வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
2020ல் கொரோனா தாக்கம் வந்த போது தியேட்டர்கள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஓடிடி நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றன. முக்கிய நடிகர்களின் படங்கள் சிலவும், சில சிறிய படங்களும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. அதன் பின் தியேட்டர்களில் வெளியான படங்களும் ஓடிடிக்காக நல்ல விலைக்கு விற்கப்பட்டன. இந்த நிலை சில வருடங்களிலேயே சரிவை சந்திக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
வளர்ச்சியும்... சரிவும்...
கடந்த 2020ம் ஆண்டு ஓடிடி தளங்களில் 20க்கும் மேற்பட்ட படங்கள் நேரடியாக வெளியாகின. 2021ம் ஆண்டில் அது இரண்டு மடங்களாக அதிகரித்து 40க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடியில் நேரடியாக வந்தன. 2022ம் ஆண்டில் ஓரளவிற்கு குறைந்து சுமார் 25 படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகின. 2023ல் அதிரடியாகக் குறைந்து 10க்கும் குறைவான படங்கள் மட்டுமே வெளிவந்தன. இந்த 2024ம் ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. இது நேரடியாக வெளியான படங்களின் கணக்கு.
அதே சமயம் ஒவ்வொரு வருடமும் தியேட்டர்களில் வெளியாகும் அனைத்து படங்களுமே ஓடிடி நிறுவனங்களால் வாங்கப்படுவதில்லை. டாப் வரிசையில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் அல்லது விமர்சன ரீதியாக அதிக பாராட்டைப் பெற்ற படங்களை மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் தற்போது வாங்க ஆரம்பித்துள்ளன. மற்ற படங்களை அவர்கள் கண்டு கொள்வதேயில்லை.
எந்தெந்த படங்கள் எவ்வளவு விலை
ரஜினி, விஜய் நடித்த படங்களின் ஓடிடி உரிமைகள் 100 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகின்றன. ஏனைய முன்னணி நடிகர்களின் படங்கள் 50 கோடி முதல் 100 கோடி வரை விற்பனையாகிறது என்கிறார்கள். தியேட்டர்களில் ஓரளவிற்கு ஓடிய முன்னணி அல்லாத மற்ற நடிகர்களின் படங்கள், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறும் படங்கள் 3 கோடி முதல் 20 கோடி வரையிலான விற்பனையைப் பெறுகின்றன. மற்றபடி ஓடாத படங்களாக யார் படங்கள் இருந்தாலும் அவற்றை வாங்க முன்னணி நிறுவனங்கள் முன்வருவதே இல்லை என்பதுதான் இன்றைய கள நிலவரம்.
பாதிக்கு பாதி
உதாரணத்திற்கு கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 250 படங்கள் வரை தியேட்டர்களில் வெளிவந்தன. அவற்றில் 120 படங்களை மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் வாங்கி உள்ளன. இன்னும் 130 படங்களை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்கவில்லை. ஏறக்குறைய பாதியளவிலான படங்கள் அப்படியே உள்ளன.
டிவி இடத்தில் ஓடிடி
பொதுவாக ஒரு படத்தின் உரிமையை குறிப்பிட்ட வருடங்களுக்கோ (Non Perpetual), அல்லது நிரந்தர காலம் (Perpetual) என சொல்லப்படும் முறையிலோதான் திரைப்படங்களுக்கான வியாபாரம் நடக்கும். சாட்டிலைட் டிவி உரிமை அப்படிப்பட்ட முறையில்தான் வாங்கப்பட்டது. தியேட்டர்களைத் தவிர்த்து மற்ற உரிமை என்று வந்த போது சாட்டிலைட் டிவி உரிமைதான் 30 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமாகி பல தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியது. தற்போது அந்த இடத்தை ஓடிடி நிறுவனங்களும் பங்கு போட ஆரம்பித்துள்ளது.
எந்த முறையில் விற்பனை
இதனிடையே, ஒருசில ஓடிடி நிறுவனங்கள் புதிய உரிமை முறைகளை ஆரம்பித்து அதற்குள் தயாரிப்பாளர்கள் கட்டுப்பட்டு வந்தால் அவர்களது படங்களின் உரிமைகளை வாங்கிக் கொள்கின்றன. பிக்சட் லைசன்ஸ் முறை, ஹைபிரிட் மாடல், பிவிடி என மூன்று முறைகளை முன்னணி ஓடிடி நிறுவனமான பிரைம் வீடியோ கடைபிடித்து வருகிறது.
பிக்சட் லைசன்ஸ் முறையில் ஒரு படத்தின் ஓடிடி உரிமை ஒட்டுமொத்தமாய் வாங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கென தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட தொகையைத் தந்துவிட்டு, அதன் பிறகான வருமானத்தில் தயாரிப்பாளருக்கும், ஓடிடி நிறுவனத்திற்கும் இடையே பங்கிட்டுக் கொள்வது ஹைபிரிட் மாடல். படத்தை ஓடிடியில் வெளியிட்டு அது எத்தனை மணிநேரம் பார்க்கப்படுகிறதோ அதற்கேற்றபடி குறிப்பிட்ட தொகையைத் தயாரிப்பாளருக்கு அளிப்பது பிவிடி முறை. படம் வெளியான நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்தால் ஒரு மணி நேரத்திற்கு 4 ரூபாய், 60 நாட்களுக்குப் பிறகு வந்தால் 3 ரூபாய் என தயாரிப்பாளருக்குத் தந்துவிடுவார்கள்.
உதாரணத்திற்கு ஒரு படம் ஓடிடி தளத்தில் 50 மில்லியன் நிமிடங்கள் பார்வைகைளைப் பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அது 8 லட்சத்திற்கும் கூடுதலான மணி நேரமாகும். ஒரு மணி நேரத்திற்கு 4 ரூபாய் என்றால் 30 லட்சத்திற்கும் கூடுதலான தொகை தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். சில சிறிய படங்கள் இந்த முறையில் கொடுக்கப்பட்டு தியேட்டர்களில் கிடைக்கும் வருவாயை விட அதிகமான வருவாயை ஓடிடி மூலம் பெறுகின்றன.
முன்னணி நடிகர்கள் படங்களுக்கும் சமயங்களில் சிக்கல்
இருப்பினும் சில பெரிய படங்களுக்கான ஓடிடி உரிமைகளும் அவ்வளவு சுலபத்தில் விற்க முடியவில்லை என்பதும் உண்மை. விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'லியோ' படத்தின் ஓடிடி உரிமை 120 கோடி விற்கப்பட்டது எனத் தகவல். ஆனால், விஜய் தற்போது நடித்து வரும் 'கோட்' படத்தின் ஓடிடி உரிமையை அவ்வளவு விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லையாம். ரஜினி நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் ஓடிடி உரிமை 100 கோடி என்றார்கள். ரஜினி சிறப்புத் தோற்றத்தில் என்று சொன்னாலும் படம் முழுவதும் வந்த 'லால் சலாம்' படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லை.
இவை தவிர ஓடிடி உரிமையை நம்பி பட்ஜெட் போடப்பட்ட சில படங்களின் படப்பிடிப்புகள் தாமதமாகவே ஆரம்பமாகின. அப்படங்களின் ஓடிடி உரிமையைப் பேசிவிட்டு படத்தை ஆரம்பிக்கலாம் என்று அவர்கள் காத்திருந்தார்கள். ஆனால், அப்படங்களை வாங்க யாருமே முன் வராததால் பின்னர் பைனான்ஸ் வாங்கி படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள். ஒரு டாப் நடிகர், இளம் இயக்குனரின் அறிவிக்கப்பட்ட படம் கூட டிராப் ஆனதற்குக் காரணம் ஓடிடி விவகாரம்தான் என்பது கோலிவுட் கிசுகிசு.
தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்
ஓடிடியில் அதிக விலை கொடுத்து சில டாப் நடிகர்களின் படங்கள் வாங்கப்படுவதால் அவற்றிற்கான சாட்டிலைட் உரிமைகளின் விலைகள் முன்பை விட குறைவாகவே வாங்கப்படுகிறதாம். சில டிவிக்கள், ஓடிடி நிறுவனங்களையும் வைத்துள்ளதால் அவர்கள் இரண்டு உரிமைகளையும் சேர்த்தே வாங்க விரும்புகிறார்களாம்.
ஓடிடியில் வியாபாரம் இப்படி சரிந்து வருவது தியேட்டர்காரர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது. இருந்தாலும் அதன் மூலம் ஒரு 'பிக்சட்' வருமானமாக வரும் தொகை நின்று போவது தயாரிப்பாளர்களுக்கு பின்னடைவைத் தந்துள்ளது.
பாதிக்கும் மேற்பட்ட படங்களை தியேட்டர்காரர்களும் கண்டு கொள்வதில்லை, காட்சிகளைத் தருவதில்லை. ஓடிடி நிறுவனங்களும் அவற்றை எந்தவிதமான முறையிலும் வாங்க முன் வருவதில்லை. ஆனாலும், அப்படி தயாராகும் படங்களின் எண்ணிக்கை குறையவுமில்லை.
மாறி மாறி வரும் பிரச்னைகள்
காலத்திற்கேற்றபடி மாறி மாறி பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது திரையுலகம். ஒரு காலத்தில் திருட்டு வீடியோ கேசட், கேபிள் டிவியில் புதிய படங்கள், சாட்டிலைட் டிவியில் புதிய படங்கள் ஒளிபரப்பு, திருட்டு விசிடி, பைரசி இணையதளங்கள், டெலிகிராம் உள்ளிட்ட மொபைல் செயலியில் புதிய படங்கள் பகிர்வு, ஓடிடியில் நேரடி வெளியீடு, ஓடிடியில் எட்டு வாரங்களில் புதிய படங்கள் என காலத்திற்கேற்றபடி பிரச்சனைகளுடனே நகர்ந்து வருகிறது சினிமா.
இவற்றைத் தவிர சினிமா தியேட்டர்களில் அதிகக் கட்டணம், உணவுப் பண்டங்களின் அபரிமிதமான விலை, பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றையும் சமாளித்து தியேட்டர்களுக்குப் போகிறார்கள் ரசிகர்கள்.
கஜானாவை நிரப்பும் ஹீரோக்கள்
கலையை வாழ வைப்போம் என்று சொல்லிக் கொள்ளும் சில ஹீரோக்கள் அவர்களது கஜானா நிரம்பினால் சரி என 150 கோடி, 200 கோடி என அவர்களது சம்பளங்களை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். வேறு எதையும் அவர்கள் கண்டுகொள்வதேயில்லை என திரையுலகினரே குற்றம்சாட்டுகிறார்கள்.
எந்தப் பிரச்சனையும் முழுமையாகத் தீராமல் காலப் போக்கில் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அவற்றையும் சமாளித்து கடந்து போய்க் கொண்டேயிருக்கிறது கலையுலகம்.