பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் | நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' | புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி |
இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா என்றுதான் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு அடையாளமாக இருந்தது. இந்தியாவிலிருந்து உலக அளவில் வெளியாகும் படங்கள் என்றால் அது ஹிந்திப் படங்களாகத்தான் இருக்கும் என்பதுதான் பலரது நினைப்பாக இருந்தது. ஆனால், இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி என பல மொழித் திரைப்படங்களும் தயாராகி வெளியாகிறது என்பது வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் தெரியாமல் இருந்தது.
அப்படி ஒரு அடையாளத்தை ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'பாகுபலி' மாற்றியது. உலக அளவில் ஒரு தென்னிந்தியப் படம் 1000 கோடி வசூலைக் கடந்து பெரும் சாதனையைப் படைத்தது. ஹிந்தி சினிமா அல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களும் இந்தியாவில் உருவாகின்றன என்பது பலருக்கும் தெரிய வந்தது. அதற்கடுத்து அதே ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி கடந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் உலக அளவில் வெளியாகி 1000 கோடி வசூலைக் கடந்தது. இப்போது ஆஸ்கர் விருது வரை சென்றுள்ளது.
கடந்த வருடம் வெளியான கன்னடப் படமான 'கேஜிஎப் 2' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது. அடுத்து 'காந்தாரா' படமும் 400 கோடி வசூலைக் கடந்தது. கடந்த 2022ம் வருடத்தில் ஒரு தெலுங்குப் படம், ஒரு கன்னடப் படம் ஆகியவை 1000 கோடி வசூலைக் கடந்து ஆச்சரியப்படுத்தியது. அதே சமயம் தமிழில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலை மட்டுமே கடந்தது.
சரித்திரக் கதையான 'பொன்னியின் செல்வன்' நாவலில் இருந்து சில பக்கங்களை உருவித்தான் 'பாகுபலி' படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. அப்படமே 1000 கோடி வசூலைக் கடந்த போது 'பொன்னியின் செல்வன்' படம் ஏன் 1000 கோடி வசூலைக் கடக்கவில்லை. அந்தப் படத்தை ஏன் இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சரியாகக் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. இத்தனைக்கும் அந்தப் படத்தில் மணிரத்னம், ஏஆர் ரகுமான் போன்ற பெரும் திறமைசாலிகள் இருந்தார்கள்.
படத்தை புரமோஷன் செய்ததில் தவறா, அல்லது மார்க்கெட்டிங் செய்வதில் தவறா என்பதை அவர்களும், தயாரிப்பு நிறுவனமும் ஆராய்ந்து பார்த்தார்களா என்பது தெரியாது. அடுத்த மாதம் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தையாவது 1000 கோடி வசூலைக் கடக்கும் அளவிற்குக் கொண்டு போய் சேர்ப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
'பாகுபலி' படத்தின் கதாநாயகனாக பிரபாஸ் அதற்கு முன்பு வரை தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத்தான் இருந்தாரே தவிர, டாப் 5 பட்டியலில் கூட இல்லாமல்தான் இருந்தார். அது போல 'கேஜிஎப்' படத்தின் நாயகன் யஷ் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகக் கூட இல்லாமல்தான் இருந்தார். அவர்களால் சாதிக்க முடிந்து 1000 கோடி வசூலைக் கடக்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பதை இங்குள்ள தமிழ் ஹீரோக்கள் நினைத்துப் பார்த்தார்களா என்பது தெரியவில்லை.
100 கோடி வசூலைக் கடந்தாலே ஆஹா, ஓஹோவென கொண்டாடும் விஜய், அஜித் ரசிகர்கள் எப்போது இந்த மாதிரியான 1000 கோடி வசூலைப் பற்றி யோசிக்கப் போகிறார்கள். சொல்லப் போனால் பிரபாஸ், யஷ் படைத்த சாதனைகளுக்கு முன்பு விஜய், அஜித் செய்த சாதனைகள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிய கதைதான். தமிழகத்தைத் தாண்டி அவர்களது படங்கள் வசூலில் பெரிய சாதனைகளைப் படைக்கவில்லை.
விஜய், அஜித் இருவருக்குமே இன்னும் தெலுங்கு மார்க்கெட்டே எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. தமிழை விடவும் தெலுங்கு மார்க்கெட்தான் அதிக வசூலைக் கொட்டிக் குவிக்கும் மார்க்கெட். அங்கு அவர்களால் பெரிய வசூலை இதுவரை குவிக்க முடியவில்லை. ஏன் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன், 'புஷ்பா' படம் மூலம் இங்கு வசூலித்த வசூலைக் கூட விஜய், அஜித்தின் படங்கள் தெலுங்கில் வசூலைக் குவித்து லாபத்தைக் கொடுக்கவில்லை.
விஜய், அஜித் இருவரும் பிரபாஸ், யஷ் ஆகியோரை விடவும் அனுபவம் வாய்ந்தவர்கள், தமிழில் பல வெற்றிகளைக் குவித்தவர்கள் என்று சொன்னாலும் மாபெரும் வெற்றி என்பது அவர்களது நிறைவேறாத கனவாகவே உள்ளது. மாபெரும் வெற்றி என்று குறிப்பிடுவது பான் இந்தியா வெற்றி. அப்படி தேசிய அளவில் ஒரு வெற்றியைப் பெற்றால்தான் அதை மாபெரும் வெற்றி என்று சொல்ல முடியும்.
சரி, விஜய், அஜித்தை விடுங்கள். அவர்களுக்கு சீனியரான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரது படங்கள் கூட சமீப காலத்தில் பான் இந்தியா கவனத்தை ஈர்க்கவேயில்லை. இத்தனைக்கும் கமல், ரஜினி இருவருமே ஹிந்தித் திரையுலகத்திற்கு நன்கு தெரிந்த முகங்கள். கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் தமிழில் மட்டும்தான் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தை ஹிந்தியில் சீண்டவே இல்லை. அந்தப் படத்தின் கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடிய ஒரு கதைதான். கமல்ஹாசனும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தும் அதை ஹிந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.
இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்க முடியும் ?. ஹீரோக்கள் என்பதை மீறி ஒரு படத்தில் கதையிலோ, காட்சிகளிலோ ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும். அடுத்து அந்தப் படங்களை சரியான விதத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு மொழிக்கென்றும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நாம் கேள்விப்பட்ட வரையில் 'பொன்னியின் செல்வன்' படத்தை தமிழைத் தவிர மற்ற மொழிகளில் சரியான விதங்களில் மீடியாக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை என்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் எல்லாம் பெயருக்கு ஒரு விழாவை நடத்திவிட்டு அதோடு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். அந்தந்த மாநில மொழிகளில் முன்னணி ஊடகங்களிடம் தனித்தனியாக தங்களது படத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசவேயில்லை என்று சொல்கிறார்கள். அதனால், அந்தந்த மீடியாக்களும் படத்தைப் பற்றி கண்டு கொள்ளவேயில்லை என்பதுதான் உண்மை. அதோடு, படத்தைப் பற்றிய நெகட்டிக் கருத்துக்களையும் சிலர் பரப்பிவிட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த படம், மற்ற மொழி ரசிகர்களால் ரசிக்க முடியாது என்றுதான் அந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்த போது சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பார்க்க முடிந்தது.
1000 கோடி என்பது மட்டுமே சினிமாவுக்கான எல்லையல்ல. அது ஒரு வியாபார எல்லை. ஆனால், அதில் ஒரு அடையாளமும் அடங்கியிருக்கிறது. இத்தனை வருடங்களாக தென்னிந்திய சினிமா என்றால் வசூல் ரீதியாக தமிழ் சினிமாதான் முன்னணியில் இருந்தது. ஆனால், அந்த இடத்தை இப்போது தெலுங்கு, கன்னட சினிமாக்கள் பெற்று முந்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த வருடம் தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றிப் படங்களான 'விக்ரம், பொன்னியின் செல்வன்' ஆகியவை சேர்ந்து வசூலித்த 1000 கோடி ரூபாய் வசூலை தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒரு படங்களே வசூலித்துவிட்டன. அடுத்தும் அவர்கள் தொடர்ந்து பல பான் இந்தியா படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வருடமும் பலத்த போட்டி இருக்கப் போகிறது. இந்த ஆண்டில் தெலுங்கு, கன்னடத்திலிருந்து பல பான் இந்தியா படங்கள் வரப்போகின்றன.
ஆனால், தமிழ் சினிமா இன்னமும் கதாநாயர்களின் பின்னால் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களை மீறி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ முன் வரத் தயங்குகிறார்கள்.
இருப்பினும் இந்த ஆண்டில் தமிழிலும் வெளியாக உள்ள சில படங்கள் ஒரு நம்பிக்கை விதையை விதைத்துள்ளது. அதில் ஏதாவது ஒரு படமாவது 1000 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைக்குமா எனக் காத்திருப்போம்.
மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', ரஜினிகாந்தின் 'ஜெயிலர்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', விஜய்யின் 'லியோ', அஜித்தின் '62'வது படம், சூர்யாவின் '42'வது படம், விக்ரமின் 'தங்கலான்', கார்த்தியின் 'ஜப்பான்', தனுஷின் 'கேப்டன் மில்லர்', சிம்புவின் '48'வது படம், சிவகார்த்திகேயனின் 'அயலான்', என சில படங்கள் பான் இந்தியா படங்களுக்குரிய தகுதியுடன் இந்த ஆண்டில் வர உள்ளன. அவற்றைச் சரியான விதத்தில் கொண்டு போய் சேர்த்தால் தற்போது தடுமாறி வரும் தமிழ் சினிமா, கொஞ்சம் தாவிக் குவித்து ஓட முடியும், செய்வார்களா ?.