நயன்தாரா விவகாரம்: தனுஷ் அப்பா கஸ்தூரிராஜா என்ன சொல்கிறார்? | 'கங்குவா' பற்றி ஜோதிகாவின் விமர்சனமும், விமர்சனங்களுக்கான விமர்சனமும்… | துளைக்க வந்தது…'விடுதலை 2' - தினம் தினமும்…சிங்கிள் | பிளாஷ்பேக்: நாடகத்தின் நாயகனாக சிவாஜியும், திரைப்படத்தின் நாயகனாக எம் ஜி ஆரும் நடித்திருந்த “என் தங்கை” | தனுஷ் - நயன்தாரா விவகாரம், எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் அசிங்கமான சண்டை | 'நானும் ரௌடிதான்' - பட்ஜெட் மற்றும் வசூல் எவ்வளவு ? | திரிசூலம், ஜே ஜே, சிங்கம்-2 - ஞாயிறு திரைப்படங்கள் | கங்குவா பட நாயகி திஷா பதானியின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி | திறமை உடன் அதிர்ஷ்டமும் வேண்டும் - பார்வதி நாயர் | சிறிய படைப்பாளிகள்னா ஏளனமா? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் கேள்வி |
2021ம் ஆண்டு பொங்கல் தினத்தை தமிழ்த் திரையுலகம் ஒரு கடினமான சூழலுடன்தான் கொண்டாட வேண்டி உள்ளது. நூறாண்டு கால தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது இதுவே முதல் முறை. மற்ற பண்டிகை நாட்களைவிட பொங்கலுக்கு மட்டும் தான் ஐந்தாறு நாட்கள் விடுமுறை கிடைக்கும். மக்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுப்பார்கள்.
ஓரளவிற்கு சுமாரான படமாக இருந்தால் கூட பொங்கல் விடுமுறை நாட்களில் வெளிவந்தால் வசூல் ரீதியாக தப்பித்துவிடும். ஆனால், இந்த வருட பொங்கலுக்கு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதையும் மீறி முன்பதிவு மும்முரமாக நடந்து முடிந்துள்ளது. எப்படியும் பொங்கல் படங்கள் தப்பித்துவிடும் என்ற நம்பிக்கை படத்தை வாங்கியவர்களுக்கும் திரையிட்டவர்களுக்கும் இப்போதே ஏற்பட்டுவிட்டது.
பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் ஜனவரி 13ம் தேதியன்று மாஸ்டர், 14ம் தேதியன்று ஈஸ்வரன், 15ம் தேதியன்று ஓஹோ ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. ஓடிடியில் ஜனவரி 14ம் தேதியன்று பூமி படம் வெளியாகிறது. ஜனவரி 14ல் டிவியில் நேரடியாக புலிக்குத்தி பாண்டி படம் வெளியாகிறது.
மாஸ்டர்
நடிப்பு - விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், நாசர், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர்
தயாரிப்பு - எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
மாநகரம், கைதி படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம். விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த போது மேலும் ஆச்சரியத்தை வரவழைத்தது. கடந்த வருடம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம். கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இத்தனை மாதங்கள் தள்ளி வெளியாகிறது. இருந்தாலும் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அப்படியே இருக்கிறது.
விஜய் நடிக்கும் படம் ஒன்று ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாவது இதுவே முதல் முறை. விஜய் த மாஸ்டர் என்ற பெயரில் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. படத்தில் நிறைய நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது மாஸ்டர். பொங்கல் போட்டியில் மாஸ் காட்டப் போகிறது மாஸ்டர் என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஈஸ்வரன்
நடிப்பு - சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா
தயாரிப்பு - மாதவ் மீடியா, டி கம்பெனி
இயக்கம் - சுசீந்திரன்
இசை - தமன்
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா ஆகிய குறிப்பிடத்தகுந்த படங்களை இயக்கினார். அதன்பின் அவர் இயக்கிய எட்டு படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னணி நாயகனான சிலம்பரசன் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்ட படம். அவ்வளவு சீக்கிரத்தில் சிலம்பரசன் நடித்துக் கொடுத்தாரா என்றும் ஆச்சரியப்பட்டார்கள்.
மாஸ்டர் படத்துடன் போட்டி போட்டாலும் ஈஸ்வரன் படத்திற்கும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்துக் கதை என்பதால் பி அன்ட் சி சென்டர்களில் படம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பாண்டிய நாடு போன்று அழுத்தமான கதை படத்தில் இருந்தால் ஈஸ்வரன் ரசிகர்களை ஈர்க்கும்.
ஓஹோ
நடிப்பு - லக்கி ஸ்டார், சௌந்தர்யா
தயாரிப்பு - லால்ராஸ் அசோசியேட்ஸ்
இயக்கம் - பாலு
இசை - கடவுள் முருகன்
2014ம் ஆண்டிலேயே தயாரான படம். இப்போதுதான் வெளியாக உள்ளது.
40 வயது வரை பணமே பிரதானம் என்ற குறிக்கோளுடன் இருப்பவரின் வாழ்வில் திருமண ஆசை வருகிறது. எவ்வளவு தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. கடைசியல் ஒரு பெண் அவர் வாழ்க்கையில் வருகிறார். இருவருக்கும் திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. இது ஒரு நகைச்சுவைப் படம் என்கிறார் இயக்குனர் பாலு.
பூமி (ஓடிடி ரிலீஸ்)
நடிப்பு - ஜெயம் ரவி, நிதி அகர்வால்
தயாரிப்பு - ஹோம் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - லட்சுமண்
இசை - இமான்
ரோமியோ ஜுலியட், போகன் படங்களுக்குப் பிறகு இயக்குனர் லட்சுமண், ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் படம் இது. முதலிரண்டு படங்களும் தியேட்டர்களில் வெளியாக வியாபார ரீதியாக வெற்றி பெற்றவை. இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள்.
ஜெயம் ரவியின் 25வது படம் இது. 2003ல் வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தன் 18வது வருடத் திரைப் பயணத்தில் 25வது படத்தைத் தொடுகிறார். நிதி அகர்வால் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
படத்தின் தலைப்பும், டிரைலரும் இது விவசாயத்தைப் பற்றிய படம் என்பதை எளிதில் புரிய வைத்துவிடும். வேறு எந்தப் போட்டியும் இல்லாமல் ஓடிடியில் தனி ஒரு படமாக இப்படம் வெளியாகிறது.
புலிக்குத்தி பாண்டி (நேரடி டிவி ரிலீஸ்)
நடிப்பு - விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி
தயாரிப்பு - சன் டிவி நெட்வொர்க்
இயக்கம் - முத்தையா
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
கும்கி பட ஜோடியான விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் படம். தொடர்ந்து கிராமத்துக் கதைகளையே இயக்கி வரும் முத்தையா மீண்டும் ஒரு கிராமத்துக் களத்தைத் தொட்டிருக்கிறார்.
டிரைலரைப் பார்க்கும் போது அவர் இயக்கிய முந்தைய படங்களின் சாயல் வந்து போகிறது. அந்தப் படங்களிலிருந்து புதிதாக என்ன சொல்லப் போகிறார் என்று டிரைலரைப் பார்த்த ரசிகர்களும் யு டியூப் கமெண்ட்டில் கேட்கிறார்கள். அதற்கு என்ன பதில் என்பதை மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாலை 6.30 மணிக்கு இப்படத்தைப் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
தீபாவளிக்கு நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தை நேரடியாக டிவியில் திரையிட்டதைப் போல, இந்த புலிக்குத்தி பாண்டி படத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.
2021ம் ஆண்டு தியேட்டர்களில் மூன்று படங்கள், ஓடிடியில் ஒரு படம், டிவியில் ஒரு படம் என பொங்கல் ரிலீஸ் அமைய உள்ளது. எந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
விரைவில் கொரோனா தொற்று தடுப்பூசி வர உள்ளது. சீக்கிரமே தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்ற அறிவிப்பு வரும் தினம் திரையுலகத்தினருக்கு பொங்கல் கொண்டாட்டங்களை விட மிகவும் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும்.