வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
ஏ பீம்சிங், ஏ பி நாகராஜன், ஏ சி திருலோகசந்தர், சி வி ராஜேந்திரன், கே விஜயன் என நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர்களின் வரிசையில் இயக்குநர் பி மாதவனுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. பி ஏ பட்டதாரியான இவர், ஆரம்ப காலங்களில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து வந்தார். வங்கிப் பணியில் இருந்தபோதே சினிமாவின் மீது ஒரு தனியாத தாகம் இருந்ததன் காரணமாக வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சினிமா ஸ்டூடியோக்கள் பக்கம் திரும்பியது இவரது கவனம். இயக்குநர் டி ஆர் ரகுநாத்தின் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தபடியே டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வேலையை பார்த்துக் கொண்டே தினமும் தனது சினிமா ஆசைகளையும், லட்சியத்தையும் அவரிடம் சொல்லி வர, தனது சினிமா இயக்கப் பணியில் உதவியாளராக சேர்த்துக் கொண்டார் இயக்குநர் டி ஆர் ரகுநாத்.
டி ஆர் ரகுநாத் இயக்கி, இயக்குநர் ஸ்ரீதரின்; வசனத்தில் வெளிவந்த “யார் பையன்” திரைப்படத்தில் அவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்த பி மாதவன், பின்னர் இயக்குநர் ப நீலகண்டனிடம் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். “கல்யாணப்பரிசு” திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, முதன் முதலாக படத்தை இயக்க ஆரம்பித்தபோது, இயக்குநர் ஸ்ரீதர் தன்னோடு “யார் பையன்” திரைப்படத்தில் பணிபுரிந்து வந்த பி மாதவனையும், ஒளிப்பதிவாளர் வின்சென்டையும் அழைத்து தனது யூனிட்டில் இணைத்துக் கொண்டார்.
சிறிது காலத்திற்குப் பின் தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசன் தயாரித்த “மணியோசை” திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பி மாதவனுக்கு கிடைக்க, மனதார வாழ்த்தி அனுப்பியும் வைத்தார் இயக்குநர் ஸ்ரீதர். “மணியோசை” திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், இயக்கம் சிறப்பாக இருக்கிறது. இன்னும் வணிக ரீதியில் படத்தை இயக்கியிருக்கலாம் என்று அவர் கூற, அதன்படியே படமும் வசூலில் தோல்வியை சந்தித்தது.
அப்போது இயக்குநர் பி மாதவன் தனது இரண்டாவது திரைப்படமான “அன்னை இல்லம்” திரைப்படத்தை நடிகர் திலகம் சிவாஜியை வைத்து இயக்கிக் கொண்டிருக்க, “மணியோசை”யின் தோல்வியைக் கண்டு, “அன்னை இல்லம்” படத்தின் தயாரிப்பாளரான சந்தானம் இயக்குநர் பி மாதவனை படத்திலிருந்து மாற்றிவிட தீர்மானிக்க, “மாதவன் தொழில் தெரிந்தவர். அவரது திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து அவரே “அன்னை இல்லம்” திரைப்படத்தை இயக்கட்டும்” என சிவாஜி கூறியதன் பின், இயக்குநர் பி மாதவனின் இரண்டாவது படமாக வெளிவந்தது “அன்னை இல்லம்” திரைப்படம்.
வசூலில் பெரும் வெற்றி பெற்று, சிவாஜியின் நம்பிக்கையை பூர்த்தி செய்ததோடு, இயக்குநர் பி மாதவனுக்கு திரையுலகில் ஒரு நிலையான இடத்தையும் பெற்றுத் தர வழி வகுத்தது “அன்னை இல்லம்” திரைப்படம். தொடர்ந்து “நீலவானம்”, “எங்க ஊர் ராஜா”, “வியட்நாம் வீடு”, “ராமன் எத்தனை ராமனடி”, “தேனும் பாலும்”, “ஞான ஒளி”, “பட்டிக்காடா பட்டணமா”, “ராஜபார்ட் ரங்கதுரை”, “தங்கப்பதக்கம்”, “மனிதனும் தெய்வமாகலாம்”, “மன்னவன் வந்தானடி”, “பாட்டும் பரதமும்”, “சித்ரா பௌர்ணமி”, “ஹிட்லர் உமாநாத்” என நடிகர் திலகம் சிவாஜிகணேசனை இயக்கும் வாய்ப்பினைப் பெற்று, அவரது திரைப்பயணத்தில் பல முத்தான திரைப்படங்களைத் தந்து, அவரது நம்பிக்கைக்குரிய இயக்குநராகவும் வலம் வந்து கலைத்துறையின் உச்சம் தொட்டவர்தான் இயக்குநர் பி மாதவன்.