திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மறைந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. கணவருக்கு முத்தமிட்டு பிரியாவிடை கொடுத்தார் மீனா. இறுதிச்சடங்கில் கலா மாஸ்டர், நடிகைகள் ரம்பா, சங்கீதா கிரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.
கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 28) இரவு உயிரிழந்தார்.
இது திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். வித்யாசாகரின் உடல் சென்னையில் உள்ள மீனாவின் சைதாப்பேட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், பிரபுதேவா, ரம்பா குடும்பத்தார், விஜயகுமார் குடும்பத்தார், சேரன், மன்சூர் அலிகான், பழம்பெரும் நடிகை லட்சுமி, சங்கீதா, கிரிஷ், குஷ்பு, சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், நாசர், ரமேஷ் கண்ணா, சினேகா, பிரசன்னா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து வித்யாசாகரின் உடல் விஷேச ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைத்து தனது கணவருக்கு இறுதிச்சடங்குகளை மீனா மேற்கொண்டார். பின்னர் கணவருக்கு முத்தமிட்டு பிரியாவிடை கொடுத்தார். இதன்பின் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
வித்யாசாகரின் மறைவு நடிகை மீனா, மகள் நைனிகா மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பேரிழப்பு. இதிலிருந்து அவர்கள் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.