2021 - தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள்...!
31 டிச, 2021 - 07:40 IST
தமிழ் திரைத்துறைக்கு மட்டுமின்றி இந்திய திரைத்துறையே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்திருந்தது. கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட தியேட்டர்கள், பட வேலைகள் அனைத்தும் 2021ல் ஆரம்பமானது. கொரோனா தொற்றும் படிப்படியாக குறைந்தது. 50 சதவீத இருக்கையுடன் திறக்கப்பட்ட தியேட்டர்கள், ஆண்டு இறுதியில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கியது. 2021ம் ஆண்டில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்....
ரஜினி சுகவீனம்ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு படக்குழுவினருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று, தொடர்ந்து ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் அண்ணாத்த படப்பிடிப்பு தடைப்பட்டது. அதோடு ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்னை அவரின் அரசியல் ஆசைக்கு முழுக்கு போட வைத்தது. இடையில் அமெரிக்கா சென்று உடல்நல பரிசோதனை செய்து வந்தார் ரஜினி.
ஷங்கரை துரத்திய பிரச்னைகள்கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, அதன்பின் தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட பிரச்னையால் இந்த படத்தை அப்படியே விட்டு விட்டு தெலுங்கில் ராம் சரண் படத்தை இயக்க ஆரம்பித்தார். இதனால் தயாரிப்பாளர் இவர் மீது வழக்கு தொடர்ந்தார். தற்போது இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டுள்ளது.
இதேப்போன்று தனது அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீ-மேக் செய்ய போவதாக அறிவித்தார் ஷங்கர். இதற்கு அந்நியன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது, போட்டிக்கு தானும் இதே படத்தை எடுக்க போவதாக அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
வடிவேலு ரிட்டர்ன்ஸ்24ம் புலிகேசி பட பிரச்னையால் சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. அந்த பிரச்னையில் சுமூக முடிவு ஏற்பட்டதால் மீண்டும் நடிக்கிறார். முதல்படமாக சுராஜ் இயக்கும் ‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் உருவாகிறது. இப்படம் துவங்கும் சமயத்தில் கொரோனாவால் வடிவேலு பாதிக்கப்பட்டார்.
அஜித் போட்ட அதிரடி உத்தரவுநடிகர் அஜித் தனது பெயருக்கு முன்னால் எந்த பட்டப்பெயரும் போடக்கூடாது என முன்பே அறிவித்தார். ஆனாலும் ரசிகர்கள் கேட்கவில்லை. இதை வைத்து நிறைய சண்டைகளும் நடந்தன. இதனால் இனி தன்னை யாரும் ‛தல' என்று அழைக்க வேண்டாம், அஜித் குமார், அஜித் அல்லது ஏகே என அழைக்கும்படி உத்தரவிட்டார்.
எங்கும் ஒலித்த வலிமைவினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‛வலிமை'. கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் தயாரான இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மட்டுமல்லாது பிரதமர் சென்னை வந்தபோது, அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்தபோது, லண்டனில் கிரிக்கெட் போட்டிகள் நடந்த போது உள்ளிட்ட இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு உலகளவில் டிரண்ட் செய்தனர்.
திரைநட்சத்திரங்களின் டும் டும் * நடிகை ‛கயல்' ஆனந்தி வேலூரை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவரை ஜன.,7ல் திருமணம் செய்தார்.
* 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, தனது படத்தில் நடித்த இயக்குனர் அகத்தியனின் கடைசி மகள் நிரஞ்சனியை காதலித்து பிப்., 25ல் திருமணம் செய்தார்.
* பாடலாசிரியர் சினேகன் நீண்டகாலமாக தான் காதலித்து வந்த நடிகை கன்னிகா ரவியை ஜூலை 29ல் திருமணம் செய்தார்.
* திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகர் விஷ்ணு விஷால், பாட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை ஏப்., 22ல் திருமணம் செய்தார்.
நடிகைகள் ஆத்மியா, யாமி கவுதம், வித்யுலேகா ராமன் உள்ளிட்டோரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
மறைந்த கலைஞர்கள்கொரோனா மற்றும் உடல்நலப்பிரச்சனையால், நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, ஆர்.என்.ஆர்.மனோகர், காமெடி நடிகர் பாண்டு, வெங்கட்சுபா, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, ஜோக்கர் துளசி, ‛நல்லெண்ணெய்' சித்ரா, பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், மாறன் மற்றும் நிதிஷ் வீரா, பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் ஆகியோரின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு பெரும் இழப்பாக அமைந்தது.
யாஷிகாவிற்கு மறுபிறவிநடிகை யாஷிகா ஆனந்த், இரவு பார்ட்டியில் கலந்துவிட்டு நள்ளிரவில் காரில் நண்பர்களுடன் திரும்பியபோது சென்னை ஈசிஆர்., சாலையில் விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி இறந்துவிட, படுகாயம் அடைந்து சில மாதங்கள் படுத்த படுக்கயைாக சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் யாஷிகா.
சமந்தா வாழ்வில் புயல்தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து மணந்த நடிகை சமந்தா, நான்கு ஆண்டுகளில் அவரை பிரிந்தார். இவர் நடித்த ஹிந்தி வெப்சீரிஸான ‛தி பேமிலி மேன் 2'விற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. புஷ்பா படத்தில் இவர் ஆடிய கவர்ச்சி நடனம்... என 2021ல் பரபரப்பு வளையத்தில் இருந்தார் சமந்தா.
ஆர்யாவுக்கு திருப்பம்கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வெற்றிப்படம் கிடைக்காத என ஏங்கி வந்த ஆர்யாவுக்கு 2021 சூப்பராக அமைந்தது. அவர் ஹீரோவாக நடித்த ‛‛டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3' ஆகியவை வெற்றி படங்களாக அமைந்தன. விஷால் உடன் நடித்த ‛எனிமி' படமும் பேச வைத்தது.
நிச்சயம் நடந்தாச்சு... திருமணம் எப்போ?நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதல் பறவைகளாய் சுற்றி வருகின்றனர். இவர்களின் திருமணம் எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் கொரோனா காலத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறி இன்ப அதிர்ச்சி தந்த நயன்தாரா, அதற்கான மோதிரத்தையும் ஒரு பேட்டியில் காண்பித்தார்.
புது ஸ்டுடியோவில் இசைகடந்த 40 ஆண்டுகளாக சென்னை பிரசாத் லேப்பில் இசை பணிகளை மேற்கொண்டு வந்த இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின் சென்னை திநகரில் சொந்தமாக ஸ்டுடியோவை நிறுவி இசை பணிகளை கவனித்து வருகிறார். ரஜினி உள்ளிட்ட பலர் இந்த ஸ்டுடியோவுக்கு சென்று வந்தனர்.
புது டிரெண்ட்பாகுபலி, கேஜிஎப் படங்களுக்கு பின் 2021ல் பான் இந்திய படங்கள் அதிகம் உருவாக தொடங்கி உள்ளன. தெலுங்கு, ஹிந்தியில் உருவான புஷ்பா, 83 ஆகிய படங்கள், நேரடி தமிழ் படங்கள் போன்று தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகின. ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட இன்னும் பல படங்கள் 2022ல் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளன. தமிழிலும் சில படங்கள் பான் இந்திய படங்களாக உருவாகி வருகின்றன.
தேசிய விருதுகள்நடிகர் ரஜினிக்கு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. நடிகர்கள் தனுஷ்(அசுரன்), பார்த்திபன்(ஒத்த செருப்பு), விஜய் சேதுபதி(சூப்பர் டீலக்ஸ்), இயக்குனர் வெற்றிமாறன்(அசுரன்), இசையமைப்பாளர் இமான் (விஸ்வாசம்), மாஸ்டர் நாக விஷால் (கேடி கருப்புதுரை) ஆகியோருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.
ஆஸ்கர் மிஸ்ஸிங்விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த படம் ‛கூழாங்கல்'. வினோத் ராஜ் இயக்கிய இந்த படம், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இறுதியாக தேர்வான 15 படங்கள் பட்டியலில் இந்த படம் இடம்பெறாததால் ஆஸ்கர் வாய்ப்பு நழுவியது.
ஏமாற்றம்இந்தாண்டும் நடிகர் சங்க ஓட்டு எண்ணிக்கை நடத்த முடியாமல் போனது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு மூன்றானது. கடைசியில் சேர்ந்து பணிபுரிவோம் எனக்கூறி ஒருங்கிணைப்பு குழுவை நியமித்தனர். அஜித் மற்றும் கமல் நடித்த படங்கள் இந்தாண்டு வெளியாகவில்லை. ஜெயம்ரவி நடித்த பூமி, சிம்பு நடித்த ஈஸ்வரன் பெரிய பில்டப் உடன் வந்து ஏமாற்றியது.
கவனம் பெற்ற படங்கள்சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், மண்டேலா, இன்ஷா அல்லா போன்ற படங்கள் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நயன்தாரா தயாரித்த கூழாங்கல் படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்று, கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டது. கர்ணன் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.