மோகன்லால் நடிப்பில் கடந்த வருட இறுதியில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'நேர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து, நூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு இரு மடங்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வித்தியாசமான படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் மோகன்லால் ஒரு மல்யுத்த வீரராக வித்தியாசமான தோற்றம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஜனவரி 25ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தணிக்கை அதிகாரிகளுக்கு இந்த படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடும் விதமாக தயாராகி உள்ளது.