2025 : மிகவும் குறைந்து போன ஓடிடி நேரடி வெளியீடுகள் | படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி | பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி” | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | 2025ம் ஆண்டின் கடைசி வார வெளியீடுகள் | பராசக்தி உருவாக காரணமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் | மத்திய அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்த நடிகை ஆம்னி! | சண்முக பாண்டியனின் 'கொம்புசீவி' படத்தின் வசூல் நிலவரம் | திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால் | மம்முட்டியின் களம்காவல் படம் சர்வதேச வசூலில் புதிய சாதனை |

நம் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு ஊடகம் என்றால் அது சினிமா என்பது அனைவரும் அறிந்ததே. ஜாதி, மதம், இனம், மொழி, இருப்பவன், இல்லாதவன் என்ற அனைத்து பாகுபாடுகளையும் கடந்து, அனைவரையும் மகிழ்வித்து, ஒன்றிணைக்கும் ஓர் சமூக நல்லிணக்க கூடமாக இன்றுவரை செயல்பட்டுவரும் அரிய பொக்கிஷம்தான் இந்த திரையரங்கம். சினிமா நட்சத்திரங்களின் சாகஸங்களை வெளிச்சத்தில் மின்னச் செய்து, நம் கண்களுக்கு விருந்தளித்து வந்த இந்த திரையரங்குகளும் சில நேரங்களில் கேமராவின் கண்களில் பதிவு செய்யப்பட்டு, சில சினிமாக்களில் ஒரு காட்சிப் பொருளாகவும் வந்து சென்றிருக்கின்றன.
1976ம் ஆண்டு 'இசைஞானி' இளையராஜாவின் அறிமுக திரைப்படமான “அன்னக்கிளி” திரைப்படத்தின் முதல் காட்சியே, படத்தின் நாயகியான 'அன்னம்' கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சுஜாதா, “அழகப்பா டூரிங் டாக்கீஸ்” என்ற ஒரு டூரிங் திரையரங்கில் படம் பார்ப்பது போல் தான் படமே ஆரம்பமாகும், இப்படி எத்தனையோ திரைப்படங்களில் நாயகன், நாயகி திரையரங்கில் சினிமா பார்ப்பது போன்றும், அல்லது குடும்பமாக அமர்ந்து சினிமா பார்ப்பது போன்றும் இடம் பெறும் காட்சிகளில் இந்த திரையரங்குகள் ஒளி வடிவில் ஒரு காட்சிப் பொருளாக வந்து சென்றிருக்கின்றன. ஆனால் ஒரு திரையரங்கமே கதையின் களமாகவும், கதையைச் சுமந்து செல்லும் ஓர் கதாபாத்திரமாகவும் அமைந்தது என்றால் அது இயக்குநரும், நடிகருமான ஆர் பார்த்திபனின் கைவண்ணத்தில் உருவான “ஹவுஸ் புல்” திரைப்படம் என்றால் அது மிகையன்று.
ஒரு சினிமா தியேட்டரின் அதிபராக, மரியாதைக்குரிய வயது முதிர்ந்த ஒரு பெரியவர் கதாபாத்திரத்தில் ஆர் பார்த்திபன் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், படம் ஓடிக் கொண்டிருக்கும் அவரது திரையரங்கில் வெடிகுண்டுகள் வைக்கப்பட, அதிலிருந்து ஆரம்பமாகும் இந்த “ஹவுஸ் புல்” திரைப்படத்தின் கதை. திரையரங்க உரிமையாளரான 'அய்யா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆர் பார்த்திபன், தன் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் பார்வையாளர்கள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்ற முயற்சித்து, இறுதியில் துரதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிப்பில் அவர் இறந்துவிடுவதுபோல் முடியும் இத்திரைப்படம் முழுவதும் மதுரை “ஸ்ரீதேவி தியேட்டர்” என்ற திரையரங்கில் படமாக்கப்பட்டன.
படத்தின் இறுதிக் காட்சி உட்பட ஒரு சில காட்சிகள் மட்டும் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு தியேட்டர் செட்டில் படமாக்கப்பட்டிருந்தது. 1999ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படம், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருந்தது. மேலும் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் ஆகிய இரண்டு பிரிவுகளில் தமிழ்நாடு அரசு சினிமா விருதினையும் வென்றிருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு சினிமா திரையரங்கையே கதையின் களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அது ஆர் பார்த்திபன் நடித்து, இயக்கிய இந்த “ஹவுஸ் புல்” திரைப்படமாகத்தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.