'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
90களில் தமிழ் சினிமா சில பல புதிய இயக்குனர்களால் புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. 90களுக்குப் பிறகுதான் பலரும் திரையுலகை நோக்கி வரத் துவங்கினார்கள். பல கட்டுப்பாடுகளை உடைத்த காலமாக அந்தக் காலத்தைச் சொல்லலாம்.
1997ம் ஆண்டு தீபாவளி தினம் அக்டோபர் 30ம் தேதி வந்தது. அன்றைய தினம் தமிழ் சினிமாவில் பாலசந்தர் இயக்கிய 'விடுகதை', சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'ஆஹா', சத்யராஜ் நடித்த 'பெரிய மனுஷன்', சேரன் இயக்கி முரளி, மீனா நடித்த 'பொற்காலம்', நாகார்ஜுனா நடித்த 'ரட்சகன்', பிரபு நடித்த 'தேடினேன் வந்தது', ராமராஜன் நடித்த 'தெம்மாங்கு பாட்டுக்காரன்', கஸ்தூரிராஜா இயக்கிய 'வாசுகி' ஆகிய படங்கள் வெளிவந்தன.
பாலசந்தர் இயக்கிய 'விடுகதை' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் வியாபார ரீதியாக ஓடவில்லை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'ஆஹா' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. நாகார்ஜுனா தமிழில் முதன் முதலாக நடித்த 'ரட்சகன்' படம் தோல்வியைத் தழுவியது. மற்ற படங்களான 'தேடினேன் வந்தது, தெம்மாங்கு பாட்டுக்காரன், வாசுகி' ஆகிய படங்கள் சரியாக ஓடவில்லை.
சேரன் நடிக்க தேவா இசையமைத்த முரளி, மீனா, சங்கவி, மணிவண்ணன், வடிவேலு, ராஜேஸ்வரி மற்றும் பலர் நடித்த 'பொற்காலம்' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று 100 நாட்களைக் கடந்து ஓடியது.
மண்பாண்டத் தொழில் செய்யும் முரளிக்கு வாய் பேச முடியாத ஒரு தங்கை ராஜேஸ்வரி. அவர்களின் அப்பா மணிவண்ணன் ஒரு குடிகாரர். தங்கைக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என நினைக்கிறார் முரளி. ராஜேஸ்வரிக்கு ஒருவருடன் திருமணம் வரை சென்று அது நின்றுவிடுகிறது. இந்நிலையில் அண்ணனுக்கு மேலும் சுமையாக இருக்க விரும்பாத தங்கை ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்கிறார். பக்கத்து வீட்டுப் பெண்ணான மீனாவைக் காதலித்து வரும் முரளி, தங்கையின் மறைவால் ஒரு முடிவு எடுக்கிறார். தங்கையைப் போலவே மாற்றுத் திறனாளி ஒருவருக்கு வாழ்க்கை கொடுக்க முன் வருகிறார். காதலைத் துறந்து அவர் எடுக்கும் முடிவு படம் பார்த்துவிட்டு வந்தவர்களை கலங்க வைத்த ஒரு கிளைமாக்சாக அமைந்தது.
மாற்றுத் திறனாளி பெண்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை கிராமத்துப் பின்னணியில், கிராமத்து மனிதர்களுடன் யதார்த்தமான ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுத்தார் இயக்குனர் சேரன்.
படத்தைப் பார்த்து மிகவும் ரசித்த ரஜினிகாந்த் அவரது 'அருணாச்சலம்' படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் சேரனை அழைத்து கவுரவித்து தங்கச் செயின் ஒன்றைப் பரிசாக வழங்கினார். “உடல் ஊனமுற்றவர்களுக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற சிறந்த கருத்தை அழகான படமாகக் கொடுத்தீர்கள். இந்த மேடையில் உங்களை வாழ்த்த ஆசைப்படுகிறேன்,” என்று சொல்லி பாராட்டினார் ரஜினிகாந்த்.
இப்படம் பற்றிய கூடுதல் தகவல் ஒன்று. சிங்கப்பூர் பிரதமராக இருந்து மறைந்த எஸ்ஆர் நாதன் அவர்களுக்கு இந்தப் படத்தில் இடம் பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடல் மிகவும் பிடிக்கும். அவர் மறைந்த பின் அவரது இறுதி நிகழ்வில் இந்தப் பாடலை இசைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது கூடுதல் தகவல்.
90களில் வந்த படங்களில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகவும் இந்த 'பொற்காலம்' படத்தைப் பதிவு செய்யலாம்.