எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா தாக்கத்தால் பல தொழில்கள் மீண்டு வந்தாலும் சினிமா மட்டும் மீண்டும் பழைய நிலையைப் பெற முடியுமா என்ற சந்தேகம் சினிமா வட்டாரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பைரசி தளங்கள், அதிக டிக்கெட் கட்டணங்கள் என்ற பாதிப்பு இருந்தது. அதன் காரணமாக மக்கள் குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பது குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தாக்கத்தின் முதல் அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டன. அப்போது மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதத்தில்தான் 50 சதவீத இருக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டன.
அந்த இடைப்பட்ட காலத்தில் ஓடிடி தளங்கள் ஒரு விஸ்வரூபம் எடுத்தன. முன்னணி நடிகர்களின் படங்களையும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள். தியேட்டர்காரர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தாலும் அதையெல்லாம் மீறித்தான் படங்கள் வெளிந்தன.
இருப்பினும் தியேட்டர்களில்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் விஜய் காத்திருந்து அவரது 'மாஸ்டர்' படத்தை பொங்கலுக்கு வெளியிட்டார். 50 சதவீத இருக்கைகளிலேயே அப்படம் லாபத்தைப் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வருவதற்குள்ளாகவே 'மாஸ்டர்' படமும் ஓடிடி தளத்தில் 16 நாட்களில் வெளியானது. அதன் பின்னும் தியேட்டர்களில் படம் ஓடியது வேறு கதை.
2020 நவம்பர் மாதம் திறக்கப்பட்ட தியேட்டர்கள் இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் 2021 ஏப்ரல் மாதக் கடைசியில் மூடப்பட்டது. தியேட்டர்களை மூடி இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த இரண்டு மாதங்களில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படம் தான் ஓடிடி தளத்தில் எதிர்பார்ப்புடன் வெளியான படம். ஆனால், அப்படமும் ரசிகர்களை ஏமாற்றியது.
தியேட்டர்களை ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே சமயம் மேலும் சில புதிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட உள்ளதாக அடிக்கடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
ஒரு பக்கம் மக்கள் ஓடிடி தளங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், தியேட்டர்களுக்குப் போய் படத்தைப் பார்க்க வேண்டுமா என ஒருவித சோம்பேறித்தமான மனநிலை வந்துவிடும். வீட்டிலேயே விருப்படி பார்க்க வசதி இருக்கிறதே என்ற எண்ணம் அதிகம் வரும்.
தியேட்டர்களில் தான் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்கள் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்பட்டால் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயமில்லாமல் வர வாய்ப்புள்ளது. அதே சமயம் 18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ளவர்கள் தான் தியேட்டர்களுக்கு அதிகம் வரக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேயில்லை என்பதும் உண்மை.
அப்படியே அவர்கள் தியேட்டர்களுக்கு வந்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் பார்க்கத்தான் ஆர்வம் காட்டுவார்கள். அதை 'மாஸ்டர்' படத்தை 50 சதவீத இருக்கைகளிலேயே வெற்றி பெற வைத்ததை உதாரணமாகச் சொல்லலாம்.
முதல் அலைக்குப் பிறகு விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தைத்தான் தியேட்டர்காரர்கள் அதிகம் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு வீணாகவில்லை. அது போல, இரண்டாவது அலைக்குப் பின்னர் அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை வரவழைக்க முயற்சிக்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் 'வலிமை' படத்தை வெளியிடும் வகையில் அதன் தயாரிப்பாளருக்கு தியேட்டர்காரர்கள் அழுத்தம் கொடுக்கலாம். ஏற்கெனவே ரசிகர்கள் கொடுக்கும் 'வலிமை அப்டேட்'டிற்கே அவர் அசரவில்லை. அதே சமயம், தியேட்டர்காரர்கள் கொடுக்கும் அழுத்தம் அவரை மாற்ற வைக்கும்.
முதல் அலைக்கு 'மாஸ்டர்' மாஸ் காட்டியதென்றால், இரண்டாம் அலைக்கு 'வலிமை' மூலம் தியேட்டர்காரர்களின் 'வலி' பறந்து போகலாமே?.