வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரகுநந்தன். 'மதயானைக் கூட்டம்' படத்தில் 'கோணக்கொண்டைக்காரி' பாடல் இவரை பட்டி, தொட்டியெல்லாம் சென்றடைய வைத்தது. 'சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மஞ்சப்பை, கொடிவீரன், அயோத்தி, கோழிப்பண்ணை செல்லத்துரை' என இவரது இசை வீரியம் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 35 படங்கள் வரை நீள்கிறது. மேற்கத்திய இசை, பாரம்பரிய இசை, கஜல் கலந்த கலவை இவர். 'நீர்ப்பறவை' படம் கொரியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது. அதில் இடம்பெற்றுள்ள 'பற பற பற பறவை ஒன்று...,' பாடல் இசையை ரசித்த வெளிநாட்டினர் சிலர் கண்ணீர் சிந்திய நெருடலான அனுபவம் மாறுபட்டது. இவரது இசை சென்றடைந்த அளவிற்கு இவரது பெயர் மக்களிடம் சென்றடையவில்லை. இதற்கு ரகுநந்தன் மொழி நடையில் பதில்கள்...
இசை மீது ஆர்வம் வந்தது எப்படி
திருநெல்வேலி மாவட்டம் செண்பகராமன்நல்லுாரில் பிறந்தேன். பிளஸ் 2 படித்துள்ளேன். சிறு வயதில் இலங்கை வானொலியில் சினிமா பாடல்களை கேட்டு இசை ஆர்வம் வந்தது. திருநெல்வேலியில் ராஜம்மாள் என்பவரிடம் வாய்ப்பாட்டு, ஆர்மோனியம் கற்றேன். எனது சங்கீதத்திற்கு முதல் குரு அவர்தான். சென்னையில் இசைக் கல்லுாரியில் சேரலாம் என சென்றேன். ஓரளவு சங்கீதம் தெரிந்தால் அங்கு இடம் கிடைக்கும் என நினைத்தேன்.வர்ணம், கீர்த்தனையை தாண்டி பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இடம் கிடைக்கவில்லை. சொந்த ஊருக்கு செல்ல விருப்பமில்லை. முன்வைத்த காலை பின் வைக்கக்கூடாது என பல இடங்களில் வேலை செய்தேன். இசையை தொடர்ந்து கற்றேன்.
இசையமைக்கும் வாய்ப்பு கிட்டியது எப்படி?
'செம்பருத்தி' பட எடிட்டர் உதயசங்கரை சந்தித்தது திருப்புமுனையாக அமைந்தது. ஒரு விளம்பரத்திற்கு இசையமைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தன்னம்பிக்கை கொடுத்தார். பின் துார்தர்ஷன் தொடர்களுக்கும், பக்தி பாடல்களுக்கும் இசையமைத்தேன்.
சினிமா வாய்ப்பு அமைந்தது எப்படி
எனது பக்தி இசை ஆல்பத்தை கேட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தை. அந்த நேரம் வெயில் படத்தில் முதன்முதலாக இசையமைத்தார் ஜி.வி., அப்பட பாடல் பதிவின்போது உடனிருந்தேன். அவருடன் 30 படங்களில் பணிபுரிந்தேன். எடிட்டர் காசி விஸ்வநாதன் (அழகிய தீயே, ஆளவந்தான்), ஒளிப்பதிவாளர் செழியன் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
புது பாடகர்கள், கவிஞர்களை அதிகம் அறிமுகப்படுத்துகிறீர்களே
'நீர்ப்பறவை'யில் ஆனந்த் அரவிந்தாக் ஷனை அறிமுகப்படுத்தினேன். 'அயோத்தி' படத்தில் 'காற்றோடு பட்டம் போல...,' பாடல் மூலம் சாரதிக்கு வாய்ப்பு கொடுத்தேன். புது பாடகர்கள், கவிஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எனக்கு தயக்கமில்லை.
உங்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கருதுகிறீர்களா
எனது பாடல்கள் ரசிகர்கள் மனதில் அமர்ந்தாலும் எனது பெயரை கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டேன். எப்படியாவது ஹிட் பாடல்களை கொடுக்க வேண்டும் என்ற ஓட்டத்தில் எனது பெயரை முன்னிலைப்படுத்துவதில் தன்னை அறியாமல் கோட்டைவிட்டது வருத்தம்தான்.
மறக்க முடியாத அனுபவம்
வெளிநாட்டு தமிழர்கள் சிலர் 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலை கேட்டு தாயை பிரிந்து வாழும் நாங்கள் தாயோடு இருப்பதாக உணர்கிறோம் என்கின்றனர். 'காற்றோடு பட்டம் போல' பாடல் கேட்பதன் மூலம் வாழ்க்கையின் வலியை உணர்வதாக கூறுகின்றனர். இவ்விரு பாடல்களின் இசையை கேட்பதன் மூலம் தற்கொலை செய்யும் மனநிலையை மாற்றிக் கொண்டதாக அமெரிக்காவிலிருந்து தமிழர் ஒருவர் பேசினார். இது போதும் எனக்கு.