ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

எம் கே தியாகராஜ பாகவதரின் “சத்யசீலன்”, எம் ஜி ஆரின் முதல் திரைப்படமான “சதிலீலாவதி” போன்ற திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த 1936ம் ஆண்டு, தமிழ் திரையுலகில், பல குறிப்பிடத்தக்க பெருமைகளை உள்ளடக்கிய ஆண்டாக அமைந்திருந்தது என்றால் அது மிகையன்று. அவற்றில் ஒன்றுதான் “மிஸ் கமலா” என்ற திரைப்படம். இத்திரைப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் என அனைத்தையும் எழுதி, தயாரித்து இயக்கியிருந்தவர் ஒரு பெண். அவர் ஒரு தலைசிறந்த நடிகையாகவும் அப்போது கோலோச்சியிருந்தவர்.
அந்த நடிகை மற்றும் பெண் இயக்குநர் வேறு யாருமல்ல, முதல் பேசும் படத்தில் நடித்த நடிகை என புகழ் பெற்றிருந்த நடிகை டி பி ராஜலக்ஷ்மிதான். “மிஸ் கமலா” திரைப்படத்தின் கதை, வசனம், பாடல்களை எழுதி, தயாரித்து இயக்கியிருந்ததுடன், நாயகியாகவும் நடித்துமிருந்தார் டி பி ராஜலக்ஷ்மி.
1931ம் ஆண்டு பேசும் படங்களைப் பரீட்சார்த்தமாகத் தயாரிக்க வேண்டும் என பம்பாயில் இயங்கி வந்த “இம்பீரியல் மூவிடோன்” என்ற தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு, அதற்கு ஒரு தமிழ் நடிகை தேவை என தேடியபோது, அந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்தான் நடிகை டி பி ராஜலக்ஷ்மி. படத்தில் இரண்டு கீர்த்தனைகள், இரண்டு தேசிய கீதங்கள் பாடியிருந்ததோடு, குறத்தி டான்ஸ் ஒன்றும் ஆடியிருக்கின்றார் டி பி ராஜலக்ஷ்மி. இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் தயாரிப்பு தரப்பினர் வெற்றி கண்டிருந்ததோடு, இவரும் ஒரு நடிகையாக வெற்றியை சுவைத்திருந்தார். அன்றிலிருந்துதான் இவர் ஒரு பேசும் சினிமா பட நடிகையாக அறியப்பட்டிருக்கின்றார்.
இவ்வாறு ஆரம்பித்த இவரது கலையுலக வாழ்க்கை, ஓய்வின்றி சென்று கொண்டிருந்த வேளையில், இவர் நடிப்பில் வெளிவந்த “வள்ளி” திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தர, கல்கத்தாவிலேயே முகாமிட்டு, அப்போதே தொடர்ந்து பத்து திரைப்படங்கள் வரை நடித்துமிருக்கின்றார். அனுபவம் இவருக்கு அருமையான ஆசானாக அமைந்திடவே, சொந்தமாக படம் தயாரிக்கவும் முற்பட்டிருக்கின்றார் நடிகை டி பி ராஜலக்ஷ்மி. அதன் விளைவாக உருவானதுதான் “மிஸ் கமலா” என்ற திரைப்படம்.
படத்தின் கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் என அனைத்தையும் இவரே கவனித்துக் கொண்டதோடு, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தும் சிறப்பித்திருந்த இவர், “சினிமா ராணி” என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்தார். தொடர்ந்து இதே 1936ம் ஆண்டில் “வீர அபிமன்யூ”, “சீமந்தனி”, பாமா பரிணயம்” போன்ற திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றிருந்த இவர், தான் தயாரித்து இயக்கிய “மிஸ் கமலா” திரைப்படத்தின் வாயிலாகத்தான் தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்கும் உரியவராக அறியப்பட்டிருக்கின்றார்.




