ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவர் வி.என்.ஜானகி. அவரை எம்ஜிஆரின் மனைவியாகத்தான் பார்க்கிறார்களே தவிர அவரது கலை பயணத்தை மறந்து விடுகிறார்கள். அவரது நூற்றாண்டு தொடங்கி உள்ளது. அதனால் அவரது சினிமா பயணம் பற்றிய ஒரு பிளாளஷ்பேக்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கத்தில் 1923ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி ஜானகி பிறந்தார். வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கம்தான் வி.என்.ஜானகி.
பழம்பெரும் இசை அமைப்பாளரான பாபநாசம் சிவனின் தம்பி ராஜகோபால் ஐயரின் மகள்தான் வி.என். ஜானகி. இசை ஆசிரியராக இருந்த ராஜகோபாலுக்கு சினிமாவிற்கு பாட்டெழுது வேண்டும் என்பது கனவு. தீவிர முயற்சிக்கு பிறகு 'மெட்ராஸ் மெயில்' என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்புக் கிடைத்தது. பாடலாசிரியர் கனவுடன் 1936ம் ஆண்டு குடும்பத்தினருடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறினார்.
கலைக் குடும்பம் என்பதால் இயல்பாகவே பாடல், நடனம் இவற்றில் ஈர்ப்பு கொண்டிருந்த ஜானகி, பாடல், நடனம் இவற்றில் தீவிர கவனம் செலுத்தினார். குடும்ப நண்பரான பிரபல இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்தி வந்த 'நடன கலா சேவா' என்னும் நாட்டியக் குழுவில் இணைந்து நடித்தார். இந்தியா முழுவதும் பல நகரங்களில் இந்தக் குழு நாட்டிய நாடகங்களை நடத்தியது. நடன கலா சேவா குழுவின் நாடகங்களில் மிகுந்த வரவேற்பு பெற்ற நாடகம் 'வள்ளி திருமணம்'. இதில் முருகன் வேடத்தில் ஜானகி நடித்தார். இயக்குநர் சுப்ரமணியத்தின் துணைவியார் எஸ்.டி.சுப்புலட்சுமி, வள்ளியாக நடித்தார். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஜானகிக்கு கிடைத்தது.
நாடகத்தில் புகழ்பெற்ற ஜானகியை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. கே.சுப்ரமணியம் இயக்கிய 'இன்பசாகரன்' என்ற படத்தின் மூலம் 13 வயதில் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ஒரு தீ விபத்தில் இந்த படத்தின் பிலிம் ரோல்கள் எரிந்து விட்டதால் படம் வெளிவரவில்லை. அதைத் தொடர்ந்து 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம், பங்கஜவல்லி போன்ற படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். சிறிய கேரக்டர்களில் நடித்தார்.
'சகடயோகம்' என்ற படத்தில்தான் முதன்முதலில் கதையின் நாயகியாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' ஜானகிக்கு பெயரும் புகழும் தேடிக் கொடுத்தது.
1948ல் வெளிவந்த 'ராஜ முக்தி' படத்தில் தியாகராஜ பாகவதர் ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார் எம்ஜிஆர். அப்போது ஜானகிக்கு சம்பளம் 25 ஆயிரம் ரூபாய், எம்ஜிஆருக்கு சம்பளம் 1500 ரூபாய். இந்த படத்தில் நடித்தபோதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதே ஆண்டில் வெளியான 'மோகினி' படத்தில் காதல் கசிந்துருகியது. அன்றைக்கு பிரபல கதாநாயகியான ஜானகி, துணை நடிகர் என்ற நிலையில் இருந்த எம்.ஜி.ஆரை காதலித்தார் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.
1950ல் 'மருதநாட்டு இளவரசி' படத்தில் ஜானகி ஜோடியாக நடித்தார் எம்ஜிஆர். இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப் படம் 'நாம்'. அதன் பின்னர், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜானகி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணையானார். அதன் பிறகு எம்ஜிஆருக்கு நல்ல மனைவியாக வாழ்ந்ததும், தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் ஆனதும் சினிமாவை தாண்டிய வரலாறு.