சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி! | குழந்தைகள் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தி! | சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் | லக்கி பாஸ்கரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ்! | வெண்ணிலாவாக தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு |
2021ம் ஆண்டு கொரோனா தாக்கத்துடன் தான் கடந்து போனது. 2022ம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது. நேற்று முதல் தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என மாநில அரசு அறிவித்துள்ளது.
புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கலுக்கு பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லுமளவிற்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்ற இந்தக் காலத்தில்தான் ஏக்கம்தான் மிஞ்சுகிறது.
இந்த 2022ம் ஆண்டில் சில பெரிய படங்கள், சில முன்னணி நடிகர்களின் படங்கள், சில இயக்குனர்களின் படங்கள் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள் இருக்கின்றன.
தெலுங்குத் திரையுலகம் தற்போது பான்-இந்தியா என்று சொல்லுமளவிற்கு ஹிந்திப் படங்களுடன் போட்டி போட ஆரம்பித்துவிட்டது. ஒரு காலத்தில் தமிழகம் தான் அதுவும் சென்னை தான் தென்னிந்திய சினிமாக்களின் பிறப்பிடமாய் இருந்தது. இப்போது தமிழ் சினிமா கொஞ்சம் பின்தங்கிவிட்டது என்பதுதான் உண்மை. 2022ம் ஆண்டில் சில பெரிய படங்கள் அதை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
பொன்னியின் செல்வன்
இயக்கம் - மணிரத்னம்
இசை - ஏ.ஆர்.ரகுமான்
நடிப்பு - விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர்
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை சிலர் திரைப்படமாக எடுக்க முயன்று கைவிட்டனர். அதை மணிரத்னம் வெற்றிகரமாக படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டார். ஒரு காலத்தில் தமிழில் வந்த சரித்திரப் படங்கள் சாதனைப் படங்களாக இடம் பிடித்தன. பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனாலும், இதுவரையிலும் படம் பற்றி தகவல்கள், செய்திகள் அதிகமாக வெளிவராமல், பரபரப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை படக்குழு கவனிக்க வேண்டும்.
விக்ரம்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்
இன்றைய இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் உடன் கமல்ஹாசன் இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 'மாநகரம், கைதி, மாஸ்டர்' என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், தன் அபிமான நடிகரான கமல்ஹாசனை நிச்சயம் மாறுபட்ட விதத்தில் காட்டுவார் என்ற படத்தின் அறிமுக வீடியோவே வெளிக்காட்டியது. விஜய் சேதுபதி, பகத் பாசில் என சிறந்த நடிகர்கள் படத்தில் இருப்பதும் சிறப்பு. என்ன மாதிரியான ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
பீஸ்ட்
இயக்கம் - நெல்சன் திலீப்குமார்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய், பூஜா ஹெக்டே
முன்னணி நடிகர்கள் இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்தால் இன்றைய இளம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வசதியாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளார்கள். அந்த விதத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் விஜய் இணைந்த படம் இது. படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பமாகிவிட்டது. போஸ்டர்களிலேயே பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஏப்ரல் மாதம் வெளியீடு என்றும் அறிவித்துவிட்டார்கள். நகைச்சுவையுடன் கூடிய த்ரில்லர் படங்களை இதற்கு முன்பு கொடுத்த நெல்சன் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வலிமை
இயக்கம் - வினோத்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி
அஜித் நடித்த படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. மீண்டும் வினோத், அஜித் கூட்டணி என்ற அறிவிப்பு வந்த போதே எதிர்பார்ப்பு எகிறியது. சமீபத்தில் வெளிவந்த டிரைலர் அதை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் பெரிய படம் என்ற எதிர்பார்ப்புடன் இப்படம் வெளிவர உள்ளது. இரண்டு வருடங்களாகக் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் சரியான தீனியாக அமையும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பு. அதை இருவரும் நிறைவேற்றுவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
எதற்கும் துணிந்தவன்
இயக்கம் - பாண்டிராஜ்
இசை - இமான்
நடிப்பு - சூர்யா, பிரியங்கா அருள்மோகன்
பாண்டிராஜ், சூர்யா கூட்டணி 'பசங்க 2' படத்தில் இணைந்தது. அந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. பசங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். இந்தப் படத்தில் இருவரது கூட்டணியும் முழுமையாக இணைந்துள்ளது. கமர்ஷியல் படமா, வித்தியாசமான படமா என்பது படம் வரும் போதுதான் தெரியும். குடும்ப சென்டிமென்ட் படங்களின் மூலம் தனிப் பெயர் பெற்றுள்ள பாண்டிராஜ் இந்தப் படத்தில் சூர்யாவை எப்படி பயன்படுத்தியிருப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது.
மகான்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், விக்ரம் கூட்டணி முதல் முறை இணைந்துள்ள படம். அப்பா விக்ரம், மகன் துருவ் முதல் முறை இணைந்துள்ள படம். இப்படி சில முதல் முறை கூட்டணி இருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. 'ஜகமே தந்திரம்' படத்தில் பின்னடைவை சந்தித்த கார்த்திக் சுப்பராஜ், இந்தப் படத்தில் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம். விக்ரம் படம் என்றாலே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்தில் மகனும் இணைந்துள்ளதால் மகான் இருவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்க வாய்ப்புள்ளது.
கோப்ரா
இயக்கம் - அஜய் ஞானமுத்து
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான்
கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த வருடத் துவக்கத்தில் டீசர் வந்த போது அது இன்னும் அதிகமாகியது. விதவிதமான சில பல கதாபாத்திரங்களில் விக்ரம் இருப்பது அதிகம் பேசப்பட்டது. சில பல காரணங்களால் படம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. சீக்கிரம் படத்தை முடித்து வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்பது படக்குழுவினருக்குக் கேட்டிருக்காதா என்ன ?.
மாறன்
இயக்கம் - கார்த்திக் நரேன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - தனுஷ், மாளவிகா மோகனன்
தனுஷ் நடித்து கடந்த வருடம் தியேட்டர்களில் வெளிவந்த 'கர்ணன்' மாறுபட்ட படமாக அமைந்தது. அதே சமயம் ஓடிடியில் வெளிவந்த 'ஜகமே தந்திரம்' ரசிகர்களை ஏமாற்றியது. அதனால், இந்த 'மாறன்' படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தன் முதல் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த கார்த்திக் நரேன் இந்தப் படத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். படம் ஓடிடியில் வந்துவிடுமோ என தனுஷ் ரசிகர்கள் அச்சப்பட்டுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் சீக்கிரமே அது குறித்து அறிவித்தால் நல்லது.
திருச்சிற்றம்பலம்
இயக்கம் - மித்ரன் ஜவஹர்
இசை - அனிருத்
நடிப்பு - தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர்
தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இருவரும் இணைந்த படங்கள் சுவாரசியமான படங்களாக அமைந்தது, அது போலவே இந்தப் படமும் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வெந்து தணிந்தது காடு
இயக்கம் - கௌதம் மேனன்
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - சிலம்பரசன், சித்தி இட்னானி
கவுதம் மேனன், சிலம்பரசன் கூட்டணி என்றாலே ஸ்பெஷல்தான். அவர்கள் இருவரும் முதல் முறை இணைந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஒரு எவர்கிரீன் காதல் படமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. அவர்கள் கூட்டணியில் அடுத்து வந்த 'அச்சம் என்பது மடமையடா' ஏமாற்றினாலும், 'வெந்து தணிந்தது காடு' அறிவிப்பு வந்ததிலிருந்தே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வந்த 'மாநாடு' படத்தின் வெற்றியும் சிம்புவின் இமேஜை அதிகரித்துவிட்டது. கௌதம் மேனன் இயக்கி வரும் சில படங்கள் தாமதமாகி வருகிறது. அப்படி எந்த தாமதமும் இல்லாமல் 'வெந்து தணிந்தது காடு' சீக்கிரமே வந்தால் அதுவே சிம்பு ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
டான்
இயக்கம் - சிபி சக்கரவர்த்தி
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன்
'டாக்டர்' பட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர உள்ள படம். சிவகார்த்திகேயன், பிரியங்கா அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்ன மாதிரியான படமாக இதைக் கொடுக்கப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது. கல்லூரிக் கதை என்பது மட்டும் தெரிந்த விஷயம். சீக்கிரமே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயலான்
இயக்கம் - ரவிக்குமார்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்பு - சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்
சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான படம். பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் முதல் முறை நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம். சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பு. தாமதமானாலும் தரமான படமாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
காத்து வாக்குல ரெண்டு காதல்
இயக்கம் - விக்னேஷ் சிவன்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா
'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன், அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம். கூடுதலாக இந்தப் படத்தில் சமந்தா. படத்தின் டைட்டிலே இது காதல் படம்தான் என்று சொல்லிவிட்டது. எந்த மாதிரியான காதல் படம் என்பதுதான் எதிர்பார்ப்பே. 'ரௌடி' கூட்டணி எப்படியும் ஏமாற்றாது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 'ரௌடி' காதல் போல இந்த 'ரெண்டு' காதல் பேசப்படட்டும்.
விடுதலை
இயக்கம் - வெற்றிமாறன்
இசை - இளையராஜா
நடிப்பு - சூரி, விஜய் சேதுபதி
நகைச்சுவை நடிகரான சூரி முதல்முறையாக நாயகனாக நடிக்கும் படம். அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில், இசை இளையராஜா என ஆரம்பத்திலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். விஜய் சேதுபதி வேறு படத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு. போலீஸ் சம்பந்தப்பட்ட கதை என்பது மட்டுமே தெரிந்த ஒன்று. சீக்கிரம் படத்தை வெளியிடுங்கள் என்பதுதான் படத்தில் இடம் பெற்றுள்ள கலைஞர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மேலே குறிப்பிட்ட படங்கள் 2022ல் வர உள்ள பல படங்களின் பட்டியலில் கொஞ்சம் முதன்மையாக உள்ள படங்கள். இந்தப் பட்டியலில் இடம் பிடிக்காத படங்கள் எதிர்பார்ப்பில்லாத படங்கள் என்று அர்த்தமில்லை. பல்வேறு காரணங்களால் இந்தப் படங்கள் முதன்மையாக உள்ளன, அவ்வளவே காரணம். எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி எல்லா எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி வெற்றி பெற்ற படங்களும் கடந்த காலங்களில் உண்டு என்பதை மறுக்க முடியாது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ தாக்கத்தால் படங்கள் வெளியீடு பெரிதும் பாதிக்கப்பட்டது. பல படங்களால் திட்டமிட்டபடி வெளியாக முடியவில்லை. கால தாமதம் சில படங்களுக்கு காயத்தை ஏற்படுத்திவிடும். இந்த ஆண்டின் ஆரம்பமே கொரானோ தாக்கத்துடன்தான் ஆரம்பமாகியுள்ளது. அதனால், 2022ல் எந்தப் படங்கள் எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாத சூழல்தான் உருவாகியுள்ளது. இருந்தாலும் நல்ல படங்களுக்கான ஆதரவை நமது ரசிகர்கள் எப்போதும் கொடுப்பார்கள். 2022 சினிமாவுக்கான சிரமங்கள் குறைந்து, மறைந்து சிறக்கட்டும்.