இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
1991 தீபாவளி தினமான நவம்பர் 5ம் தேதியன்று, ரஜினிகாந்த் நடித்த 'தளபதி', கமல்ஹாசன் நடித்த 'குணா', விஜயகாந்த் நடித்த 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்', பிரபு நடித்த 'தாலாட்டு கேக்குதம்மா', சத்யராஜ் நடித்த 'பிரம்மா', ராமராஜன் நடித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு', ராம்கி நடித்த 'என் பொட்டுக்கு சொந்தக்காரன்', சிவகுமார், ராம்கி நடித்த 'பிள்ளைப் பாசம்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
அத்தனை படங்கள் வந்தாலும் இன்று வரை பேசப்படும் படங்களாக 'தளபதி, குணா' ஆகிய படங்கள் இருக்கின்றன. இப்போது விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சண்டை போட்டுக் கொள்வது போல, அந்தக் காலத்தில் ரஜினி, கமல் ரசிகர்களுக்கிடையே கடுமையான சண்டை நடந்த காலத்தில் வெளிவந்த படங்கள் இவை. இருவரது ரசிகர்களும் மாறி மாறி விமர்சித்து சண்டை போட்டுக் கொண்டனர். வீட்டுத் திண்ணைகளில், பூங்காக்களில், கிரிக்கெட் மைதானங்களில் அந்த சண்டைகளை அதிகம் பார்க்க முடிந்த காலம் அது.
மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரஜினிகாந்த், மம்முட்டி முதன் முறையாக இணைந்து நடித்த படம். அரவிந்த்சாமி இப்படத்தில்தான் அறிமுகமானார். ராமாயணக் காவியத்தில் இடம் பெற்ற 'கர்ணன்' கதாபாத்திரத்தைத் தழுவி கூடுதல் கற்பனையுடன் எடுக்கப்பட்ட படம். ரஜினிகாந்த்தின் தோற்றம், ஹேர்ஸ்டைல், அவரது நடிப்பு என அனைத்துமே அந்தப் படத்தில் வேறு கோணத்தில் இருந்து அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. மம்முட்டியும், அவரும் போட்டி போட்டு நடித்தார்கள்.
இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்து இன்றும் பலரது 'பிளே லிஸ்ட்'டில் கண்டிப்பாக இருக்கும். “ராக்கம்மா கையைத் தட்டு” பாடல் 2002ம் ஆண்டு பிபிசி நடத்திய உலக அளவில் சிறந்த பாடல்கள் வரிசையில் 4ம் இடத்தைப் பிடித்தது. 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலுக்கான இசைக் கோர்ப்பை இன்றைய எச்டி தரத்தில் கேட்டால் அப்படி புல்லரிக்கும். அந்தப் படத்திற்குப் பிறகு இளையராஜா - மணிரத்னம் கூட்டணி கடந்த 32 வருடங்களாக மீண்டும் இணையவில்லை. அதனால், மணிரத்னம் மீது இளையராஜா ரசிகர்களுக்கு இன்று வரை கோபம் உண்டு.
சந்தானபாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'குணா'. “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது… புனிதமானது…” என்ற வசனம்தான் இந்தப் படத்தின் கதை. கொஞ்சம் மனப்பிறழ்வு கொண்டவரான கமல்ஹாசனுக்கும், ரோஷினிக்கும் இடையே ஏற்படும் காதல் தான் படத்தின் கதை.
கொடைக்கானலில் ஒரு குகையைக் கண்டுபிடித்து அதற்குள் கயிறுகளைக் கட்டி இறங்கி படமாக்கினார்கள். இன்று இந்த இடத்திற்கு 'குணா கேவ்ஸ்' என்றே பெயர் வந்து, ஒரு சுற்றுலாத் தலமாகிவிட்டது.
'தளபதி' படத்துடன் ஒப்பிடும் போது வியாபார ரீதியாக 'குணா' படம் தோல்வியடைந்தது. இருந்தாலும் இன்னமும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. 'அபிராமி… அபிராமி…' என நாயகி ரோஷினியைப் பார்த்து பரவசம் அடைந்து கமல்ஹாசன் நடிப்பது இன்றும் கண்ணுக்குள் நிற்கும் ஒரு காட்சி. அந்த காதல் பரவசத்தை இதுவரை எந்த ஒரு நடிகரும் ரசிகர்களுக்குக் கடத்தியதில்லை. அந்த ஒரு படத்துடன் ரோஷினி எங்கே போனார் என்றே தெரியவில்லை.
இளையராஜாவின் இசையில் 'கண்மனி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…' பாடலும், 'பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க”, “உன்னை நான் அறிவேன்,” பாடல்கள் எவர்கிரீன் பாடல்கள்.
ரஜினி, கமலுடன் போட்டி போட்டதில் பிரபுவின் 'தாலாட்டு கேக்குதம்மா', சத்யராஜின் 'பிரம்மா', விஜயகாந்தின் 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' ஆகிய படங்கள் குறைந்த தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடின.