மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியப் படங்களின் வசூல் சாதனையில் 'பாகுபலி' படத்தின் வசூலுக்குப் பிறகு நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிப் படங்களான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களை மாநில மொழிப் படங்களாக மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால், 'பாகுபலி' படத்தின் பான் இந்தியா வெற்றி தென்னிந்திய மொழிப் படங்கள் மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றியது.
'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலக அளவில் 2000 கோடி வசூலை அள்ளியது. அதற்குப் பிறகு வெளிவந்த சில தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் பெரும் வசூலைக் குவிக்க ஆரம்பித்தன. குறிப்பாக இந்த 2022ம் ஆண்டில் தெலுங்கு, தமிழ், கன்னடப் படங்களின் வசூல் ஹிந்திப் படங்களைக் காட்டிலும் மாபெரும் வசூலைக் குவித்துள்ளது ஆச்சரியமான ஒன்று.
கன்னடத் திரையுலகத்திலிருந்து இப்படி ஒரு படமா என வியக்க வைத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களும் 1500 கோடி வரை வசூலித்தன. இந்த இரண்டு படங்களும் ஹிந்திப் படங்கள் வசூலை வாரிக் குவிக்கும் வட இந்திய மாநிலங்களில் கூட பெரிய வசூலைக் குவித்து பாலிவுட்டிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த ஆண்டில் வெளியான 'கேஜிஎப் 2' படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. இதன் வசூல் 1200 கோடியைக் கடந்தது. இந்தப் படம் மூலம் கன்னட நடிகரான யஷ் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டார்.
இந்த ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' உலக அளவில் 1200 கோடி வரை வசூலைப் பெற்றுள்ளது. இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் அவரது இரண்டாவது 1000 கோடிப் படம். அவரது இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2' படமும் 1000 கோடி வசூலைக் கடந்த ஒரு படம்.
தமிழில் இந்த ஆண்டில் வெளியான 'விக்ரம்' படம் உலக அளவில் 500 கோடி வசூலைக் கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. அந்த வசூல் சாதனையை சமீபத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' சீக்கிரத்திலேயே முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் இரண்டு படங்கள் 500 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு ஆண்டிலும் இப்படிப்பட்ட ஒரு சாதனை நிகழ்ந்ததில்லை.
கடந்த 9 மாதங்களில் வெளியான ஹிந்திப் படங்களில் 'காஷ்மீர் பைல்ஸ்' படம் 350 கோடி வசூலித்தது. 'பிரம்மாஸ்திரா' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஹிந்தியில் இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் இந்த இரண்டு படங்கள் மட்டும்தான் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. இரண்டையும் சேர்த்து கணக்கிட்டால் 750 கோடி.
ஆனால், தென்னிந்திய மொழிப் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, விக்ரம், பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் 400 கோடி வசூலைக் கடந்த படங்களாகவும் இதுவரையில் மொத்தமாக 3300 கோடி வசூலை வசூலித்துள்ளன.
தியேட்டர்கள் வசூல் மட்டும்தான் நாம் மேலே குறிப்பிட்டவை. அவற்றின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவற்றையும் சேர்த்தால் அவையும் ஆயிரம் கோடியைத் தொட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்னும் சில பிரம்மாண்டப் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இதுவரையில் பாலிவுட் படங்கள் என்று சொல்லப்படும் ஹிந்திப் படங்கள் மட்டுமே பெற்ற அதிகபட்ச வசூலை போட்டி போட்டு தென்னிந்தியப் படங்களும் பெற ஆரம்பித்துவிட்டன. இந்தியத் திரையுலகத்திற்கு இது பெரும் வளர்ச்சியாகும். இதன் மூலம் உலக அளவில் இந்தியத் திரைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படும் படங்களாகவும் மாறிவிட்டன.