அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே கேட்டு ரசிக்கும் வண்ணம், முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தின் சாரத்தோடு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, பாமரன் முதல் படித்தவன் வரை அனைவரும் ரசிக்கும்படி, அந்தந்த ராக லட்சணங்களோடு, திரையிசையை மெல்லிசையாக்கித் தந்த இசைமேதைதான் 'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதன்.
இயக்குநரின் தேவையறிந்து, கதைக்குத் தேவையான, கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து, ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து இவர் தந்த பாடல்கள் அனைத்தும் தேனினும் இனிய தேவகானங்கள் என்றால் அது மிகையன்று. இசை ஒன்றைத் தவிர வேறேதும் அறியாத இவர், மற்றவரிடம் பழகும் விதமும், பிறரை நேசிக்கும் பண்பும், பேசும் தன்மையும் இவரது இசையைக் காட்டிலும் இனிமையானது எனலாம். இத்தகைய பெருமைக்குரிய இவர், தென்னிந்திய திரையுலகின் அனைத்து ஜாம்பவான் நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார்.
இவர் இசையமைக்காத தயாரிப்பு நிறுவனங்களோ, இயக்குனர்களோ இல்லை எனும் அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், இரண்டு மிகப் பெரிய தமிழ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இவர் இசையமைத்ததே இல்லை என்பது துரதிர்ஷ்டமே.
1964ம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான சாண்டோ எம்எம்ஏ சின்னப்பதேவர் தனது “தேவர் பிலிம்ஸ்” சார்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடிப்பில் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “வேட்டைக்காரன்”. பட விநியோகஸ்தர்கள் இந்தப் படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என தங்களது விருப்பத்தை தேவரிடம் கூறினர். தேவரும் அதற்கு செவி சாய்த்து எம்எஸ் விஸ்வநாதனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டிற்கு ஒரு பெரிய தொகையுடன் சென்று விபரத்தைக் கூற, தயக்கம் காட்டினார் எம் எஸ் விஸ்வநாதன்.
காரணம் பெரும்பாலான “தேவர் பிலிம்ஸ்” திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் 'திரையிசைத் திலகம்' கேவி மகாதேவன். அவருடைய வாய்ப்பை தான் பறிப்பதாக எண்ணி சுணக்கம் காட்டினார் எம்எஸ் விஸ்வநாதன். அப்போது சமையல் அறையிலிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது தாயார், அவரை அழைத்து, நீ இந்தப் படத்திற்கு இசையமைக்கக் கூடாது என திட்டவட்டமாகக் கூறியதால் அந்தப் பட வாய்ப்பினை அவர் நிராகரித்து விட்டார். காரணம் ஆரம்ப காலங்களில் எம்எஸ் விஸ்வநாதன் ஒரு கோரஸ் பாடகராக தனக்கு வாய்ப்பு தருமாறு கேவி மகாதேவனிடம் கேட்டபோது, உனக்கு இருக்கும் இசை ஞானத்திற்கு நீ ஒரு கோரஸ் பாடகராக சேர்ந்து பணியாற்றினால் உன்னை ஒரு கோரஸ் பாடகர் என்று இந்த திரையுலகம் முத்திரை குத்திவிடும் . எனவே நீ கோவையில் உள்ள “ஜுபிடர் பிக்சர்ஸ்” சென்று அங்கு இசையமைப்பாளர் எஸ்எம் சுப்பையா நாயுடுவிடம் இணைந்து பணிபுரிந்து வந்தால் அது உன் திரையிசை வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும் என நல்வழிகாட்டி அனுப்பி வைத்தார் கே வி மகாதேவன். அந்த நன்றியை என்றுமே மறக்காததன் விளைவுதான் பின்னாளில் தமிழ் திரையிசையின் 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்திற்கு உரியவரானார்.
அதேபோல், நடிகர் திலகம் சிவாஜியை வைத்து ஏராளமான சமூக, புராண மற்றும் இதிகாச திரைப்படங்களை தயாரித்து இயக்கிய இயக்குநர் ஏபி நாகராஜன் தனது “விஜயலக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்” சார்பில் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு கேவி மகாதேவனையே இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார். ஓரிரு திரைப்படங்களுக்கு குன்னக்குடி வைத்தியநாதனையும் பயன்படுத்தியதுண்டு. அவரது எந்த ஒரு திரைப்படத்திற்கும் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்ததே இல்லை.