தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மகேஷ் பாபு. சென்னையில் பிறந்து வளர்ந்து கல்லூரி வரை இங்கேயே படித்தவர். பின் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அங்குள்ள டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதன்பின் தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
'ஸ்பைடர்' படத்திற்கு முன்னதாக அவர் ஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தில் அறிமுகமாக இருந்தார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அந்தப் படத்திற்குப் பதிலாக 'தூக்குடு' படத்தில் நடித்தார். அப்படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆனதை முன்னிட்டு அப்படத்தின் இயக்குனர் சீனு வைட்லா சமீபத்திய பேட்டி ஒன்றில் 'நண்பன்' படத்திலிருந்து மகேஷ் பாபு விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.
“மகேஷ் பாபு 'தூக்குடு' படப்பிடிப்புக்கு முன்னதாக அவருடைய பண்ணை வீட்டில் நடைபெற்ற விருந்து ஒன்றிற்கு என்னை அழைத்தார். அப்போது அவரிடம் 'தூக்குடு' படத்தில் உள்ள சில பன்ச் வசனங்களையும், சில முக்கியக் காட்சிகளைப் பற்றியும் அவரிடம் சொன்னேன். அவற்றைக் கேட்டு அவர் வியந்து போனார். உடனே, அவரது மனைவி நம்ரதாவுக்குப் போன் செய்து ஷங்கரின் 'நண்பன்' படத்தில் நடிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். என் மீது அவர் வைத்த நம்பிக்கையால் எனது பொறுப்பு இன்னும் அதிகமானது,” என்று கூறியுள்ளார்.
மகேஷ் பாபுவின் தெலுங்கு சினிமா படங்களில் 'தூக்குடு' படம் மிகப் பெரும் வெற்றி பெற்ற ஒரு படம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 2011 செப்டம்பர் 23ம் தேதியன்று வெளியான அப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது.