Advertisement

சிறப்புச்செய்திகள்

மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : பாலைவனமாய் இருந்த நடிகர் சங்கத்தை சோலைவனமாக்கிய “சொக்கத்தங்கம்” விஜயகாந்த்

28 டிச, 2024 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Vijayakanth,-the-Sokkathangam-:-who-turned-the-Nadigar-Sangam-from-a-desert-into-a-paradise

சாதனைகளையும், சறுக்கல்களையும் சம அளவில் பாவித்து, சமூகத்தின் நலன் ஒன்றே குறிக்கோள் என வாழ்ந்து மறைந்து, இன்னும் மக்கள் மனங்களில் சாகாவரம் பெற்ற நாயகனாக வாழும் 'கேப்டன்' விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று…

உள்ளத்தில் தோன்றியதை உதட்டில் உதிர்க்கும் உன்னத மனிதராக வாழ்ந்து மறைந்த விஜயகாந்த், 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25 அன்று, அழகர்சாமி நாயுடு மற்றும் ஆண்டாள் இணையரின் மகனாக, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் விஜயராஜ்.

“இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் ஆரம்பமான இவரது திரைப்பயணம், படத்தின் தலைப்பை; போன்று, இனிமையாகவோ, இளமையாகவோ இல்லாமல், இடி முழக்கங்களோடு கூடிய இடர்பாடுகள் நிறைந்த பயணமாகவே இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கும், தோல்விகளுக்கும் பிறகு கிடைத்த வாய்ப்புதான் முதன் முதலில் இவர் நாயகனாக தோன்றி நடித்த “தூரத்து இடிமுழக்கம்”.

ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்பி முத்துராமன் என்றால் விஜயகாந்திற்கு ஒரு எஸ்ஏ சந்திரசேகர் என்று கூறலாம். 1981ஆம் ஆண்டு இவர் நாயகனாக நடித்து, எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு பெரிய திருப்பத்தையும், ஏற்றத்தையும் தந்த திரைப்படமாகவும் அது அமைந்தது.

இதனைத் தொடர்ந்து 'ஆக்ஷன்' திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, இவர் நடித்த படங்களின் சண்டைக் காட்சிகள் பார்க்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தர விஜயகாந்த்திற்கு என தனியாக ஒரு ரசிகர் வட்டமும் உருவானது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தன் மூலம் முன்னணி நாயகர்களில் ஒருவராகவும் உயர்ந்தார்.

ஒரே ஆண்டில் 18 திரைப்படங்ளில் நடித்து சாதனை புரிந்திருக்கும் விஜயகாந்த், இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் இயக்குநர் இராம நாராயணன் ஆகிய இந்த இருவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்திருக்கின்றார். இவர்களது இயக்கத்தில் இவர் நடித்திருந்த அத்தனை திரைப்படங்களும் வெற்றித் திரைப்படங்காளகவும், வசூலை வாரித் தந்த திரைப்படங்களாகவும் அமைந்தன.

“வைதேகி காத்திருந்தாள்”, “ஊமை விழிகள்”, “அம்மன் கோவில் கிழக்காலே”, “புலன் விசாரணை”, “கேப்டன் பிரபாகரன்”, “பூந்தோட்டக் காவல்காரன்”, “நரசிம்மா”, “வானத்தைப் போல”, “ரமணா” என ஏராளமான வெற்றிப்படங்களுடன் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் விஜயகாந்த், கலையுலகில் மட்டுமின்றி பொது வாழ்விலும் தலைமைப் பண்பு மிக்கவராகவே அறியப்பட்டார்.

பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நடிகர் சங்கத்தை, இவர் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு, அதன் கடன் சுமையை குறைக்க திட்டமிட்டு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் கிடைத்த தொகையில், சங்கக் கடனையும் அடைத்து, நலிவுற்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் பென்ஷன் திட்டத்தையும் அமல்படுத்தி, அதற்கான ஒரு பெருந்தொகையையும் வங்கியில் டெபாசிட் செய்து வைத்தார் விஜயகாந்த்.

சினிமா மற்றும் நடிகர் சங்கத்தில் இவரது சாதுர்யமான நடவடிக்கைகள் மக்களின் மனங்களில் ஒரு நன்மதிப்பை பெற்றுத் தந்தது. அதன் விளைவு, 2005ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 அன்று, மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி, மாநாட்டில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற தனது கட்சிப் பெயரை அறிவிப்பு செய்து, அரசியல் களம் கண்டார் விஜயகாந்த்.

தனிக்கட்சி தொடங்கிய பின் தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் “வறுமை ஒழிப்பு தினம்” என அறிவிப்பு செய்ததை தொடர்ந்து, அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவரது வழியை பின்பற்றி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை, “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற முழக்கத்தோடு செய்ய வழிவகுத்துக் கொடுத்தார் விஜயகாந்த்.

மக்கள் திலகம் எம்ஜிஆருக்குப் பின் கலையுலகிலும், பொது வாழ்விலும், கணிவான மனதோடும், கலங்கமற்ற எண்ணங்களோடும், கையேந்தியோருக்கு கலங்கரை விளக்கமாய் வாழ்ந்து மறைந்த 'கருப்பு எம்ஜிஆர்', விஜயகாந்த்-ன் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று(டிச., 28) அவரைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'விடாமுயற்சி' - முதல் பாடல் வெளியானது'விடாமுயற்சி' - முதல் பாடல் ... பிளாஷ்பேக் : முதல் குடும்ப படம் பிளாஷ்பேக் : முதல் குடும்ப படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)