சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி! | குழந்தைகள் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தி! | சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் | லக்கி பாஸ்கரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ்! | வெண்ணிலாவாக தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு |
2020ம் ஆண்டு கொரானோ முதல் அலையால் தமிழ் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அது 2021ம் ஆண்டிலும் தொடர்ந்தது. நான்கைந்து மாதங்கள் தியேட்டர்களை முழுவதுமாக மூட வேண்டிய சூழ்நிலை. இரண்டு மாதங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை நடத்த வேண்டிய சூழ்நிலை. அவற்றையும் மீறி வெளிவந்த படங்கள், அதற்கான ரசிகர்களின் ஆதரவு, வரவேற்பு என ஒரு சோதனைக் காலமாகவே இந்த 2021ம் வருடம் அமைந்தது. அவ்வளவு சோதனைகளையும் மீறி சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. சில படங்கள் தரமான படங்கள் என்ற பெயரைப் பெற்றன. சில படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றன. அப்படிப்பட்ட சில படங்களைத்தான் இந்த டாப் திரைப்படங்களில் தேர்வு செய்துள்ளோம்.
தியேட்டர்களில் வெளியானதில் டாப் படங்கள்…
1.மாஸ்டர்
தயாரிப்பு - எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்
வெளியான தேதி - 13 ஜனவரி 2021
'கைதி' வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜுக்கு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவிற்கும், அவருடைய திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கும் இப்படத்தைக் கொடுத்து வெற்றி பெற வைத்தார். விஜய்யை எப்படி காட்டினால் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்களோ அப்படி காட்டினார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது அவரது பெருந்தன்மை. வில்லனாகவும் தனி முத்திரை பதித்தார் விஜய் சேதுபதி. அனிருத்தின் இசையில் பாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்தன. இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இந்தப் படத்திற்குத்தான் முதலிடம் என திரையுலகமே சொல்கிறது.
2. அண்ணாத்த
இயக்கம் - சிவா
இசை - இமான்
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர்
வெளியான தேதி - 4 நவம்பர் 2021
'விஸ்வாசம்' வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சிவாவுக்கு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற விமர்சனம் தான் அதிகம் வந்தது. அதையும் மீறி படம் வசூலித்தது ஆச்சரியம்தான். இதை விட சிறப்பான படத்தைக் கொடுத்திருக்கலாம் சிவா, இதை விட சிறப்பான கதையில் ரஜினிகாந்த் நடித்திருக்கலாம் என்பதுதான் பலரின் கருத்தாக இருந்தது. ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்கும் முதல் வாய்ப்பு இமானுக்குக் கிடைத்தது. படம் வெளிவந்த போது ஓரளவு ரசிக்கப்பட்ட பாடல்கள், படத்தின் ரிசல்ட்டால் பின்னர் வரவேற்பை இழந்தது. இந்த ஆண்டில் வசூலில் இரண்டாவது இடம் பிடித்த படம் இது என திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.
3. டாக்டர்
தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - நெல்சன் திலீப்குமார்
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர்
வெளியான தேதி - 9 அக்டோபர் 2021
'கோலமாவு கோகிலா' படத்திற்குப் பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் படம். கொரானோ இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது இந்தப் படம் தான் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்கும் என தியேட்டர்காரர்கள் பெரிதும் நம்பினார்கள். அதை இந்தப் படமும் சரியாகச் செய்தது. சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் வியாபார ரீதியாக ஒரு புதிய திருப்புமுனையைக் கொடுத்தது. தொடர்ந்து சில தோல்விப் படங்களால் துவண்டு போயிருந்த சிவாவுக்கு இந்தப் படம் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும். அனிருத்தின் இசையில் 'செல்லம்மா' பாடல் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது.
4. கர்ணன்
தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்
இயக்கம் - மாரி செல்வராஜ்
இசை - சந்தோஷ் நாராயண்
நடிப்பு - தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு
நேரம் - 2 மணி நேரம் 39 நிமிடம்
'பரியேறும் பெருமாள்' படம் மூலம் தனது முதல் படத்திலேயே பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய படம். இரண்டாவது படத்திலேயே தனுஷுடன் பணிபுரியும் வாய்ப்பு. அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வெளிவந்த பின் சர்ச்சைகளை ஏற்படுத்திய படம். தனுஷை மற்றொரு பரிமாணத்தில் காட்டிய ஒரு படம். கொரானோ இரண்டாவது அலை தாக்கம் வராமல் இருந்திருந்தால் இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். சந்தோஷ் நாராயணன் இசையில் மண்வாசனையுடன் கூடிய பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன.
5. மாநாடு
தயாரிப்பு - வி ஹவுஸ் புரொடக்ஷன்
இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு - சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி
வெளியான தேதி - 25 நவம்பர் 2021
'மங்காத்தா' படத்திற்குப் பிறகு மிகப் பெரும் வெற்றிக்காக உழைத்து வந்த இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் தன்னுடைய திறமையை அழுத்தமாக நிரூபித்த ஒரு படம். வழக்கமான அலட்டலான சிம்புவை இந்தப் படத்தில் பார்க்காமல் வைத்ததற்கே இயக்குனரைப் பாராட்ட வேண்டும். டைம் லூப் அடிப்படையில் வந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிம்புவின் நடிப்பு ஒரு பக்கம் என்றால் அவருக்கு ஈடாக வில்லன் எஸ்ஜே சூர்யாவும் தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இந்த ஆண்டில் வந்த படங்களில் தனி முத்திரை பதித்தது. இப்படியான வித்தியாசமான படங்களையே தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
6. சுல்தான்
தயாரிப்பு - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - பாக்யராஜ் கண்ணன்
இசை - விவேக் மெர்வின்
நடிப்பு - கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு
நேரம் - 2 மணி நேரம் 37 நிமிடம்
'ரெமோ' படத்தின் மூலம் யார் இயக்குனர் என ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டவர் பாக்கியராஜ் கண்ணன். அவரது இரண்டாவது படம் தான் இது. கொஞ்சம் தெலுங்குப் படம் போல இருந்தாலும் ரசிகர்களுக்கு என்டெர்டெயின்மென்டாக இருந்த படம். கார்த்தியின் ஆக்ஷன் நடிப்பு ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. தமிழ் சினிமாவில் இவ்வளவு அடியாட்களுடன் ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை ஸ்டன்ட்டி நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். தமன் இசையில் 'ஜெய் சுல்தான்' டாப் 10ல் இடம் பிடித்தது. யுவனின் பின்னணி இசை படத்திற்கு பலத்தைச் சேர்த்தது.
7.அரண்மனை 3
தயாரிப்பு - அவ்னி சினிமேக்ஸ், பென்ஸ் மீடியா
இயக்கம் - சுந்தர் சி
இசை - சத்யா
நடிப்பு - ஆர்யா, ராஷிகண்ணா, சுந்தர் சி
வெளியான தேதி - 14 அக்டோபர் 2021
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
'அரண்மனை 1, அரண்மனை 2' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 'அரண்மனை 3' படத்தை இயக்கினார் சுந்தர் சி. அதே அரண்மனை, அதே பேய், வீட்டில் இருக்கும் சில கதாபாத்திரங்கள் என முந்தைய இரண்டு பாகங்களுக்கும், இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இருந்தாலும் பி அன்ட் சி ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போனதால் படம் வசூலித்தது. ஆர்யா இந்தப் படத்தில் எதற்கு நடித்தார் என்பதன் காரணத்தை அவர்தான் சொல்ல வேண்டும். இத்துடன் 'அரண்மனை' சீரிஸை இயக்குனர் சுந்தர் சி நிறுத்திவிட மாட்டாரா என்றுதான் விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஓடிடியில் டாப் படங்கள்…
1.ஜெய் பீம்
தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - த.செ.ஞானவேல்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன்
வெளியான தேதி - 2 நவம்பர் 2021
ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக சர்ச்சையை ஏற்படுத்திய படம். 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனைவுடன் கூடிய படமாக இந்தப் படத்தைக் கொடுத்தார்கள். இயக்குனர் த.செ.ஞானவேல் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இந்தப் படம் இடம் பெறும் அளவிற்கு இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார். ஓடிடியில் 5 மொழிகளில் வெளியான காரணத்தால்தான் இந்தப் படம் எல்லைகளைக் கடந்து வரவேற்பை பெற்றது. தியேட்டர்களில் வெளியானால் கூட இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. சூர்யாவின் நடிப்பும், லிஜோமோள் ஜோஸ் நடிப்பும் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரின் பாராட்டைப் பெற்றது. ஷான் ரோல்டன் பின்னணி இசை படத்திற்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.
2. சார்பட்டா பரம்பரை
தயாரிப்பு - கே 9 ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பா.ரஞ்சித்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன்
வெளியான தேதி - 22 ஜுலை 2021
முந்தைய கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை வைத்து படங்களை எடுக்கும் போது அந்த காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்ற அனுபவம் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் அதுவே அந்தப் படத்தின் வரவேற்புக்கு முக்கிய காரணமாகிவிடும். அப்படி 1970களில் நடந்த சம்பவத்தை படமாக எடுத்து நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றார் இயக்குனர் பா.ரஞ்சித். பல நுணுக்கமான விஷயங்கள் படத்தில் இடம் பெற்று ஒரு தரமான படம் என்ற பாராட்டைப் பெற்ற படம். ஆர்யாவின் நடிப்பு அசத்தல். இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சி, உழைப்பு திரையில் தெரிந்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பசுபதி, ஏனைய நடிகர்கள், நடிகைகள் என பலரும் விமர்சகர்களால் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டார்கள். சந்தோஷ் நாராயணனின் இசை படத்தில் தனி முத்திரை பதிக்கத் தவறவில்லை.
3. மண்டேலா
தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ், விஷ்பெரி பிலிம்ஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - மடோனி அஷ்வின்
இசை - பரத் சங்கர்
நடிப்பு - யோகி பாபு, ஷீலா ராஜ்குமார்
வெளியான தேதி - 4 ஏப்ரல் 2021
நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாற ஆசைப்படுகிறார்கள் என்ற விமர்சனம் கடந்த சில வருடங்களாகவே உண்டு. அப்படி மாறிய சில நகைச்சுவை நடிகர்கள் நடிக்கத் தயங்கும் ஒரு படத்தில், ஒரு கதாபாத்திரத்தில துணிச்சலாக நடித்தற்காக யோகி பாபுவைப் பாராட்டியே ஆக வேண்டும். அறிமுக இயக்குனர் மடோன் அஷ்வின் ஒரு கிண்டலான அரசியல் படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்திவிட்டார். இம்மாதிரியான மாறுபட்ட படங்கள்தான் தமிழ் சினிமாவை மற்றொரு தளத்திற்குக் கொண்டு செல்லும். சினிமா என்பது நடிகர்கள், நடிகைகளை மையப்படுத்தியது அல்ல, அது கதாபாத்திரங்களை, கதையை மையப்படுத்தியது என்பதை இந்தப் படம் அழுத்தமாக உணர வைத்தது. இப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் பரத் சங்கர், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவரையும் பாராட்ட வேண்டும்.
2021ம் ஆண்டில் தியேட்டர்களில் சுமார் 140 படங்கள் வரையிலும், ஓடிடி தளங்களில் 40 படங்கள் வரையிலும் வெளிவந்தன. அத்தனை எண்ணிக்கையிலான படங்கள் வந்தாலும் வழக்கம் போல பத்து, பதினைந்து படங்கள் மட்டும்தான் விமர்சன ரீதியாக பாராட்டையும், வசூல் ரீதியாக லாபத்தையும் பெறுகின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலைதான் நீடித்து வருகிறது. எப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடுகிறதோ அப்போதுதான் தமிழ் சினிமாவின் வளர்ச்சி அதிகமாகும். இதை திரையுலகத்தினர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.