பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் | நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' | புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி |
திரைப்படத்திற்கு முகவரியாக பாடல் இருந்தது ஒரு காலம். இதுவரை 760 பாடலாசிரியர்கள் தமிழ் சினிமாவிற்கு பாடல்கள் புனைந்துள்ளனர். இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களையே இச்சமூகம் கொண்டாடுகிறது. எம்.ஜி.ஆர்., மூலம் அறிமுகமான பாடலாசிரியர்களில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் நா.காமராசன் அடங்குவர். இலக்கணம், இலக்கியச் செறிவு மிக்க பாடல்களைத் தந்த இவர்களை தமிழ்ச்சமூகம் கொண்டாடியதில்லை.
புலவர் புலமைப்பித்தன்
கோவை மாவட்டம் இருகூரில் பிறந்தவர். சூலுார் நுாற்பாலையில் வேலை செய்து கொண்டே தமிழ்ப் புலவர் படிப்பை முடித்தார். 'எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே,' 'சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே,' என எழுதி சிந்திக்க வைத்தவர். இவரது ' ஆயிரம் நிலவே வா'-கவித்துவமிக்க பாடல் மூலம் எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் பாட்டுப் பயணம் துவங்கியது.
' நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி' பாடலில் 'அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளிப் பருகும் கம்பரசம் நான் எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை கடலும் அலையும் எப்பொழுது துாங்கியது யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் யார் இசைத்தாலும் இன்னிசை பாடும் மீட்டும் கையில் நானோர் வீணை,'- விலைமாதுவின் வலியை இதைவிட யாரும் எழுத இயலாது.
'கல்யாண தேனிலா, காய்ச்சாத பால் நிலா.. உன் பார்வை துாண்டிலா நான் கைதி கூண்டிலா' என 'லா'வில் முடித்திருப்பார். 'அதோ மேக ஊர்வலம்..., முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும், உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல,' வியக்கும் காதல் வரிகள்.
'உன்னால் முடியும் தம்பி' என முதல் வரியிலேயே நம்பிக்கை விதைத்தவர். 'புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல' - சமூக யதார்த்தத்தை பதிவு செய்தார். 'அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே, தேனுாறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே' என்ற வரிகள் இவரின் இசை ஞானத்திற்குச் சான்று.
'நானொரு பொன்னோவியம் கண்டேன்' பாடலில்,'சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் குறி போடல் சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே,' என வித்தை காட்டியிருப்பார். 'பாடி அழைத்தேன் உன்னை..., கோவிலில் தேவிக்கு பூசை அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை, நீ அந்த மாணிக்க வானம் இந்த'- காதல் சோக பாடலிலும் சமூக ஏற்றத் தாழ்வை பதிவிட்டவர். 'சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே..., கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்,'-இவ்வரிகளுக்காகவே இதுபோன்ற பாடல்களை கேட்கத் தோன்றும்.
'செவ்வந்தி பூக்களில் செய்த வீடு' பாடலில் 'வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம்,'- கற்பனையின் உச்சம். 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ', 'சங்கத்தில் பாடாத கவிதை', 'தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே' என உச்சம் தொட்ட பாடல்களை தந்தும், 'எனக்கு வியாபாரப் புத்தியும் இல்லை; விளம்பர உத்தியும் தெரியவில்லை,' என்றவர் புலமைப்பித்தன்.
கவிஞர் நா.காமராசன்
தேனி மீனாட்சிபுரத்தில் பிறந்து, மதுரை தியாகராசர் கல்லுாரியில் தமிழ் பயின்றவர். புதுக்கவிதை இயக்க முன்னோடி. 'சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள்,' என திருநங்கைகள் குறித்து 1970ல் கவி எழுதியவர். 'தேன் மொழி எந்தன் தேன்மொழி' பாடலில் 'கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான் கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான் கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை'- இப்படி ஆயிரத்தில் ஒரு பாடலில் மட்டுமே இலக்கிய உச்சம் தொட முடியும்.
'சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது,'- கவிஞரின் உணர்வை பெண்களைப் பெற்றவர்களால் தான் உணர முடியும். பாடல் வெற்றிக்கு பின் கவிஞரை 'சிட்டுக் கவிஞரே' என நடிகர் ரஜினி அழைப்பார். 'கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்,' பாடலில் 'வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்-கவிஞரின் உவமை அபாரம்.
'ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே.., சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்,'- சிலேடை கொண்ட பொக்கிஷப் பாட்டு. 'பாடும் வானம்பாடி ஹா' பாடலில் 'மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ'- கவிஞரின் கற்பனைக்கு ஏற்ப இளையராஜா இசை அமைத்திருப்பார். 'வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா'- இது ஒரு காலத்தில் இளைஞர்களை ஆட, வைத்தது. 'மல்லிகையே மல்லிகையே துாதாகப் போ...,' என மயிலிறகாய் வருடியவர். இரு தகுதியான ஆளுமைகள் தங்களை முன்னிறுத்தாமல் படைப்பை முன்னிறுத்தி மரித்த போதும், அவர்களின் கீதங்கள் காற்றலைகளில் மிதந்து நம்மை வருடுகிறது.