தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் முன்னணியில் வரத் தடுமாறும் நடிகர்களில் சிபிராஜும் ஒருவர். அவர் கதாநாயகனாக அறிமுகமாகி 22 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்னும் ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்கத் தடுமாறி வருகிறார். ஆனால், அவரது அப்பா சத்யராஜ் 70 வயதிலும், தமிழ் சினிமாவில் கடந்த 47 வருடங்களாக ஒரு நிலையான இடத்தில் உள்ளார். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சிபிராஜ் நடித்து கடைசியாக 2022ம் ஆண்டு 'வட்டம்' என்ற படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு முன்பு தியேட்டர்களில் வெளிவந்த 'மாயோன்' படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.
2014ல் வெளிவந்த 'நாய்கள் ஜாக்கிரதை', 2016ல் வெளிவந்த 'ஜாக்சன் துரை' ஆகியவைதான் கடந்த பத்து வருடங்களில் சிபியின் வெற்றிப் படங்கள். அதன்பின் வந்த ஐந்தாறு படங்கள் குறிப்பிடும்படியாக அமையவில்லை.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த வாரம் அவர் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகிறது. படம் நன்றாக வந்திருப்பதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்குப் பிறகாவது இடைவெளி விடாமல் சிபிராஜ் நடித்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கலாம்.