32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
நடிகர் அஜித்குமார், சினிமா படங்களை தாண்டி கார் ரேஸில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருபவர். 2002, 2003, 2004 ஆண்டுகளில் கார் ரேஸில் பங்கேற்றிருந்தார். பின்னர் சினிமாவில் பிஸியானவர், தற்போது மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, துபாயில் நடந்து வரும் '24எச்' ரேஸில் அஜித் தலைமையிலான ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றது. இதற்காக கடந்த சில தினங்களாக அஜித்தும், அவரது அணியினரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தகுதி சுற்று போட்டியிலும் அவரும், அவரது அணியும் பங்கேற்றனர். அதில் இருதினங்களுக்கு முன் நடந்த பயிற்சியில் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. ஆனாலும் தொடர்ந்து அவர் பயிற்சில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ரேஸில் இருந்து அஜித் விலகுவதாக அறிவித்தார். அவர் கார் ஓட்ட மாட்டார் என்றும் உரிமையாளராக அணியின் பணிகளைத் தொடர்ந்து கவனிப்பார் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக அஜித்குமார் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார் ரேஸ் உட்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினாலும், தனது ரசிகர்களுக்கும் முக்கியமான அட்வைஸ்களை வழங்கியுள்ளார்.
வீடியோவில் அஜித், ‛‛ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மோட்டர் ஸ்போர்ட்ஸில் எனக்கு எப்போதும் அதீத ஆர்வம் இருந்துள்ளது. இதைப் பார்க்க நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருந்தனர். மிகவும் எமோஷனலாக இருந்தது. நான் சொல்ல வேண்டிய விஷயம், சொல்லப்போற விஷயம் ஒன்னே ஒன்னு தான். நீங்கள் எல்லோரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், மன நிம்மதியுடனும் வாழணும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்க குடும்பத்தை முதலில் பாருங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றாகப் படியுங்கள். கடுமையாக உழைத்து வேலை பாருங்கள்.
சோர்வடையாதீர்கள்
நமக்குப் பிடித்த விஷயங்களை நாம் செய்யும் போது அதில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. அதேநேரம் வெற்றி அடையவில்லை என்றாலும் சோர்ந்து போகாதீர்கள். போட்டிப்போடுவது தான் மிகவும் முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பை எப்போதும் விட்டுத்தராதீர்கள்.
வழக்கமான கார் ரேஸுக்கும் இந்த 24 மணி நேரப் போட்டிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வழக்கமான கார் ரேஸில் ஒரு காருக்கு ஒரு டிரைவர் தான். ஆனால், இதில் ஒரு காருக்கு 2,3 டிரைவர்கள் இருப்பார்கள். எனவே, இதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது. வண்டியை பாதுகாக்க வேண்டும்.. அதேநேரம் வேகமாகவும் ஓட்ட வேண்டும்..
குடும்பத்தை பாருங்கள்
சினிமாவை போலவே இதிலும் டிரைவர், மெக்கானிக் என கூட்டு முயற்சி தேவை. அனைவரும் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தாலே போதும் ரிசல்ட் தானாக வரும். ரசிகர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ப்ளீஸ், சண்டை போடாதீர்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. மகிழ்ச்சியாக இருங்கள்,'' என்று குறிப்பிட்ட அவர், ‛‛குடும்பத்தைப் பாருங்கள்'' என்பதை அழுத்தமாக 3 முறை சொல்லி தனது வீடியோவை நிறைவு செய்தார்.
குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையே அஜித் பல ஆண்டுகளாகச் சொல்லி வரும் நிலையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் அதையே குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித், பேட்டியோ, வீடியோ மூலமாகவோ ரசிகர்களுக்கு ‛மெசேஜ்' சொல்லி பல ஆண்டுகள் ஆன நிலையல், தற்போது ரேஸில் பங்கேற்றதற்கு இடையில் அவர் வெளியிட்ட இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.