புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீனிவாசன் அய்யங்கார் - பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக, 1931ல் இதே நாளில் பிறந்தவர் ரங்கராஜன் எனும் பாடலாசிரியர் வாலி. மாலியின் ஓவியங்களால் கவரப்பட்டு வரைந்ததால், பள்ளித் தோழன் பாபு, இவரை, 'வாலி' என்றான். அந்த பெயரிலேயே வரைந்தும், எழுதியும் புகழ் பெற்றார். ஓவியராகவும், நடிகராகவும் ஜொலித்த, 'வாலிபக் கவிஞர்'ரின் 91வது பிறந்த தினம் இன்று. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
சினிமா அறிமுகம்
திருச்சி வானொலியில் நாடகங்கள் எழுதிய இவர் முதன் முதலில் 1956ம் ஆண்டில் 'புதையல்' என்ற படத்திற்காக வாலியின் பாடல் பதிவாயின. (இது சிவாஜி நடிப்பில் வெளிவந்த 'புதையல்' திரைப்படத்திற்கு முந்தியது) ஆனால் படம் வெளிவரவில்லை. பின்பு 1959ம் ஆண்டு நடிகர் வி கோபாலகிருஷ்ணனின் சிபாரிசால் கன்னட தயாரிப்பாளர் கெம்ப்ராஜின் அறிமுகம் கிடைத்து, 'அழகர் மலைக்கள்ளன்' என்ற படத்தில் பாடல் எழுதினார்.
சினிமாவில் பாடலாசிரியராக வருவதற்கு கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வாலிக்கு 'அரசு பிக்சர்ஸ்' மூலமாக இயக்குநர் பா நீலகண்டனிடம் இருந்து அழைப்பு வர கிடைத்தது எம்ஜிஆர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த 'நல்லவன் வாழ்வான்' திரைப்பட வாய்ப்பு. இந்த படத்திற்காக வாலி எழுதிய 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே' என்ற பாடல் தான் வாலி எம்ஜிஆருக்காக எழுதிய முதல் திரைப்படபாடல் என்பது குறிப்பிட தக்கது.
திருப்பம் தந்த மயக்கமா கலக்கமா...
சினிமா உலகில் நுழைவது கடினம் அப்படியே நுழைந்தாலும் நிலையான இடத்தை பிடிப்பது மிக மிக கடினம். இந்த அனுபவங்களில் இருந்து வாலியும் தப்பவிலைலை. ‛‛சினிமா வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்ப எண்ணிய போது கவிஞர் கண்ணதாசனின் பாடலான மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா என்ற பாடலைக் கேட்டு தனது முடிவை மாற்றி மீண்டும் முயற்ச்சித்ததாக'' அவரே குறிப்பிட்டும் இருக்கிறார்.
எம்எஸ்வி அறிமுகம்
பல தடைகள் குறுக்கீடுகளுக்கு இடையே முக்தா பிலிம்ஸ்' பட நிறுவனத்திலிருந்து 'இதயத்தில் நீ' திரைப்படத்திற்காக பாடல் எழுதும் வாய்ப்பு வாலியை தேடி வந்தது. படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இயக்குநர் முக்தா சீனிவாசன் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் வாலியை அறிமுகப்படுத்தினார். வாலியிடம் ஏதாவது பல்லவி எழுதி கொடுங்கள் என்று விஸ்வநாதன் கூற, வாலியும் உடனே 'பூவரையும் பூவைக்கு பூமாலை போடவா பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா' என்று எழுதி தர 'பூவைக்கு' என்ற வார்த்தை டியூனுக்கு சரியாக வராதே என்று விஸ்வநாதன் கூற அதை உடனே 'பூங்கொடியே' என்று மாற்றி தந்தார் வாலி. எழுதிக் கொடுத்த பல்லவிக்கு உடனே டியூனும் போட்டுவிட்டார் விஸ்வநாதன்.
15 நிமிடங்களில் பாடல்
பாடலின் சரணத்திற்கு என்னுடைய மெட்டமைப்பிற்குதான் நீங்கள் பாட்டு எழுத வேண்டும் என்று விஸ்வநாதன் கூற பதினைந்தே நிமிடங்களில் விஸ்வநாதன் கொடுத்த மெட்டமைப்பிற்கு பாட்டை எழுதி முடித்தார் வாலி. அதை வாங்கி பார்த்த விஸ்வநாதன் வாலியைப் பார்த்து இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க என்ற ஒரே கேள்வியை மட்டும் கேட்டு படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வாலியே எழுதட்டும் என்று கூறினார்.
‛படகோட்டி' தந்த பம்பர் பரிசு
'யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன' - 'உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும்' - 'ஒடிவது போல் இடை இருக்கும்' என்று வாலியின் கைவண்ணத்தில் உருவான அனைத்து பாடல்களும் அப்படத்தில் மிக்ப்பெரிய வெற்றி பெற்றன. எம்ஜிஆரின் நல்லெண்ணமும் விஸ்வநாதனின் ஒத்துழைப்பும் கிடைக்க வாலிக்கு கிடைத்தது படகோட்டி' என்ற பம்பர் பரிசு. படத்தின் அனைத்து பாடல்களையும் வாலியே எழுதினார். எளிய தமிழில் இனிய இசையில் அமைந்த இப்படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இன்றளவும் ரசிகர்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல.
எம்ஜிஆர் கேட்டும் விட்டுக்கொடுக்காத வாலி
வாஹிணி ஸ்டூடியோவில் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்த வேளையில் எம்ஜிஆர் தன்னுடன் தனியாக பேச வேண்டும் எனறு ஒலிப்பதிவு கூடத்திற்கு வெளியே அழைத்துச் சென்று உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை என்று சொன்னதும் வாலி பதறிப்போய் என்னண்ணே என்று கேட்க, நீங்கள் ஸ்டூடியோவிற்கு வரும்போதாவது நெற்றியில் விபூதி குங்குமம் இட்டுக் கொள்ளாமல் வந்தால் தேவலை என்று சற்று தயக்கத்தோடு சொன்னார். காரணம் அவர் சார்ந்த கட்சியில் உள்ள கவிஞர்களை ஆதரிக்க வேண்டும் என்று சிலர் முணுமுணுப்பதாகவும் எம்ஜிஆர் வாலியிடம் கூறினார். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் வாலி விட்டுக்கொடுக்கவில்லை. பின்பு எம்ஜிஆரும் அதை பெரிதுபடுத்தவில்லை. அதன் பின் எம் ஜி ஆரின் மனம் அறிந்து அவருக்கான பாடல்களை புனைவதில் தனி கவனம் செலுத்தி மிகப் பெரிய வெற்றி கண்டார் வாலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
எம்ஜிஆருக்காக எழுதிய தனிப்பாடல்கள் குறிப்பாக ‛நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்...' 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ‛கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்...' 'கண் போன போக்கிலே கால் போகலாமா...', 'நான் செத்துப் பொழச்சவண்டா...' போன்ற பாடல்கள் எம்ஜிஆர் தன் இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகள் இருக்க வேண்டும் என்று ஒரு நாளும் கூறியதில்லை. அனைத்தும் தன்னிச்சையாக புனையபட்டதே தவிர எம்ஜிஆர் கூறி தான் எழுதவில்லை என்று வாலியே தன்னுடைய 'நானும் இந்த நூற்றாண்டும்' என்ற புத்தகத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
வாலிப கவிஞர்
எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், விஜய், அஜித் என்று நிற்காமல் இன்று லைம் லைட்டில் இருக்ககூடிய தனுஷ், சிலம்பரசன் என்று எல்லா தலைமுறைகளுக்கும் ஏற்ப பாடல்கள் எழுதியதாலேயே வாலிப கவியாக வாழ்ந்து 2013 ஜூலை 18ல், தன், 81வது வயதில் மறைந்தார். 15000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ, மாநில அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது உள்ளிட்டவற்றை பெற்ற இவர் 'அவதார புருஷன்' 'பாண்டவர் பூமி' 'நானும் இந்த நூற்றாண்டும்' 'ராமானுஜ காவியம்' 'கிருஷ்ண விஜயம்' போன்றவைகள் வாலியின் இலக்கிய பணிக்கு சான்றுகளாக கூறராம்.