பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
படத்திற்கு படம் ஒரே விதமான கேரக்டராக நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், கேரக்டர்களுக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொண்டு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவது சிலர் மட்டுமே, அதிலும் பாகுபாடின்றி கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தனிமுத்திரையை பதித்து வருகிறார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார்.
'ரெமோ' முதல் 'விக்ரம்' வரை நடிப்பால் மிரட்டிய இவர் கூறியதாவது: அம்மா காஷ்மீர் பண்டிட், அப்பா மங்களூரு. அரசு ஊழியர்களான இருவருக்கும் சென்னைக்கு மாறுதல் கிடைக்க எனது பள்ளி, கல்லுாரி எல்லாமே சென்னை தான். பள்ளிக்காலம் முதலே நாடகங்களில் நடித்து பரிசு வாங்கியுள்ளேன். ஓவிய கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்த பின், குடும்ப நண்பர் மூலம் சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.
கே.பாலசந்தர் தயாரித்த 'பிரேமி' நாடகம் தான் அது. அந்த நேரத்தில் எனக்கு தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக வராது. நாடகத்திலும் தமிழ், ஹிந்தி கலந்து பேசும் கேரக்டராக இயக்குனர் அமைத்தார். அதுவே என்னை பிரபலப்படுத்தியது. பின் கல்யாணம் முடிந்து 13 ஆண்டுகள் நடிப்பு பக்கம் வராமல் ஆஸ்திரேலியாவில் இருந்தேன்.
குடும்பத்தோடு மீண்டும் இந்தியா வந்தோம். சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சின்ன கேரக்டராக இருந்தாலும் நன்கு பயன்படுத்தினேன். தொடர்ந்து 'அச்சம் என்பது மடமையடா' படத்திலும் கதாநாயகியின் அம்மாவாக நடித்தேன். கே.வி.ஆனந்த்தின் 'கவண்' படத்தில் வாய்ப்பு அமைந்தது. இந்த படம் தான் எனக்கு திரையுலகில் அடையாளத்தை உருவாக்கி, அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' பட வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'ஆங்கிலோ இண்டியன்' கதாபாத்திரம் ஏற்கனவே ஒருவர் நடித்துவிட, 'கொரோனா' பரவலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆரம்பித்த போது அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வர இயலாததால் என்னை வைத்து எடுத்தார்கள்.
அதில் 'டாடி' கதாபாத்திரத்தின் ஜோடியாக வந்ததால் ரசிகர்கள் இன்றும் என்னை 'மம்மி' என்றே அழைக்கின்றனர். 'டாடி' கூட ஒரு பாடலில் 30 நொடி மட்டுமே ஆடிய நடனம் சிறப்பானதாக அமைந்தது. தற்போது மீம்ஸ்களில் இந்த நடனம் தான் டிரண்டிங்காக உள்ளது.
ஹிந்தியில் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பேசும்படியாக இருக்கும்.
நடிப்பை தவிர நண்பர்களுடன் அறக்கட்டளை ஆரம்பித்து ரோட்டோரம் வசிக்கும் குழந்தைகளின் உணவு, படிப்பு செலவுகளை மேற்கொண்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தொழில் துவங்க உதவி செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.