2021ன் இரண்டு மாதங்கள் : இயல்பு நிலைக்கு திரும்பியதா தமிழ் சினிமா
09 மார், 2021 - 11:50 IST
இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் வந்த போது உடனடியாக தியேட்டர்கள் மூடப்பட்டன. மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் தான் அரசு அனுமதி வழங்கியது. அடுத்த சில நாட்களிலேயே தீபாவளியை முன்னிட்டு சில படங்கள் வெளிவந்தன. ஆனால், மக்கள் தியேட்டர்கள் பக்கம் மிக மிகக் குறைந்த அளவிலே வந்தனர். அப்போதும் அதற்கடுத்து இரண்டு மாதங்கள் வரையிலும் சினிமா என்ற ஒரு பொழுதுபோக்கையே மக்கள் மறந்துவிட்டார்களோ என்று யோசிக்க வைத்தது.
விஜய், விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் படம் வெளிவந்தால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் மீண்டும் வருவார்கள் என பலரும் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. ஜனவரி 13ம் தேதி வெளியான மாஸ்டர் படம் அரசு அனுமதித்த 50 சதவீத இருக்கைகளிலேயே பல தியேட்டர்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக நடைபெற்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் தியேட்டர்கள் பக்கம் மீண்டும் படையெடுத்து வந்ததால் தியேட்டர்காரர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால், அவர்களது மகிழ்ச்சி நிரந்தரமானதாக இல்லை. அதற்குப் பின் வெளிவந்த படங்களுக்கு மக்கள் வரவேயில்லை. சில முன்னணி நடிகர்களின் படங்கள் வந்த போதும் கூட அதை அவர்கள் பெரிதாக எண்ணவில்லை.
மார்ச் மாதத்திற்குப் பிறகு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 37 படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை, வசூலையும் குவிக்கவில்லை. ஜனவரி மாதத்திலாவது அது மாறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், மாஸ்டர் படம் தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் நவம்பர், டிசம்பர் மாதத்திய நிலைமைதான் தொடர்ந்தது.
இந்த 2021ம் வருடத்தின் முதல் நாளே சினிமாவின் வெளியீட்டுக் கிழமையான வெள்ளிக்கிழமையாக அமைந்தது. ஜனவரி 1ம் தேதியான அன்றைய தினம் ஆதிக்க வர்க்கம், பேய் இருக்க பயமேன் ஆகிய படங்கள் வெளிவந்தன.
அதற்கடுத்து ஜனவரி 8ம் தேதியில் “குலசேகரப்பட்டிணம், பச்சைக்கிளி, சிந்தலக்கரை தாயே, வி ஆகிய படங்கள் வெளிவந்தன. மேலே, குறிப்பிட்ட படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் கடந்து போயின.
ஜனவரி 13ம் தேதியன்று மாஸ்டர் படம் வெளிவந்தது. விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த படம். படத்திற்குக் கொஞ்சம் நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும், அதற்கு முன்பு சுமார் ஒன்பது மாதங்கள் தியேட்டர்கள் பக்கமே போகாமல் இருந்த மக்களுக்கு இந்தப் படத்தை எப்படியும் தியேட்டரில் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன் காரணமாகவே படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது. 200 கோடியைக் கடந்து படம் வசூலித்துள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
ஜனவரி 14ம் தேதியன்று சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் வெளிவந்தது. குறுகிய காலத்தில் தயாரான ஒரு படம். அவசர அவசரமாகப் படமாக்கப்பட்ட படம் என்பது திரையில் வந்த பிறகு நன்றாகவே தெரிந்தது. ஏதோ ஒரு கடமைக்கு படத்தை எடுத்து வெளியிட்டதாகவே இருந்தது.
ஜனவரி 28ம் தேதியன்று சிபிராஜ் நடித்த கபடதாரி படம் வெளிவந்தது. கன்னடத்தில் வெளிவந்த படத்தின் ரீமேக். ரசிகர்கள் இந்தப் படத்தைக் கண்டு கொள்ளவேயில்லை.
ஜனவரி 29ம் தேதியன்று “எங்க ஊரு பூக்காரி, காதலித்த பூக்கள், கீழக்காடு, செஞ்சோலை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இப்படத்தில் நடித்தவர்கள் யார் என்பதை தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை. 2021ல் டிரைலர், டீசரைக் கூட வெளியிடாமல் படங்களை வெளியிடுகிறார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி “ஆட்கள் தேவை, சிதம்பரம் ரயில்வே கேட், களத்தில் சந்திப்போம், டிரிப்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் களத்தில் சந்திப்போம் படம் ஓரளவிற்கு ரசிக்கும்படியான படமாக இருந்தது. ஆனால், படத்திற்கு பெரிய அளவில் விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. அப்படி ஏதாவது செய்திருந்தால் இந்தப் படம் இன்னும் அதிகமான வசூலைக் கொடுத்திருக்கும். அப்படியும் படம் 25 நாட்கள் ஓடியதாக பின்னர் விளம்பரம் கொடுத்தார்கள்.
பிப்ரவரி 12ம் தேதி “கேர் ஆப் காதல், இது விபத்து பகுதி, குக்கிராமம், குட்டி ஸ்டோரி, நானும் சிங்கிள்தான், பாரிஸ் ஜெயராஜ்” ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆந்தாலஜி படமாக வெளிவந்த குட்டி ஸ்டோரி படத்தை பிரபல இயக்குனர்கள் இயக்கியிருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை.சந்தானம் நடித்து வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படம் பார்க்கும்படியான படமாகவே இருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ இந்தப் படத்தை விளம்பரம் செய்து ஓட வைக்க வேண்டும் என படக்குழுவினர் நினைக்கவேயில்லை. அதை ஒழுங்காகச் செய்திருந்தால் மாஸ்டர் படத்திற்கடுத்து லாபத்தைக் கொடுத்திருக்கக் கூடிய படமாக இந்தப் படம் அமைந்திருக்கும். நானும் சிங்கிள்தான் படமெல்லாம் சிங்கிள் டே கூட ஓடவில்லை.
பிப்ரவரி 19ம் தேதி “ஆண்கள் ஜாக்கிரதை, சக்ரா, கமலி பிரம் நடுக்காவேரி, லோகா, பழகிய நாட்கள், சில்லு வண்டுகள்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் விஷால் நடித்த சக்ரா படம் சராசரிக்கும் கீழான ஒரு படமாக இருந்து அதிர்ச்சியைக் கொடுத்தது. கமலி பிரம் நடுக்காவேரி படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது- ஆனால், தியேட்டர்களுக்கு மக்கள் வந்து படத்தைப் பார்க்கவில்லை.
பிப்ரவரி 26ம் தேதி “கால்ஸ், சென்னையில் ஓட ஓட, பாதி உனக்கு பாதி எனக்கு, சங்கத்தலைவன், சரியா தவறா, செந்தா, வேட்டை நாய்” ஆகிய படங்கள் வெளிவந்தன. சங்கத்தலைவன் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். படத்திற்கும் ஓரளவிற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாகவே வந்தன. தனது இயக்கத்தில் வெளிவரும் படத்திற்கு இருக்கும் வரவேற்பு தான் வெளியிடும் படத்திற்கு இருக்க வாய்ப்பில்லை என்பதை வெற்றிமாறனுக்கு இந்தப் படம் உணர்த்தியிருக்கும்.
2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுமார் 36 படங்கள் வெளிவந்தன. இவற்றில் பெரிய வெற்றி மற்றும் வசூலைப் பெற்ற படமாக மாஸ்டர் படம் இருந்தது. அதற்கடுத்து மிகச் சுமாரான வெற்றி பெற்ற படமாக களத்தில் சந்திப்போம் படம் இருந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் வசூலை அள்ளியிருக்கலாம் என்ற படமாக பாரிஸ் ஜெயராஜ் படம் இருந்தது. ரசிகர்களை ஏமாற்றிய படமாக சக்ரா படம் இருந்தது. நன்றாக இருந்தும் மக்கள் வந்து பார்க்காத படங்களாக கமலி பிரம் நடுக்காவேரி, சங்கத்தலைவன் ஆகிய படங்கள் இருந்தன. மற்ற படங்கள் அனைத்துமே 2021ம் ஆண்டு வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையில் சேரும் படங்களாகவே இருந்தன.
2021ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் இயல்புக்கு வந்தது போல வந்து மீண்டும் முடக்கத்தை உருவாக்கிய மாதங்களாகவே இருந்தன. இன்னும் 20 நாட்களில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது.
சுவற்றில் சினிமா போஸ்டர்களைக் கூட ஒட்ட முடியாமல் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே, எந்தப் படம் வருகிறது, எந்தப் படம் தியேட்டர்களில் ஓடுகிறது என்பது ரசிகர்களுக்குத் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் போஸ்டர்களும் இல்லையென்றால் அவ்வளவுதான்.
இந்த மார்ச் மாதக் கடைசியிலும் ஏப்ரல், மே மாதங்களிலும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளன. அவையாவது தமிழ் சினிமாவை மீண்டும் பரபரப்பான இயல்பு நிலைக்குத் திரும்ப வைக்கும் என்று நம்புவோமாக.
2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியான படங்கள்...
ஜனவரி, 2021ஜனவரி 1 : ஆதிக்க வர்க்கம், பேய் இருக்க பயமேன்
ஜனவரி 8 : குலசேகரப்பட்டிணம், பச்சைக்கிளி, சிந்தலக்கரை தாயே, வி
ஜனவரி 13 : மாஸ்டர்
ஜனவரி 14 : ஈஸ்வரன்
ஜனவரி 28 : கபடதாரி
ஜனவரி 29 : எங்க ஊரு பூக்காரி, காதலித்த பூக்கள், கீழக்காடு, செஞ்சோலை
பிப்ரவரி, 2021பிப்ரவரி 5 : ஆட்கள் தேவை, சிதம்பரம் ரயில்வே கேட், களத்தில் சந்திப்போம், டிரிப்
பிப்ரவரி 12 : கேர் ஆப் காதல், இது விபத்து பகுதி, குக்கிராமம், குட்டி ஸ்டோரி, நானும் சிங்கிள்தான், பாரிஸ் ஜெயராஜ்
பிப்ரவரி 19 : ஆண்கள் ஜாக்கிரதை, சக்ரா, கமலி பிரம் நடுக்காவேரி, லோகா, பழகிய நாட்கள், சில்லு வண்டுகள்
பிப்ரவரி 26 : கால்ஸ், சென்னையில் ஓட ஓட, பாதி உனக்கு பாதி எனக்கு, சங்கத்தலைவன், சரியா தவறா, செந்தா, வேட்டை நாய்