கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
ஒளிப்பதிவாளர், இயக்குனர், கதாசிரியர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர் பாலு மகேந்திரா. இவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும் அவை ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கின்றன. இவரின் 84வது பிறந்த தினம் இன்று. அவரை பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
இலங்கையில் பிறந்தவர்
1939 மே 19ம் தேதி, இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற ஊரில் பிறந்தார். இயற்பெயர் மகேந்திரா. அங்கு தான் வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமராவை பரிசாக வழங்கினார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த இவர், லண்டன் பல்கலையில் பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தார். பின் புனேயில் சினிமேட்டோகிராபி படிப்பில் சேர்ந்தார். தங்கப் பதக்கத்துடன் படிப்பை நிறைவு செய்தார்.
ஒளிப்பதிவு
படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் ஈர்க்கப்பட்டார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. 1971ல் மலையாள படமான "நெல்லு'வில் ஒளிப்பதிவளராக பணியை துவக்கினார். இப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கேரள அரசு வழங்கியது.
இயக்கம்
1976 வரை பல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 1977ல் கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம், இயக்குனர் அவதாரம் எடுத்தார். இப்படத்தில் கமலஹாசன், ஷோபா நடித்தனர். இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. சென்னையிலேயே 150 நாட்கள் ஓடியது. இப்படத்துக்காக, "சிறந்த ஒளிப்பதிவாளருக்கான' தேசிய விருதை வென்றார்.
தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம் முள்ளும் மலரும். 1979ல் இவர் இயக்கிய முதல் தமிழ் படம் "அழியாத கோலங்கள்'. பின், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, அது ஒரு கனா காலம், தலைமுறைகள் உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார். இதில் மூன்றாம் பிறை திரைப்படம், படத்தில் நடித்த கமலுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
செயற்கையை விரும்பாதவர்
ஒளிப்பதிவு செய்யும் போது, இயற்கையில் என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதையே பயன்படுத்துவார். இவரது படங்களில் பெரும்பாலும் நாயகிகள், கறுப்பு நிறத்தில் தான் இருப்பர். வித்தியாசமான இவரது பாணியை விரும்பிய பலர், இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வந்தனர். இயக்குனர் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் உருவானவர்கள். தலைமுறைகள் படத்தில், நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படத்தில் "தமிழை யாரும் மறக்காதீர்கள்' என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.
விருதுகள்
ஐந்து முறை தேசிய விருது (1978ல் கோகிலா, 1983ல் மூன்றாம் பிறை, 1988ல் வீடு, 1990ல் சந்திய ராகம், 1992ல் வண்ண வண்ண பூக்கள்). இயக்குனர், திரைக்கதை, ஒளிப்பதிவாளர் ஆகிய அனைத்து துறைக்கும் விருது வாங்கியவர் இவர் ஒருவரே. மூன்று முறை பிலிம்பேர் விருது, கன்னட மாநில விருது, இருமுறை கேரள மாநில விருது, இருமுறை நந்தி விருது பெற்றவர்.
பாலுமகேந்திரா தற்போது இந்த மண்ணில் இல்லை. அவர் மறைந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவரின் படைப்புகள் அழியாத கோலங்களாய், தலைமுறை தலைமுறைகளாய் என்றும் மக்கள் மனதில் நீங்கா நினைவுகளாய் இருக்கும் என்பது திண்ணம்.