மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் | '96' பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில் | ஜப்பானில் வெளியான 'வேட்டையன்' | கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? |
தமிழக கிராமங்களை எல்லாம் தரமான படப்பிடிப்புத் தளங்களாக மாற்றிய அதிசயத்தை நிகழ்த்தி, அதுவரை தமிழ் திரை ரசிகர்கள் பார்த்திராத கதைக்களங்களுடன் கலையுலகின் களம் கண்டு, களத்து மேட்டினையும், கரிசல் காட்டு மண்ணையும் கதையின் பின்னணியாக்கி, காவியப் படைப்புகள் தந்து கொண்டிருந்த இயக்குநர் பாரதிராஜா, கடலோரமாய் சென்று, காதலையே கவிதையாக்கித் தந்த ஒரு கலைப்படைப்புதான் “அலைகள் ஓய்வதில்லை”. இத்திரைப்படத்தினைப் பற்றிய சில அரிய செய்திகளைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் இயக்குநர் பாரதிராஜா. “பாவலர் கிரியேஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், 'இசைஞானி' இளையராஜாவின் சகோதரர்களில் ஒருவரான ஆர் டி பாஸ்கர் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படம்தான் இந்த “அலைகள் ஓய்வதில்லை”.
இத்திரைப்டத்திற்கான நடிகர்கள் தேர்வின்போது, நாயகன் தேர்விற்காக சென்றவர்களில் நடிகர் பாவா லட்சுமணனும் ஒருவர். இவர் பின்னாளில் வந்த “மாயி” திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவோடு இணைந்து “வாம்மா மின்னல்” என்ற வசனம் பேசி பிரபலமடைந்து, ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வந்தார். அதேபோல் நாயகன் தேர்விற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் இன்னும் ஒரு திரைக்கலைஞர் நடிகர் சுரேஷ். இவரும் அப்போது “பன்னீர் புஷ்பங்கள்” திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்ததால் இந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது.
இதற்குப் பின்புதான் மறைந்த நடிகர் ஆர் முத்துராமன் அவர்களின் புதல்வரான நடிகர் கார்த்திக் இத்திரைப்படத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முரளி என்றிருந்த இவரது இயற்பெயரும் சினிமாவிற்காக கார்த்திக் என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. நடிகை அம்பிகாவின் தங்கை நடிகை ராதா நாயகியாக அறிமுகமான திரைப்படமும் இதுவே. உதயச்சந்திரிகா என்றிருந்த இவரது இயற்பெயரும் ராதா என மாறியது. பாலிடர் ரெக்கார்ட்ஸ் என்ற இசைக் குழுமத்தில் பிராந்திய மேலாளராக அப்போது பணிபுரிந்து வந்த நடிகர் தியாகராஜன், இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.
அறிமுகமான இந்த மூவரும் அவர்களது சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கவில்லை இத்திரைப்படத்தில். நடிகர் கார்த்திக்கிற்காக எஸ் என் சுரேந்தரும், நடிகை ராதாவின் குரலுக்காக பின்னணிக் குரல் கலைஞர் அனுராதாவும், நடிகர் தியாகராஜனுக்காக இயக்குநர் பாரதிராஜாவே பேசி, குரல்களைப் பதிவு செய்திருந்தனர். 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்த நிலையில், “புத்தம் புது காலை பொன்னிற வேளை” என்ற எஸ் ஜானகியின் பாடல் படத்தில் இடம் பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் ஏமாற்றத்தைத் தந்ததாகவே இன்றுவரை பார்க்கப்படுகின்றது.
அந்நாளில் இயக்குநர் மகேந்திரன் இயக்கவிருந்த “மருதாணி” என்ற படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த இந்தப் பாடல், பின் “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தின் இசைத் தட்டுகளில் மட்டும் பதிவாகி, படத்தில் இடம் பெறாமல் போகவே, வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இளையராஜாவின் இசையில் 2014ம் ஆண்டு வெளிவந்த “மேகா” என்ற திரைப்படத்திற்காக மறுசீரமைப்பு செய்து, இந்த “புத்தம் புது காலை” பாடல் அந்தப் படத்தில் சேர்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரான இந்த “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படம் இரண்டு மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்ததோடு, அன்றைய காலகட்டங்களில் வெளிவந்த பல காதல் திரைப்படங்களுக்கு ஒரு முன்மாதிரி திரைப்படமாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க இயலாது.