செல்வமணி போர்ஜரி செய்தார் : இயக்குனர் சங்க தேர்தலில் களமிறங்கியது குறித்து கே.பாக்யராஜ் பேட்டி
21 பிப், 2022 - 08:27 IST
2022 - 24 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27ல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் குழு பங்கு கொள்கிறது. இவர்களின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.
இமயம் அணி சார்பில் தலைவர் - K.பாக்யராஜ், செயலாளர் - ரா. பார்த்திபன், பொருளாளர் - வெங்கட் பிரபு போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு மாதேஷ், எழில் ஆகியோரும், இணை செயலாளர் பதவிகளுக்கு A.ஜெகதீசன், R.ஜெனிஃபர் ஜீலியட், ராஜாகார்த்திக் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு, மங்கை அரிராஜன், பாலசேகரன், K.P.ஜெகன், நாகேந்திரன், KBB.நவீன், R.பாண்டியராஜன், வி. பிரபாகர், சசி, R.ஷிபி, S.S.ஸ்டேன்லி, சாய் ரமணி, வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கே.பாக்யராஜ் பேசியதாவது : இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கு என்னென்ன சிக்கல்கள், கஷ்டங்கள் உள்ளது என குழுவாக விவாதித்தே இந்த வாக்குறுதி அறிக்கையை உருவாக்கினோம். பெயருக்காக இல்லாமல் வெற்றி பெற்றவுடன் இதில் அறிவித்துள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்ற, முழுமையான அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜெகன் பேசியதில் ஒன்றை மறுக்கிறேன். இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது என்றார். ஆனால் நாங்கள் இங்கு ஜெயிக்க தான் வந்திருக்கிறோம். நல்லது செய்யத்தான் வந்துள்ளோம்.
நாங்கள் பெரிய வாக்குறுதிகள் தரவில்லை, மீன் பிடிக்க தூண்டில் மட்டுமே தருவோம் பிழைத்து கொள்வது உங்கள் சாமர்த்தியம், யாரையும் குற்றம் சொல்ல வரவில்லை, நாங்கள் நல்லது செய்ய வந்திருக்கிறோம். தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த போது செல்வமணி உடன் போட்டியிட வேண்டாம் என பலர் பயமுறுத்தினார்கள், ஆனால் எல்லாவற்றையும் சந்திக்க முடிவு பண்ணியே இறங்கியுள்ளேன்.
சர்கார் படம் கதை திருட்டு விசயத்தில் ராஜேந்திரன் யாரென்றே தெரியாது, ஆனால் அவர் வந்து பிரச்சனை என்று சொன்னபோது குழுவில் இருக்கும் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்தேன். முருகதாஸையே வீட்டுக்கு கூப்பிட்டு பேசியபிறகு, செல்வமணி அது வேற கதை இது வேற கதை என்றார் அங்குதான் எனக்கும் அவருக்கும் முதல் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த பிரச்சனையில் செல்வமணி போர்ஜரி செய்தார், நான் எடுத்த நடவடிக்கையில் பிறகு காம்ப்ரமைஸ் ஆனார்கள். நான் இருந்த சங்கத்திலேயே அவரால் போர்ஜரி நடத்த முடிகிறது எனும் போது, அவர் தலைவராக இருக்கும் சங்கத்தில் என்னென்ன செய்திருப்பார் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். இந்த தேர்தலில் கண்டிப்பாக எங்கள் அணி ஜெயிக்கும்.
இவ்வாறு பேசினார்.