கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
ஆடல், பாடல், சண்டைக் காட்சிகள் என எதுவுமில்லாத ஒரு தமிழ் திரைப்படத்தை நாம் காண இயலுமா? அப்படி ஒரு திரைப்படத்தை தயாரிக்கத்தான் முடியுமா? என்றால், முடியும் என நிரூபித்துக் காட்டியது ஏ வி எம் நிறுவனம். தொழில்நுட்ப வசதி வளர்ச்சியடையாத 1954லிலேயே இப்படி ஒரு புதுமையை செய்து, தமிழ் திரையுலகில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது ஏ வி எம் தயாரிப்பு நிறுவனம். வணிக ரீதியான திரைப்படங்களை தயாரித்து கோடிகளில் புரளும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில், வணிக ரீதியான வெற்றி தோல்விகளை மனதிற் கொள்ளாமல், துணிவுடன் பரீட்சார்த்த முயற்சியை கையிலெடுத்து, “அந்தநாள்” என்ற ஒரு புதுமைப் படைப்பை தமிழ் திரையுலகிற்கு அளித்து, ஆச்சர்யத்தை தந்தது ஏ வி எம் தயாரிப்பு நிறுவனம்.
ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசவாவின் “ரஷோமான்” என்ற ஜப்பானிய திரைப்படத்தின் திரைக்கதை சாயலில் உருவான திரைப்படம்தான் “அந்தநாள்”. இந்த மர்ம திகிலூட்டும் துப்பறியும் படத்திற்கு, கதை மற்றும் திரைக்கதையை ஜாவர் சீதாராமன் வடிவமைக்க, படத்தை இயக்கியிருந்தார் வீணை எஸ் பாலசந்தர். “உலகப் போரின்போது ஜப்பான் நாட்டினருக்கு உளவு சொல்லும் ஒரு வானொலி பொறியாளர், அவரது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொலை செய்யப்படுகின்றார். கொலைக்கான பின்னணி என்ன? கொலை செய்தது யார்? அவரது மனைவியா? நண்பர்களா? அல்லது அக்கம் பக்கத்தினரா? என துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பதுதான் கதை.
பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளை உள்ளடக்கிய, ஆடல் பாடல் ஏதுமில்லாத முதல் தமிழ் திரைப்படமாக இயக்கியிருந்தார் வீணை எஸ் பாலசந்தர். ஜப்பான் நாட்டிற்கு உளவு சொல்லும் வானொலி பொறியாளராக நாயகன் கதாபாத்திரத்தில் சிவாஜிகணேசன் நடிக்க, அவரது மனைவியாக பண்டரிபாய் நடித்திருந்தார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதையின் நாயகன் கொல்லப்படுவதாக காட்டி, பின் துப்பறிவதாக வரும் திரைக்கதையில், ஒவ்வொரு விசாரணையின் போதும் ஓர் கதை. அப்படி வரும் ஒவ்வொரு விசாரணையின் போதும் கதாநாயகன் கொல்லப்படுகின்ற காட்சியை வெவ்வேறு கோணங்களில் திரையில் காட்டியிருப்பார் இயக்குநர் வீணை எஸ் பாலசந்தர்.
1954 தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இத்திரைப்படம், ஒரு புதிய உத்தியை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. மேலும் 1954ல் கொல்கத்தாவில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை கதாநாயகனாக வைத்து, பாடல், நடனம் என எதுவுமின்றி முதன் முதலாக ஏவிஎம்.,மிற்காக இயக்குநர் எஸ் பாலசந்தர் ஒரு படத்தை இயக்கி வந்தார். பாதி வளர்ந்த நிலையில் படத்தைப் பார்த்த ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தி அளிக்காததால், நடிகர் சிவாஜிகணேசனை வைத்து மீண்டும் ரீ ஷூட் பண்ண வேண்டும் என சொல்ல, அப்படி உருவான திரைப்படம்தான் இந்த “அந்தநாள்”.