தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு | கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை |
* தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம், சென்னை காமராஜர் அரங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிந்தது. இதில் சினிமா நடிகர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 950க்கும் அதிகமான நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பொதுக்குழு ஏற்பாடுகளை கவனித்தனர்.
* நடிகர் சங்க பொதுக்குழுவில் முதலில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பின்னர், இந்த ஆண்டு மறைந்த சரோஜாதேவி, ரோபோ சங்கர், மனோஜ், டில்லி கணேஷ் உள்ளிட்ட 70 சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழு, வரவு செலவு கணக்கு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
* நடிகர் சங்க பொதுக்குழுவில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவர்தான் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர், விருதை பெற்றவர் முன்னாள் தலைவர் எம்ஜிஆர், என்எஸ்கிருஷ்ணன் பற்றி உருக்கமாக பேசினார்.
* தேசியவிருது பெற உள்ள நடிகை ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால், பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
* இந்த பொதுக்குழுவின் நடிகர் சங்க புதுக்கட்டடம் கட்ட 25 கோடி கடன் வாங்கியுள்ளோம். மீதமுள்ள பணிகளை முடிக்க இன்னும் 10 கோடி தேவைப்படுகிறது. அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். நடிகர் சங்க புதுக்கட்டத்தில் திருமண மண்டபம், மற்ற பகுதிகளுக்கு சிறப்பு பெயர்களை சூட்ட நிர்வாக குழுவுக்கு அதிகாரம், நடிகர் சங்க திறப்பு விழாவை சிறப்பாக நடத்த குழு, நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து தவறாக, தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் மீது போலீஸ் மூலம் சட்டரீதியிலான நடவடிக்கை, நடிகர் சங்க பணிகளுக்கு துணையாக இருக்கும் முதல்வர், துணைமுதல்வர், வருவாய், செய்தித்துறை அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், ''சமூக வலைதளங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசிய சிலர் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது இன்னும் தீவிரமாகும். நடிகர் சங்க புதுக்கட்டட திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார்.
நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசுகையில் ''பேச்சிலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு, நடிகர் சங்க கட்டட விழா முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும், சங்க உறுப்பினரான சாய் தன்சிகாவை திருமணம் செய்யப்போகிறேன். அவர் இங்கே வந்துள்ளார். இங்கே ஆக்ரோஷமாக பேசுவதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறேன். எங்கள் உழைப்பின் பலனாக புது கட்டடம் இருக்கும். நடிகர் சங்க கட்ட பலரும் உதவி செய்து வருகிறார்கள். எந்த நடிகர், நடிகையிடம் இவ்வளவு பணம் கொடுங்க என்று கேட்க முடியாது. நாங்கள் ஆசிரியர்கள் அல்ல. அவர்களாக கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும், பல முன்னணி நடிகர்கள் பணம் வாங்காமல் கலைநிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். அதுவே பெரிய உதவி'' என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில் ''நடிகர் சங்க கட்டட பணிகள் 40 கோடி செலவில் நடந்து வருகிறது. பெரிய திட்டம் என்பதால் கடன் வாங்கி கட்டுகிறோம். விரைவில் சங்க கட்டடம் மூலம் வருமானம் வந்துவிடும். சங்க உறுப்பினர்களும் உதவி, கடனை அடைக்க முடியும் கடனை அடைக்க 10 ஆண்டுகள் அவகாசத்தை வங்கிகள் வழங்கி உள்ளன'' என்றார். மேலும் நடிகர் சங்க கட்டடத்தில் அமைய உள்ள கலையரங்கத்துக்கு ஏற்கனவே இருந்தபடி சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் இருக்கும். மற்ற சிறப்பு பகுதிகளுக்கு நடிகர் விஜயகாந்த் பெயரை சூட்டுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
நடிகர் சங்க பொதுக்குழுவின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்களும், முன்னணி ஹீரோயின்களும் வழக்கம்போல் கலந்துகொள்ளவில்லை. நடிகைகளில் அம்பிகா, ரேகா, ரோகிணி போன்ற ஒருசிலரே வந்தனர். முன்னணி நடிகைகள் வரவில்லை.
* நடிகர் வடிவேலு கலந்துகொண்டு சமூக வலைதளங்களில் நடிகர்கள் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும் என்று கோரிக்கை வைத்தார். அவர்களை பிதுக்கணும் என்றார். அது நடக்கும் என்று கருணாஸ் உறுதி கொடுத்தார். பொதுக்குழு முடிந்தபின் உறுப்பினர்களுக்கு விருந்து நடந்தது.