தப் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து, அதற்கேற்ற உடல் மொழி, வசன உச்சரிப்பு, ஆடை, ஆபரணங்கள் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி, அவற்றை தத்ரூபமாக செய்து பார்க்க பெரும் முயற்சி எடுத்து கொள்ளும் ஒரு அர்பணிப்பு உள்ளம் கொண்ட கலைமேதையாக திகழ்ந்தவர் தான் நடிகர் திலகம் .
* “கட்டபொம்மன்”, “கர்ணன்”, “அரிச்சந்திரா”, “ராஜ ராஜ சோழன்”, என ஒருபுறமும், “வ உ சிதம்பரம்பிள்ளை”, “மகாகவி பாரதியார்”, “பகத்சிங்”, “கொடி காத்த குமரன்” என மறுபுறமும், “சிவன்”, “ராமன்”, “கிருஷ்ணன்”, “நாரதர்” என இன்னும் ஒருபுறமும், “ஏழைப்பங்காளன்”, “ஜமீன்தார்”, “ரிக்ஷாக்காரன்”, “கிராமவாசி”, “போலீஸ் அதிகாரி”, “நீதிபதி”, “மருத்துவர்”, என வேறு ஒருபுறமும் என்று இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு நடிப்பின் அகராதியாய் வாழ்ந்து மறைந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
* நேரம் தவறாமைக்கு சரியான உதாரணம் சிவாஜிகணேசன். ஐந்து மணிக்கு படப்பிடிப்பு என்றால், அரைமணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு ஆஜராகி விடுவதை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்த ஒரே நடிகராக இருந்து வந்தார்.
* 1961ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் “சாந்தி” தியேட்டரை கட்டி, அன்றைய தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவர்களை வைத்து திறப்பு விழாவையும் நடத்தி முடித்தார் நடிகர் சிவாஜி. இந்த தியேட்டரில் வெளியிட்ட முதல் திரைப்படம் “பாவமன்னிப்பு”.
* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவில்லா அன்பு கொண்டவராகவும், இறுதிவரை அவரது தொண்டராகவும் இருந்தார்.
* 1962ல் இந்தியா, சீனா போரின் போது அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்து ரூபாய் 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் நடிகர் சிவாஜி கணேசன்.
* தன்னை “பராசக்தி” திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைத்த தயாரிப்பாளர் பி ஏ பெருமாள் அவர்களின் வீட்டிற்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெற்று வருவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி கணேசன்.
* தனது தாயார் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்று அமைத்தார் நடிகர் திலகம். அதை திறந்து வைத்தது மக்கள் திலகம் எம்ஜிஆர்.
* 1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த நடிகர் திலகம், 1961லிருந்து காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார். பெருந்தலைவர் காமராஜரின் மறைவிற்குப் பின் இந்திரா காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1982ல் பார்லிமென்ட் மேலவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்.
* 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறி, “தமிழக முன்னேற்ற முன்னணி” என்ற புதிய கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார் சிவாஜி.
* “பத்மஸ்ரீ விருது”, “பத்மபூஷண் விருது”, “தாதா சாஹேப் பால்கே விருது”, “செவாலியே விருது” “கௌரவ டாக்டர் பட்டம்”, “அமெரிக்கா நயாகராவின் ஒரு நாள் நகர தந்தை” உட்பட ஏராளமான விருதுகளும், பட்டங்களும் இவரால் பெருமை அடைந்தன.
* தனது நீண்ட நெடிய இந்த கலைப் பயணத்தில், 270 தமிழ் படங்கள் உட்பட ஏறத்தாழ 300 படங்கள் வரை நடித்திருக்கின்றார் நடிகர் திலகம்.
* மாபெரும் நடிகனாக, மொழியை உயிராய் மதித்த தமிழனாக, நாட்டின் சிறந்த பிரஜையாக, தேசபக்தியுள்ள இந்தியனாக வாழ்ந்து மறைந்த நடிப்புலக மேதை நடிகர் திலகம் “செவாலியே” சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினமான இன்று(ஜூலை 21) அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.